தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - P10424-பாஞ்சாலி

  • 3.4 பாஞ்சாலி

    பாஞ்சால தேசத்தினர் பெற்ற தவப்பயன் தான் பாஞ்சாலி. பஞ்சபாண்டவரின் உயிர் போன்றவள்; அருள் தன்மையுடன் ஒளிவீசுபவள்; ஓவியம் போன்றவள்: பூமியில் உலவும் செல்வமகள்; எங்கும் தேடிக் கிடைப்பதற்கரிய திரவியம் பாஞ்சாலி.

    படிமிசை இசையுறவே - நடை
    பயின்றிடும் தெய்வீக மலர்க்கொடியைக்
    கடிகமழ் மின்னுருவை - ஒரு
    கமனியக் கனவினைக் காதலினை
    வடிவுறு பேரழகை - இன்ப
    வளத்தினைச் சூதினிற் பணயம் என்றே

    (கமனியக் கனவு = ஆகாயக் கனவு)

    என வரும் பாடலில் பாரதி குறிப்பிடுகிறார். காப்பியத்தின் தலைமை மாந்தர் பாஞ்சாலியே. அடிமைத் தளையைத் தகர்க்க எழும் பாரதச் சக்தியாகப் பாரதியால் படைக்கப்பட்டவள் பாஞ்சாலி.

    3.4.1 பணயப் பொருள்

    சகுனியின் சதியால் பணயப் பொருளாக வைக்கப்பட்டவள் பாஞ்சாலி.

    பாஞ்சாலியைப் பணயமாக வைத்து விளையாடிய செயலைப் பாரதி,

    நல்யாகத்தில் படைக்கப்படுகின்ற வேள்விப் பொருளை, எச்சில் தேடியலையும் நாய்க்குமுன் அது மென்றிட வைப்பதைப் போன்று உள்ளது என்றும்,

    நல்ல உயரமுள்ள, அகலமுள்ள பொன் மாளிகையைக் கட்டி, அதில் பேயினைத் தேடிக் கண்டுபிடித்துக் குடியமர்த்துவது போல உள்ளது என்றும் கூறுகிறார்.

    செருப்புக்குத் தோல் வேண்டியே - இங்குக்
    கொல்வரோ செல்வக் குழந்தையினை
    விருப்புற்ற சூதினுக்கே - ஒத்தபந்தயம்
    மெய்த்தவப் பாஞ்சாலியோ?

    என, செருப்புச் செய்வதற்குத் தோல் தேவையென்பதால் அன்புமிக்க குழந்தையைக் கொல்வதற்குத் துணிவது போன்று உள்ளது என்கிறார் பாரதியார்.

    3.4.2 எதிர்ப்புக் குரல்

    விதியின் வலிமையால் தருமன், சகுனியுடன் சூதாடியதால் நாடிழந்து நல்ல பொருள் இழந்து, தம்பியரை இழந்து, இறுதியில் பாஞ்சாலியை இழந்து விடுகிறான். துரியோதனன் தன் தேர்ப்பாகனை அழைத்து, பாஞ்சாலியைச் சபைக்கு அழைத்து, வருமாறு சொன்னான். தேர்ப்பாகனும் சென்று பாஞ்சாலியைப் பணிந்து அழைத்தான். அப்போது பாஞ்சாலி சீறிப்பாய்ந்தாள்.

    யார் சொன்ன வார்த்தையடா?
    சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
    மாதர் வருதல் மரபோடா? யார் பணியால்
    என்னை அழைக்கிறாய்?

    என்று தேர்ப்பாகனைப் பார்த்துக் கேட்டாள் பாஞ்சாலி.

    நான் துருபத மன்னனின் மகள். சூதில் தோற்றுப் போன பின்னர் என்னைத் தாரமாக்கிக் கொள்ளும் உரிமை அவர்க்கில்லை.

    கௌரவர் வேந்தர் சபை தன்னில் - அறம்
    கண்டவர் யாவரும் இல்லையா? மன்னர்
    சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே - அங்கு
    சாத்திரம் செத்துக் கிடக்குமோ?

    எனச் சொல்லி, தேர்ப்பாகனை மீண்டும் திருப்பியனுப்புவதைக் காணலாம்.

    பழம்பெரும் பாரதக் கதையில் பாஞ்சாலி எதிர்த்துப் பேசுபவளாகக் காணப்படவில்லை. ஆனால் பாரதியார், பாஞ்சாலியைக் கணவன்மார்களையும், கௌரவர்களையும் எதிர்த்துப் பேசுபவளாகப் படைத்துப் பெண்ணுரிமையை நிலைநாட்ட விரும்புகிறார்.

    3.4.3 கண்ணனை வேண்டுதல்

    அடிமையாக்கப்பட்ட பாஞ்சாலியைத் துச்சாதனன் பலர் இருக்கும் அவையில் இழுத்துவந்து ஆடையைக் களைய முற்படுகிறான். அந்நேரத்தில், அனைவராலும் கைவிடப்பட்ட, காப்பாற்றப்படாத சூழ்நிலையில் பாஞ்சாலி கண்ணனை இறைஞ்சி வேண்டுகிறாள்.

    முதலையின் வாயில் அகப்பட்ட யானையின் கூக்குரலைக் கேட்டு அருள் புரிந்தவனே! சக்கரம் ஏந்தி நிற்பவனே! சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்தி நின்று போரிடுபவனே! நீ அனைத்துத் துக்கங்களையும் அழித்திடுவாய். தொண்டர்களின் கண்ணீரைத் துடைத்திடுவாய்!

    வானத்துள் வானாக இருப்பவனே! தீயிலும் மண்ணிலும் காற்றிலும் எல்லாவற்றிலும் நிறைந்து இருப்பவனே! அறிவுக்கும் எட்டாத பொருளே! எந்தன் சொல்லினைக் கேட்டு எனக்கு அருள் புரிவாய்.

    இரணியன் உடல் பிளந்த கண்ணனே! உன்னடி தொழுது நான் அடைக்கலம் புகுந்தேன்! எனப் புலம்புகிறாள்.

    வாக்கின் தலைவனை (பிரமனை) ஆட்கொண்ட வலிமை உடையவனே! எந்தையே! அருட்கடலே! இங்கு நூறு பேரான கௌரவர்களின் கொடுமையினின்று என்னை மீட்பாயாக! வையகம் காப்பவனே! மணிவண்ணனே! என் மனச்சுடரே! நின் தாமரை மலர்களைச் சரண் புகுகின்றேன் என வேண்டினாள் பாஞ்சாலி, கண்ணன் அருள் புரிந்தான். அந்நேரத்தில் துச்சாதனன், பாஞ்சாலியின் துகிலை உரிய உரிய அவளுக்குத் துகில் மலைபோலக் குவிந்து கொண்டே இருந்தது. அவனால் முடியாமல் மயங்கிக் கீழே விழுந்தான்.

    3.4.4 வீடுமனின் தேற்றல்

    ‘மன்னர் சபைதனில் என்னைப் பிடித்து இழுத்துப் பலபட இழிசொற்களால் பேசுகின்ற துரியோதனனை, நிறுத்தடா? என்று சொல்ல யாருமில்லையா?’ எனக் கேட்ட பாஞ்சாலிக்கு, தகுதியால் உயர்ந்தவனான வீட்டுமன் எழுந்து, பாஞ்சாலியே! உன்னைத் தருமன் சூதாடித் தோற்றான்; நீயோ, வாதாடி அவன் செய்கை தவறு என்கிறாய். சூதிலே வல்ல சகுனி தன் திறத்தால் உன் மன்னனை வீழ்த்தி விட்டான். உன்னையும் பணயப் பொருளாக வைத்து இழந்தது தவறு என்று சொல்கிறாய். பண்டைய கால நெறிப்படி நீ சொல்வது சரி. அந்நாளில் ஆணும் பெண்ணும் சமமாக இருந்தனர். ஆனால் பிற்காலத்தில் அது மறைந்து போய்விட்டது. இப்போதுள்ள சாத்திரங்களின்படி ஆணும் பெண்ணும் சமமில்லை. இப்போது ஒருவன் தன் மனைவியை விற்கவும் தானமாகக் கொடுக்கவும் உரிமையுண்டு. இது முழுவதும் விலங்கு வாழ்க்கை. எனவே தருமன் உன்னை அடிமையாக்க உரிமை கொண்டவன். இங்கே நடக்கும் செய்திகளைக் கண்டால் கல்லும் நடுங்கும்; விலங்குகளும் கண்புதைக்கும். இங்கே நடைபெறும் செய்கைகள் அநீதியானவை. சாத்திரத்தில் சொல்லிய நெறிகளையும் வழக்கத்தையும் நீ கேட்பதனால், அவை உன்சார்பாகக் கேட்க யாரும் இல்லை. நானும் தீய செயல்களைத் தடுக்கும் திறமில்லாதவனாகவே இருக்கிறேன் என்று சொல்லித் தலை கவிழ்ந்து அமர்ந்தான் வீடுமன்.

    3.4.5 பாஞ்சாலியின் சபதம்

    இறுதியில் பாஞ்சாலி சபதம் செய்தாள். ஆம் பராசக்தி மீது ஆணையிடுகின்றேன். பாவி துச்சாதனனை என் கணவன் வீமன் கொன்ற பின்னர் அவன் உடம்பிலிருந்து ஊறியெழும் ரத்தத்தையும் பாழ்பட்டுப் போன துரியோதனன் உடம்பு ரத்தத்தையும் கலந்து என் கூந்தலில் பூசுவேன். அதன் பின்னரே என் கூந்தலில் நறுநெய் பூசி என் கூந்தலை முடிப்பேன். அதுவரையில் என் கூந்தலை முடிக்கமாட்டேன் என்று பாஞ்சாலி சபதம் செய்தாள். இவ்வாறு இம்மூவரின் சபத உரைகளைக் கேட்டவுடன் தேவர்கள் ‘ஓம்’ என்று உரைத்தனர். ஐம்பெரும் பூதங்களும் இந்தப் புவி தருமனுக்கே எனச் சாட்சியுரைத்தன என்று சபத உரைகளை முடிக்கிறார் பாரதியார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    பாஞ்சாலி சபதம் - நூல்குறிப்பு எழுதுக.
    2.
    பாரதியார் - சிறுகுறிப்பு வரைக.
    3.
    பாஞ்சாலி சபதத்தின் காப்பிய அமைப்பினை எழுதுக.
    4.
    சகுனியின் சதி குறித்து எழுதுக.
    5.
    தருமனின் மனத்தைச் சகுனி எவ்வாறு மாற்றினான்?
    6.
    பாஞ்சாலியைப் பணயப் பொருளாக வைத்துத் தோற்றதனைப் பாரதியார் எவ்வாறு கண்டிக்கிறார்?
    7.
    தேர்ப்பாகனைப் பார்த்துப் பாஞ்சாலி பேசிய மறுப்புரை யாது?
    8.
    பாஞ்சாலி செய்த சபதம் யாது?
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 11:53:15(இந்திய நேரம்)