தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - P10424-வீமன்

  • 3.5 வீமன்

    பாண்டவர் ஐவருள் இரண்டாமவன். தோள்வலி மிக்கவன். சிறு வயது முதலே துரியோதனனைத் தன் எதிரியாகக் கருதி வந்தவன். தருமன், பாஞ்சாலியைப் பணயம் வைத்ததும் முதலில் சினம் கொள்பவன் இவனே. அதேபோல் சபதம் மேற்கொள்பவனும் வீமனே.

    3.5.1 வீமனின் கோபம்

    பணயப் பொருளாகத் தன்னையும் தம்பியரையும் வைத்து இழந்தது குறித்து, வீமன் மிகவும் கவலையுற்றுத் தருமனைப் பார்த்துச் சுடுசொற்களை வீசினான்.

    சூதர் மனைகளிலே - அண்ணே
    தொண்டு மகளிருண்டு
    சூதர் பணயம் என்றே - அங்கு ஓர்
    தொண்டச்சி போவதில்லை

    என முழங்குகிறான் வீமன்.

    தவறு செய்துவிட்டாய் - அண்ணே
    தருமம் கொன்றுவிட்டாய்

    என்றும் குறிப்பிடுகின்றான். ‘பாஞ்சாலியை நாம் வெறும் சோரத்தினால் (கள்ளத்தால்) அடையவில்லை. சூதாட்டத்தில் வெற்றி பெறவில்லை. வீரத்தினால் வென்றோம் என்று தருமனைப் பார்த்துக் கேட்கிறான் வீமன்.

    நீங்கள் நாட்டையெல்லாம் சூதில் பணயமாக வைத்தீர்கள். நாங்கள் பொறுத்தோம்! எங்களைப் பணயப் பொருளாக வைத்தீர்! அடிமையாக்கினீர். அதையும் பொறுத்தோம். ஆனால்,

    துருபதன் மகளை - திட்டத்
    துய்மன் உடன் பிறப்பை
    இருபகடை என்றாய் - ஐயோ
    இவர்க்கு அடிமை என்றாய்

    எனத் தருமனை நோக்கிக் கடும்சொற்களை வீசினான். மேலும், சகாதேவனைப் பார்த்து,

    இது பொறுப்பதில்லை - தம்பி
    எரிதழல் கொண்டுவா
    கதிரை வைத்திழந்தான் அண்ணன்
    கையை எரித்திடுவோம்

    என்று தருமன் செயலை நினைத்துப் பொறுக்க முடியாதவனாக வீமன் சினந்து இவ்வாறு பேசினான்.

    3.5.2 வீமனின் சபதம்

    நிலைகுலைந்து அழுது புரளும் பாஞ்சாலியைப் பார்த்துத் துஷ்டனான துச்சாதனன் தீய சொற்களைக் கூறிக்கொண்டே அவளது ஆடையைக் களைகிறான். கண்ணனது அருளால் மேகக் கூட்டம் போலத் துகில் பெருத்து வருவதைக் கண்ட துச்சாதனன் கீழே விழுந்தான். இந்நிலையில் வீமன் மிகவும் கோபங்கொண்டு சபதம் செய்கிறான்.

    இங்குத் தேவர்கள் மீது ஆணை, பராசக்தி மீது ஆணை, பிரமதேவனின் மீது ஆணை, கண்ணன் மீது ஆணை என இறைப் பெருமக்கள் மீது ஆணையிட்டு, போர்க்களத்தில் துச்சாதனனையும், துரியோதனனையும் கொன்று அவர்களது இரத்தத்தைக் குடிப்பேன். இது உலகில் நடக்கும். அனைவரும் காண்பீராக! என்று சபதம் எடுத்தான்.

    3.5.3 வீமனின் கோபம் தணிதல்

    தருமன் மீது கடுங்கோபம் கொண்ட வீமனைப் பார்த்து அர்ச்சுனன் பேசுகிறான்.

    வீமனே! என்ன வார்த்தை சொன்னாய்? யார் முன்னே இதைச் சொன்னாய்? சினம் பொருந்திய நீ உனது அறிவைப் புதைத்ததாலே மூன்று உலக நாயகனான தருமனைச் சினந்து இவ்வாறு பேசுகிறாய். கோபம் கொள்ளாதே.

    தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
    தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை
    மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
    வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்
    கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று
    கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம்மாறும்
    தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
    தனுவுண்டு காண்டீபம் அதன்பேர்

    என்று “தருமத்தின் வாழ்வைச் சூது விழுங்கும் ஆனால், தருமம் மறுபடியும் எப்படியாவது வெற்றி பெற்றே தீரும். இது இயற்கை உண்மை. அதுவரை நாம் பொறுமையாக இருப்பதே நல்லது. கோபம் வேண்டாம். யார் மேலும் குற்றமில்லை”, என்று சொல்லி, வீமனின் கோபத்தைத் தணித்தான் அருச்சுனன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-07-2018 13:23:07(இந்திய நேரம்)