தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - P10424-சகுனி

  • 3.3 சகுனி

    பாஞ்சாலி சபதத்தில் மையப் பாத்திரமாகத் திகழ்பவன் சகுனி. கதையின் திருப்பு முனைக்கும் கதை நிகழ்ச்சிகளின் இயக்கத்திற்கும் முக்கியமாக இருப்பவன் சகுனி.

    தனது புத்தி கூர்மையால் சதி திட்டம் தீட்டுவதில் வல்லவனாகக் காணப்படுகிறான். குடும்பத்திலோ, நாட்டிலோ சதித்திட்டம் என்ற உடனே நம் கண்முன் வந்து நிற்பவன் சகுனி. அந்த அளவுக்கு தன் சதித் திட்டத்தால் பிரபலம் ஆனது சகுனி எனும் பாத்திரப்படைப்பு.

    3.3.1 சகுனியின் சதி

    பாண்டவர்களின் வளர்ச்சியினைப் பொறுக்கமாட்டாதவனான துரியோதனன், தன்னுடைய மாமன் சகுனியிடம் தன் மனக்கருத்தை வெளிப்படுத்துகிறான். சகுனியும் சந்தோஷமாகச் சதித்திட்டம் ஒன்றினைச் சொல்கிறான். புதிதாக ஒரு மண்டபம் கட்டி, அது தெய்வ நலன்கள் உடையதாக எடுத்துச் சொல்லி, அதனைப் பார்வையிடப் பாண்டவரை அழைத்து வரவேண்டும். அதன்பின்பு அவர்களைச் சூதாட்டத்தில் ஈடுபடும்படி அழைத்து ஒரு நாழிகையிலேயே அவர்களது செல்வத்தை வென்றிடுவோம் என்றான். மேலும் போரினால் பாண்டவரை வெல்லமுடியாது என்றும் சூதினால் தான் வெல்லமுடியும் என்று துரியோதனனுக்கு ஆலோசனை சொன்னான் சகுனி. இதனைக் கேட்ட துரியோதனன் மகிழ்ந்து சகுனியை வணங்கினான். தீய சக்தியின் திரண்ட உருவமாகச் சகுனி காணப்படுகிறான். தீயனவற்றையே தொழிலாகக் கொண்டு ‘கூட இருந்தே குழிபறிப்பது போலக்’, கௌரவர்களான துரியோதனனையும் துச்சாதனனையும் அழிக்கும் எண்ணங்கொண்டவனாகச் சகுனியின் சதித்திட்டம் அவனைக் காட்டுகிறது. இந்தத் தீய செயல்களால் தன்னையும் இழந்து விடுகிறான் என்பது கண்கூடாகக் காணமுடிகிறது.

    3.3.2 தருமனின் மனத்தை மாற்றியமை

    தன்னுடைய நாட்டினைப் பணயப் பொருளாக வைத்திழந்த தருமனைப் பார்த்துச் சகுனி, தருமனே! செல்வத்தையும் நாட்டையும் இழந்துவிட்டாய். இனி எப்படிப் பிழைப்பாய். உனது தம்பியர் நால்வரையும் பணயம் வைத்துச் சூதாடினால் இதுவரை இழந்ததை எல்லாம் மீட்டு விடலாம் என்றான். துரியோதனனும் அவ்வாறே சொன்னான். தம்பியர் முகத்தில் கவலை படரத் தொடங்கியது. வீமன் கடுங்கோபம் கொண்டான். தருமன், தம்பியரைப் பணயப்பொருளாக வைத்து விளையாடத் தொடங்கி முதலில் நகுலன், சகாதேவனை வைத்து இழக்கிறான். அடுத்த நிலையில் தருமன் மிகுந்த மனவேதனைப்படுகிறான். சூதாட்டத்தை இத்துடன் நிறுத்திவிடலாம் என நினைக்கிறான். அந்நேரத்தில் சகுனி, தருமனைப் பார்த்து, தருமனே! “நகுலனும் சகாதேவனும் வேறொரு தாய்க்குப் பிறந்தவர்கள். அதனால் அவர்களைச் சூதாடி இழந்துவிட்டாய். வீமனும் அருச்சுனனும் உன்னைப் போன்று குந்தியின் பிள்ளைகள் என்பதால் அவர்களைப் பணயப் பொருளாக வைக்கவில்லையா? என்று கேட்கிறான். அதனைக் கேட்ட தருமனுக்குக் கோபம் வந்தது. “சூதாட்டத்தில் தான் இழந்துள்ளோம்; ஒற்றுமையை நாங்கள் இழந்துவிட வில்லை” என்று சொல்லி இருவரையும் பணயப் பொருளாக வைத்து விளையாடச் சம்மதித்து இழக்கிறான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:02:06(இந்திய நேரம்)