6.0
பாட முன்னுரை
தமிழில்
ஓர் இலக்கிய வகைமை வெற்றியடையும் போது,
அதிலிருந்து பல இலக்கிய வகைமைகள்
வெவ்வேறு
வடிவத்தில் தோன்றுகின்றன. பிறமொழி இலக்கியத்தின்
தாக்கத்தால் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமை வளர்ச்சியடைந்து,
சொல்லும் திறனிலும், நடையிலும் வேறுபட்ட
புதிய
நோக்கிலான சிற்றிலக்கியங்கள் தோன்றத் தொடங்கின. சங்க
காலத்திலேயே சிற்றிலக்கிய வகைமை வளர்ச்சி பெற்றதற்கான
நிலை ஏற்பட்டது. பரிசில் பெற்றுத் திரும்பி வரும் புலவன்,
பரிசில் பெறச் செல்லும் புலவனை ஆற்றுப்படுத்தும் போக்கு
ஆற்றுப்படை எனும் இலக்கிய
வகைமையால் வளர்ந்தது
எனலாம். சங்க கால மக்களின் நெறியாக நாம் காண்பது
அவர்களின் தேர்ந்த போர் நெறியாகும். பின்னாளில் பரணி
எனும் பெயர் பெற்றுத் திகழ்ந்த இலக்கிய வகைமை பரணி
என்ற நட்சத்திரத்தோடு தொடர்பு படுத்தப்பட்டது.
சங்க
காலத்தில் இருந்த புறத்திணை மரபுகள்,போர் சார்ந்த நெறிகள்,
களவேள்வி, பின்தேர்க் குரவை, வாள் மங்கலம் ஆகியன
ஒன்றிணைந்து பின்னாளில் பரணி என்ற சிற்றிலக்கிய
வகைமையாக வளர்ச்சி பெற்றது.மண் சார்ந்தே மக்கள் சங்க
காலத்தில் பிரிக்கப்பட்டனர். மலை சார்ந்த இடமும் மலையும்
குறிஞ்சியானது. அங்கு வாழும் குறத்தியர்
வாழ்வியல்
பின்னாளில் குறவஞ்சியாய் மாற்றம்
பெற்றது. மக்களின் மிக
எளிமையான பேச்சு வழக்குச் சார்ந்த மொழியை நம்முடைய
பள்ளு இலக்கியங்களில்
நம்மால் காண முடிகிறது.
தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பே தமிழில் இலக்கிய
வகைமை வளர்ச்சி பெற்றிருந்தாலும், மேற்கணக்கு
நூல்களென்றும், கீழ்க்கணக்கு நூல்களென்றும்
வகுக்கப்பட்டது
பின்னாளில்தான். தண்டியாசிரியர் காப்பிய வகைமை பற்றிய
இலக்கணம் வகுத்தாலும் சிற்றிலக்கியம் பற்றிய வகைமை
அண்மைக் காலத்தில் ஏற்பட்டதாகும். ஆற்றுப்படையாய்
உருக்கொண்ட தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் கி.பி. எட்டாம்
நூற்றாண்டு முதல் வளரத் தொடங்கிப் பல்கிப் பெருகின.
கோவை, உலா, பரணி, பிள்ளைத்தமிழ்,
அந்தாதி,
கலம்பகம், தூது, குறவஞ்சி, பள்ளு, மடல், மாலை எனச்
சிற்றிலக்கியங்கள் புதிய நோக்கோடும் புதிய போக்கோடும்
தோன்றி வகைமை வளர்ச்சி உண்டாயிற்று.
அவற்றில் இடம் பெற்ற உலகியல் கடந்த
கற்பனை
நிகழ்ச்சிகளும், உயர்வு நவிற்சி அணிகளும் படிப்போருக்கு
இன்பமூட்டியதால், மிக எளிமையாய் அவை வளர்ந்தன.
நாட்டுப்புற இலக்கியங்களும் சிற்றிலக்கிய
வளர்ச்சிக்குப்
பேருதவி புரிந்தன. பலகாலம் தமிழகத்தில் நாட்டுப்புற
இலக்கியமாக இருந்த பல சிற்றிலக்கியங்கள், தனித்ததொரு
சிற்றிலக்கிய வகைமையாக மாறியதை நம்மால் உணர முடிகிறது.