தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Diploma Course - P10424-தொகுப்புரை

  • 3.8 தொகுப்புரை

    பாண்டவர்கள் வாழ்க்கையை எந்த வழியாலும் கெடுத்திட எண்ணங் கொண்டவனாகத் துரியோதனன், சூதும் பொய்யும் உருவான சகுனி மூலம் பாண்டவர்களைச் சூதாட்டத்தில் ஈடுபடுத்தி, நாட்டையும் செல்வத்தையும் அபகரித்ததோடு மட்டுமல்லாமல், ஐவரையும் பாஞ்சாலியையும் பணயப் பொருளாக வைத்து அடிமைப்படுத்தினான். அடிமையாக்கப்பட்ட பாஞ்சாலியைச் சபைதனில் இழுத்துவரக் கட்டளையிடுகிறான். அப்படியே துச்சாதனன் அந்த இழிசெயலைச் செய்கிறான். அந்நேரத்தில் பாஞ்சாலி மிகவும் கோபங் கொண்டவளாகப் பேசுகிறாள். (இந்த இடத்தில் பெண்களின் உரிமையைப் பெண் மூலமாகவே கேட்க வைத்து ஆணினத்தின் அதிகாரத்தைக் கேள்வி கேட்பதாகப் பாரதி பாஞ்சாலி வழிநின்று பேசுகிறார்.)

    சாத்திரங்களில், இதிகாசங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறார்.

    பாஞ்சாலியைத் துச்சாதனன் முடிபற்றித் தெருவில் இழுத்து வரும்போது, வீதிமருங்கிலும் நின்று வேடிக்கை பார்த்த மக்களை நொந்து ‘வீரமிலா நாய்கள்’ என்றும், அவர்கள் அழுது புலம்புகின்ற அந்தச் செயலை; அந்தப் பயனில்லாத புலம்பலைப் ‘பெட்டைப்புலம்பல்’ என்றும் சாடுகிறார் பாரதியார்.

    சபைதனில் பெண்மையை மானபங்கம் செய்யும் போது, பெண்ணின் வாயால் பெண்ணரசினைப் பற்றிக் கேட்கிறார் பாரதியார்.

    தன்னுடைய கணவன்மார்களைப் பார்த்து வேதனைப்பட்டு, ‘என்னைப் பணயத்தில் வைத்து விளையாட உங்களுக்கு என்ன உரிமை’ என்று கேட்க வைக்கிறார் கவிஞர்.

    இறுதியாக, காவியத்தில் மானிட சமுதாயத்தில் நம்பிக்கை வைத்தது போதும் என்று நினைத்து இறைவனிடம் வேண்டுகிறாள். காப்பாற்றப்படுகிறாள். பின்னர், தன்னை அவமானப்படுத்தியவர்களைக் கொன்று அதன் மூலமாகவே அவலத்தினுக்கு விடிவுகண்டு, தன் கூந்தலை முடிப்பதாகச் சபதம் ஏற்க வைத்துக் கதையை முடித்துள்ளார் பாரதியார்.

    பாரத நாட்டின் விடுதலையையும் பெண் விடுதலையையும் ஒன்றாக நினைத்துக் காப்பியத்தை நிறைவு செய்கிறார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    தருமனைப் பார்த்து வீமன் கோபங்கொண்டது எதனால்?
    2.
    வீமனின் கோபத்தை அருச்சுனன் தணித்த விதத்தினைக் குறிப்பிடுக.
    3.
    விதுரன் எத்தகைய பண்பு உள்ளவன்?
    4.
    பஞ்சாலி சபதத்தில் கூறப்படும் வருணனைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 11:55:20(இந்திய நேரம்)