Primary tabs
-
3.6 விதுரன்
மன்னன் திருதராட்டினனுக்குத் தம்பியாக இருந்தாலும், அமைச்சர் பொறுப்பு ஏற்றவன். நீதிநெறி கற்றவன். நீதியை நிலை நாட்டுவதில் உறவு முறைகளைப் பார்க்காதவன். அதனாலேயே துரியோதனனால் வெறுக்கப்பட்டவன்.
சூதாட்ட மன்றத்தில் தருமனிடம் உள்ள செல்வம் அனைத்தையும் சகுனி வென்று விடுகிறான். அதன்பிறகு நாட்டைப் பணயமாக வைத்து விளையாடலாம் எனச் சகுனி சொல்கிறான். இதனைக் கேட்ட விதுரன் அதிர்ச்சியடைந்து, ‘இதனால் கௌரவர் குலம் அழியும்’ என்று குறிப்பிட்டான். சூதாட்டம் இனித் தேவையில்லை, நிறுத்த வேண்டும் என்றான். தன்னுடைய அண்ணன் திருதராட்டிரனுக்கும் தெரிவித்தான். இதனைக் கேட்ட துரியோதனன், கண்களில் தீப்பொறி பறக்க மிகவும் கோபம் கொண்டு விதுரனைத் திட்டுகிறான்.
‘எங்களிடத்தில் உள்ள செல்வத்தை அனுபவித்துக் கொண்டு; பாண்டவருக்காகப் பரிந்து பேசுகிறாயே? உன்னைச் சபையில் வைத்ததே பெருங்குற்றம்’ என்றான். அன்பில்லாத பெண்ணுக்கு எவ்வளவுதான் நன்மை செய்தாலும் வாய்ப்பு வரும் பொழுது கணவனை விட்டு அகன்று விடுவாள். அதுபோல நீ இருக்கிறாயே என்று துரியோதனன் பழித்தான். அதற்கு விதுரன், ‘உன்னை நல்வழிப்படுத்த முயன்றேன். உன் அவையில் என்னைப் போன்றவர்கள் இருத்தல் கூடாது. குலம் கெட்ட நீசர்கள், மூடர்கள், பித்தர் போன்றோர் மட்டுமே இருத்தல் முடியும். உன் சாவைத் தடுத்திடவே உரைத்தேன். இனி எவ்விதப் பயனும் இல்லை’ எனத் தன் தலைகவிழ்ந்தபடி இருந்தான்.