தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பரணி இலக்கிய வகையின் வளர்ச்சி

  • 6.3 பரணி இலக்கிய வகையின் வளர்ச்சி

        தொல்காப்பியத்தின்     புறத்திணையியல் பரணி இலக்கியத்தின் வேராக அமைகிறது. போர்க்களத்தைப் பாடும் பொருண்மை உடைய இலக்கிய வகையே பரணி எனப்படும்.

    ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
    மான வனுக்கு வகுப்பது பரணி
        - (இலக்கண விளக்கப் பாட்டியல்)

        போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை யார் வெல்கிறாரோ அந்த மாவீரனுக்கு வகுப்பது பரணி ஆகும் என இலக்கண விளக்கப் பாட்டியல் பரணிக்கு இலக்கணம் வகுக்கிறது.

        பரணி என்பது நட்சத்திரத்தின் பெயராகும். பரணி  நாளில் கொண்டாடும் போர் வெற்றி விழாவைச் சிறப்பித்துப்  பாடும் இலக்கிய வகையே பரணி எனப்பட்டது.

        பரணி நட்சத்திரத்தின் போது கொற்றவைக்குக் கூழ்  இட்டு விழாக் கொண்டாடுவர். கொற்றவைக்கு உரிய நாள் பரணி ஆகும்.

    · பரணி இலக்கியத்தின் உறுப்புகள்

        கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காடு பாடியது, பேய்  முறைப்பாடு, காளிக்குக் கூளி கூறியது, களம் பாடியது,  வாழ்த்து எனப் பல்வேறு வகை உறுப்புகளைப் பெற்று, பரணி  இலக்கியம் அமைகிறது.

    · பரணி இலக்கியத்தின் இயல்பு

        பரணி இலக்கிய வகையானது பொதுவாகத் தோற்றான்  பெயரில் அமைந்து வெற்றி பெற்றோனின் சிறப்பினைக்  கூறுவதாக அமைகிறது.

    · பரணி வகைகள்

    எண்

    நூல் பெயர்

    ஆசிரியர்

    காலம்
    1
    கலிங்கத்துப் பரணி
    செயங்கொண்டார்
    கி.பி.12-ஆம்
    நூற்றாண்டு
    2
    தக்கயாகப் பரணி
    ஒட்டக்கூத்தர்
    கி.பி.12-ஆம்
    நூற்றாண்டு
    3
    அஞ்ஞவதைப்
    பரணி
    தத்துவராயர்
    கி.பி.16-ஆம்
    நூற்றாண்டு
    4
    மோகவதைப்
    பரணி
    வைத்தியநாத
    தேசிகர்

    கி.பி.17-ஆம் நூற்றாண்டு
    5
    பாசவதைப் பரணி
    வைத்தியநாத
    தேசிகர்
    கி.பி.17-ஆம்
    நூற்றாண்டு
    6
    சீனத்துப் பரணி
    மு.பி.பாலசுப்பிரமணியன்
    கி.பி.20-ஆம்
    நூற்றாண்டு
    7
    போர்ப் பரணி
    வாணிதாசன்
    கி.பி.20-ஆம்
    நூற்றாண்டு

    6.3.1 கலிங்கத்துப் பரணி

        செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி எனும்  நூலே காலத்தால் முற்பட்டது. குலோத்துங்க சோழனின்  படைத் தலைவனாகிய கருணாகரத்     தொண்டைமான், அனந்தவர்ம சோடகங்கன் ஆண்டு வந்த கலிங்க நாட்டை  வென்றதைக் கலிங்கத்துப் பரணி பாடுகின்றது.

        வல்லிசை வண்ணத்தால் போர்க்களக் காட்சியைக்  கண்முன் கொண்டு நிறுத்துகிறார் செயங்கொண்டார்.

    எடும்எடும் எடும்என எடுத்ததோர்
    இகலொலி கடலொலி இகக்கவே
    விடுவிடு விடுபரி கரிக்குழாம்
    விடும்விடும் எனுமொலி மிகைக்கவே.

    எனும் பேரொலியோடு நாற்படையும் நடை போடுகிறது.  சோழர் படை மிகப்பெரிய படை என்பதை உணர்த்த ,படை பெருத்ததால் பார் சிறுத்ததோ என வினவுகிறார்  செயங்கொண்டார். அவர்,

    பார் சிறுத்தலின் படைபெருத்ததோ
    படை பெருத்தலின் பார் சிறுத்ததோ?

    என்று பாடினார்.

        தட்சனுக்கும் சிவபெருமானுக்கும் இடையே நிலவிய  பகைமையையும் தட்சனை அவர்     ஒடுக்கியமையையும், ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி பாடினார்.

        சிற்றிலக்கிய வகைமை வளர்ச்சியில்     பரணி  இலக்கியத்தின் வளர்ச்சி முக்கியமானதாகும். போரின் வெற்றிக் களிப்பு என்பது பாடுபொருளாக இருந்தாலும், தோல்வி  அடைந்த மன்னவனின் பெயரிலேயே பரணி இலக்கியங்கள் அமைவதால், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை மாற்று  முறையில் பதிவு செய்ததாகவும் கொள்ள இடமுண்டு.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    பரிசில் பெற்றுவரும் புலவன், பெறச் செல்லும் புலவனை வழிப்படுத்துதல் பின்னர் எவ்வகைச் சிற்றிலக்கியமாயிற்று?
    2.
    குறவர், குறத்தியர் வாழ்வியல் பதிவுகள்  எவ்வகைச் சிற்றிலக்கியமாய் உருவாயிற்று?
    3.
    அகத்திணை, துறை சார்ந்து எழுந்த  சிற்றிலக்கியங்கள் எவை?
    4.
    புறத்திணை, துறை சார்ந்து எழுந்த சிற்றிலக்கியங்கள் எவை?
    5.
    நாட்டுப்புறப் பாடல் அடிப்படையில் உருவான  சிற்றிலக்கியங்கள் எவை?
    6.
    பத்துப் பத்துப் பாடலாய் அமையும் ‘தேவார’  மரபில் அமையும் சிற்றிலக்கியங்கள் எவை?
    7.
    பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ள ஆற்றுப்படை  நூல்கள் எத்தனை?
    8.
    தணிகையாற்றுப் படையின் ஆசிரியர் யார்?
    9.
    பக்தி இலக்கியத்தின் தாக்கமாகச் சிற்றிலக்கியமாய்  வளர்ச்சி பெற்ற வகைமை எது?
    10.
    முதல் அந்தாதி எது?
    11.
    அபிராமி அந்தாதியை இயற்றியவர் யார்?
    12.
    ஒரு பருவத்திற்குப் பத்து விருத்தங்களாக நூறு  பாடல்கள் பாடப்படும் சிற்றிலக்கிய வகை எது?
    13.
    பிள்ளைத் தமிழின் இரு பிரிவுகள் எவை?
    14.
    பன்னிருபாட்டியல் பிள்ளைத் தமிழை எவ்வாறு
    அழைக்கிறது? 
    15.
    ஆனை ஆயிரம் போரில் வென்ற வீரனுக்கு வகுப்பது எது?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 22:27:36(இந்திய நேரம்)