தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-வளையாபதி உணர்த்தும் அறம்

  • 5.5 வளையாபதி உணர்த்தும் அறம்

    வளையாபதியின் கடவுள் வாழ்த்தே வாலறிவன் அருகனை வாழ்த்துகிறது. மேலும், ‘தொல்வினை நீங்குக’ என்றும் வேண்டப்படுகிறது. இங்கு வினைப்பயன் நீங்கி வீடுபேறு பெற வேண்டும் என்ற ஆசிரியர் எண்ணம் வெளிப்படுகிறது.

    5.5.1 அரிய பிறப்பு

    மனிதப் பிறவி மிக உயர்ந்தது. அதுவும் செல்வராக, உயர்குடிப் பிறப்பாளராக, ஊனமில்லாத யாக்கை உடையவராக, கல்வி கேள்விகளில் சிறந்தவராகப் பிறப்பது அரிது என்கிறார் ஆசிரியர்.

    வினைபல வலியினாலே வேறுவேறு யாக்கை ஆகி
    நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லுயிர்க்கு
    மனிதரின் அரியதாகும் தோன்றுதல் தோன்றினாலும்
    இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம்

    உயர்குடி நனியுள் தோன்றல் ஊனம்இல் யாக்கை யாதல்
    மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர் ஆதல்
    பெரிதுணர் அறிவே ஆதல் பேரறம் கோடல் என்றாங்கு
    அரிதிவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார்

    (நனிபல பிறவி = பல பிறவிகள்; மயர்வறு = மயங்குதல் இல்லாத; ஏடா? = ஏடா என முன்னிலையாரை அழைத்தல்)

    5.5.2 நல்ல அறம்

    எல்லா நீதி நூல்களும் சொல்வது போல, கொலை, களவு, கள், காமம், பொய் நீங்குக, பிறரை ஏசாதே, புறங்கூறாதே, வன்சொல் சொல்லாதே, பிறரை எளியர் என்று எள்ளி நகையாடாதே, ஏதில் பெண் தழுவாதே, உயிர்கள் மாட்டு அன்பு கொள். மானம் போற்றுக; புலால் உண்ணற்க; உலகில் குற்றமே செய்யாதார் எவரும் இலர்; பொருளாசை கொள்ளற்க; அருளொடு அறம் செய்க; சீற்றம் நீங்குக; தவம் செய்க; தேர்ந்து தெளிக; இளமையும் இன்பமும் செல்வமும் நில்லாது நீங்கும்; நாளும் துன்பமே; நல்லதை யாரும் மதிக்க மாட்டார்; கல்வியும் கைப்பொருளும் இல்லாதார் சொல் புல்லாய் மதிக்கப் பெறும் என்று முழுக்க முழுக்க, அறம் சொல்வதாகவே நமக்குக் கிடைத்துள்ள வளையாபதிப் பாடல்கள் அமைகின்றன.

    5.5.3 பெண்கள்

    பெண் மனம் நிலையற்றது; அதிலும் குறிப்பாகப் பொருட்பெண்டிர் மனம் மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போன்றது. புல் மேயும் மாடுகள் புல் தீர, பிறிதொரு புல்வயல் நாடுவது போலப் பொருட்பெண்டிர் அமைவர் என்று குறிப்பிடப்படுகிறது.

    மேய்புலம் புல்அற மற்றோர் புலம்புகும்
    மாவும் புரைப மலரன்ன கண்ணார்

    (புரைப = ஒப்பர்)

    பெண்ணால் வருவது பெருந்துன்பம். அதைவிடப் பெருந்துன்பம் வேறு இல்லை. ஆழமான நீர் நிலையில் வாழும் மீன்கள் புது வெள்ளம் காணின் அதை நோக்கிப் பாயும். அதுபோலப் பெண் காமனொடு உறவு கொண்டாலும் அவர்தம் உள்ளம் பிறிதொன்றை எதிர்நோக்கி உருகும். உண்டி, பொருள் மற்றும் கல்வி இவற்றைக் கூடக் காக்கலாம். ஆனால் பெண்ணைக் காப்பது, கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. இவ்வாறு பெண்ணை ஒருவகையில் இழிவாகப் பேசுவது இங்குக் குறிப்பிடத்தக்கது.

    5.5.4 குழந்தைச் செல்வம்

    ‘குழல் இனிது, யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்று குழந்தைச் செல்வம் பற்றி வள்ளுவர் பேசுவார். இதுபோன்று குழந்தைச் செல்வம் பற்றி எதிர்மறை உவமானத்துடன் சிறப்பிக்கிறார் வளையாபதி ஆசிரியர். அப்பாடல் இதோ:

    பொறைஇலா அறிவு போகப்புணர்வு இலா இளமை மேவத்
    துறைஇலா வனசவாவி துகில்இலாக் கோலத் தூய்மை
    நறைஇலா மாலை கல்வி நலம்இலாப் புலமை நன்னீர்ச்
    சிறையிலா நகரம் போலும் சேய் இலாச் செல்வம் அன்றே

    பொருள்:

    பொறுமை இல்லாத அறிவு, போகம் (காம இன்பம்), துய்க்காத இளமை, படித்துறை இல்லாத நீர்நிலை (குளம்), ஆடை அணியாத தூய்மை, மணமற்ற மாலை, மேலும் மேலும் கல்லாத புலமை, காவல் அகழிகள் இல்லாத நகரம் இவை போன்றது குழந்தை இல்லாத செல்வம் என்கிறார்.

    ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார் வள்ளுவர். அதுபோல வளையாபதி ஆசிரியர். “காக்கப் படுவன இந்திரியம் (ஐம்புலன்கள் - கண், வாய், செவி, மூக்கு, உடல்) ஐந்தினும், நாக்கு அல்லது இல்லை’ என்கிறார். இங்ஙனம் முழுக்க முழுக்க அறக் கருத்துகளையே மையப்பொருளாகக் கொண்டுள்ளன வளையாபதிப் பாடல்கள் என்றால் அது மிகையாகாது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:20:37(இந்திய நேரம்)