தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-குண்டலகேசி

  • 5.1 குண்டலகேசி

    குண்டலகேசி ஒரு பௌத்த சமய நூல். குண்டலகேசி விருத்தம் எனவும் இந்நூல் குறிப்பிடப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக இந்நூல் குறிப்பிடப்படுகிறது. சமய வாதங்களைக் கூறுகிற நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி முதலிய கேசி நூல்களில் ஒன்றாகவும் இந்நூல் கருதப்படுகிறது. குண்டலகேசி பற்றிய செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்படுகின்றன.

    5.1.1 நூல் வரலாறு

    கேசி என்பது பெண்ணின் கூந்தலால் (முடி) வந்த பெயர். சுருண்ட கூந்தல் காரணமாகக் குண்டலகேசி என இக்காப்பியத் தலைவி பெயர் பெற்றாள். அவள் பெயரையே தலைப்பாகக் கொண்டுள்ளது இந்நூல். யாப்பருங்கல விருத்தி நான்கு இடங்களில் இந்நூல் பற்றிக் குறிப்பிடுகிறது. வீரசோழிய உரை இந்நூலை இரண்டு இடங்களில் குறிப்பதுடன் இதன் ஒரு பாடலையும் மேற்கோள் காட்டுகிறது. புறத்திரட்டில் இந்நூலின் பாடல்கள் 10 எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருவொற்றியூர் ஞானப்பிரகாசர், தம் சிவஞான சித்தியார் பரபக்க உரையில் இதன் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். வைசிய புராணம் குண்டலகேசி பெயரால் ஒரு கதை சொல்கிறது. என்றாலும் நீலகேசி உரையே குண்டலகேசி வரலாற்றை அறிய உதவுகிறது. குண்டலகேசியின் வாதத்தை மறுப்பதாகப் பல பாடல்களின் முதற்குறிப்பைத் தருகிறது நீலகேசி. மறைந்து போன தமிழ் நூல்கள் என்ற நூலில் ஏறத்தாழ 92 குண்டலகேசிப் பாடல்களின் முதற்குறிப்பைத் தொகுத்துத் தந்துள்ளார் மயிலை. சீனி. வேங்கடசாமி, அவர்கள். 14ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் இருந்து, பின்னர் அழிந்திருக்கக் கூடும்.

    “தருக்கமாவன: ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க” என யாப்பருங்கலவிருத்தி குறிப்பிடுவதால், இந்நூல் தருக்க வாதம் குறித்த ஒன்று என அறிய முடிகிறது. வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார், குண்டலகேசி விருத்தம் என இந்நூலைக் குறிப்பிடுகிறார்.  இதனைத் ‘தெரியாத சொல்லும் பொருளும் வந்த அகலக் கவி’ (நீண்ட கவிதை) என்கிறார்.

    5.1.2 நூலாசிரியர்

    குண்டலகேசி காவியத்தை இயற்றியவர் நாதகுத்தனார் எனும் பௌத்தர் என்று நீலகேசி உரை (பாடல் 344) குறிப்பிடுகிறது. நாதகுப்தனார் என்பதே மருவி நாதகுத்தனார் என வழங்கிற்று என்பர். சோழ நாட்டில் வாழ்ந்த பௌத்தத் துறவி காசியப தேவர், விமதிவினோதனீ எனும் பாலிமொழி நூலுக்குத் தாம் எழுதிய டீகா என்னும் உரையில் குண்டலகேசி ஆசிரியர் நாகசேனர் என்கிறார். அவர் கூறுவதாவது, “பழங்காலத்தில், இந்தத் தமிழ்நாட்டில் மாறுபட்ட கொள்கை உடைய நாகசேனனன் என்னும் ஒரு தேரர், எதிரிகளின் கொள்கைகளை அழிக்க எண்ணிக் குண்டலகேசி என்ற காப்பியத்தைத் தமிழில் இயற்றினார்.” குப்தர் என்பது செட்டி மரபின் ஒரு பெயர் என்கிறார் மு. அருணாசலம்.

    இந்நூலாசிரியர் புத்தரிடம் பக்தி மிக்கவர் என்பதும், அவருடைய முற்பிறப்பு வரலாறு முழுவதையும் நன்கு அறிந்தவர் என்பதும், உலகியல் அறிவு மிக்கவர் என்பதும், அரச வாழ்வில் தொடர்புடையவர் என்பதும் அவர்தம் பாடல் மூலமாக அறிய முடிகிறது. நூலாசிரியரின் காலம் நீலகேசியின் காலமான கி.பி. 10ஆம் நூற்றாண்டு என யூகிக்க முடிகிறது.

    5.1.3 கதை

    குண்டலகேசி கதை வடமொழியில் தேரீகாதை உரையிலும் (தர்ம பாலர்), தேரீ அவதானம், தம்மபதாட்ட கதா, அங்குத்தர நிகாய என்னும் நூல்களிலும் தமிழில் நீலகேசி மொக்கலவாதச் சருக்க உரையிலும் (சமய திவாகர முனிவர் உரை - பாடல் 286) சிற்சில வேறுபாடுகளுடன் கூறப்படுகிறது.

    ● கதைச் சுருக்கம்

    இராச கிருக நாட்டு அமைச்சன் மகள் பத்திரை. அவள் தனது மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரச சேவகர்கள் கள்வன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். அவனுடைய இளமையும் அழகும் அவள் மனதைக் கவர்ந்தன. அவன்மேல் அவள் காதல் கொண்டாள். இதை அறிந்த தந்தை, கள்வனை விடுவித்துத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். இருவரின் அன்பு வாழ்க்கை, காதல் வாழ்க்கை இனிதே நடக்கிறது. ஒரு நாள் ஊடல் கொண்ட பத்திரை, ‘நீ கள்வன் மகன் அல்லனோ’ என விளையாட்டாகச் சொல்ல, அது அவன் உள்ளத்தைப் பாதிக்கிறது. அவளைக் கொல்லக் கருதிய அவன், அவளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, அவளைக் கீழே தள்ளிக் கொல்லப் போவதாகக் கூறுகிறான். நிலைமையை உணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்குமுன் உம்மை வலம் வரவேண்டும்’ என்கிறாள். பின் அவனை வலம் வருபவளைப் போல, பின் சென்று அவனைக் கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.

    பிறகு, பத்திரை, வாழ்க்கையை வெறுத்தவளாய், பல இடங்களில் அலைந்து திரிந்து, பின் சமண சமயத்தவர் வாழும் மடத்தை அடைந்து, சமணத் துறவியாகிறாள். அங்குச் சமணக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்து, பின் பிற சமயக் கருத்துகளை எல்லாம் முறைப்படி கற்றுத் தேர்கிறாள். பின் சமயவாதம் செய்யப் புறப்பட்டு, நாவல் கிளையை நட்டுச் சமய வாதம் செய்து வென்று, பலரைச் சமண சமயம் சாரச் செய்கிறாள். ஒரு நாள், நாவல் நட்டு விட்டு ஊருக்குள் பிச்சை ஏற்கச் செல்கிறாள். அப்போது கௌதம புத்தரின் மாணவர் சாரிபுத்தர், பத்திரை நட்டு வைத்த நாவலைப் பிடுங்கி எறிந்து விடுகிறார். இதனால் இருவருக்கும் இடையே சமய வாதம் நிகழ்கிறது. வாதத்தில் பத்திரை தோற்க, சாரிபுத்தர் ஆணைப்படி பௌத்தத் துறவியாகிறாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் (பத்திரை) பகவான் புத்தரிடம் அழைத்துச் செல்ல, அவர் முன்னிலையில் அவள் பௌத்தத் துறவியாகிறாள்.

    இங்குப் பத்திரை சமண சமயம் சார்ந்தபோது அவள் தலைமயிர் மழிக்கப்பட, அது உடனடியாகச் சுருண்டு வளர்கிறது. இதனால் அவள் குண்டலகேசி எனப் பெயர் பெறுகிறாள். இக்கதையில் ‘கள்வன் மகன் அல்லனோ’ என்றதற்காக அவளைக் கொல்லத் துணிகிறான். ஆனால் தேரீ அவதானம் முதலான வடமொழிக் கதைகளில், குண்டலகேசியின் (பத்திரை) கணவன், அவள் நகைகளைக் கொள்ளையடிப்பதற்காகவே அவளைக் கொல்லப் போவதாகக் குறிப்பிடுகிறான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:20:12(இந்திய நேரம்)