Primary tabs
5.3 இலக்கிய நயம்
குண்டலகேசிப் பாடல்கள் கிடைத்துள்ளவை சிலவே ஆகினும் இலக்கியச் சிறப்பும் நயமும் மிக்கன என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சொல்லாட்சியாலும், உவமை நயத்தாலும் இந்நூல் சிறந்து விளங்கியுள்ளது என்பது விளங்கும். மேலும், சிறந்த கற்பனை வளமும் மிகுந்துள்ளது.
5.3.1 உவமை நயம்
‘நாவாய் (ஓடம்) காற்றை நம்பியே செல்லும். அது போலவே வாழ்க்கையானது ஊழ்வினையை அடிப்படையாக் கொண்டே அமையும். மேலும் மனத்தூய்மை என்பது, எவ்விதத் தீமையும் நினைக்காத தூய சிந்தனையுடைய புத்த பிரானை நாளும் நினைவில் நிறுத்துவதே’ ஆகும். இதனை உணர்த்தும் பாடல் பின்வருமாறு:
வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத்
தூயவனை நோக்கியுள துப்புரவும் எல்லாம்(வாயுவினை = காற்று; மாண்ட வய = சிறப்பு மிக்க; ஆயுவினை = ஊழ்; தூயவனை = புத்த பிரானை; துப்புரவு = தூய்மை)
● காமத்தைக் கைவிடல் பற்றிய உவமை
துறவிகளுக்குக் காமம் கூடாது என்பது சமண, பௌத்த மதங்களின் போதனை. இதனை மிகச் சிறந்த உவமை வாயிலாக விளக்கிச் செல்கிறார் ஆசிரியர். ‘காமத்தைப் புணர்ச்சியினால் அடக்குவம் என்பது வெள்ளத்தை நீரால் அடைக்க முடியும்’ என்பதற்கு ஒத்தது என்கிறார். மேலும் அது தீயை நெய் ஊற்றி அணைப்பதற்கு ஒப்பாவது என்றும் கூறிக் காமத்தைப் புணர்ச்சி இன்பம் துய்த்து அடக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறார். இதோ பாடல் வருமாறு:
வகைஎழில் தோள்கள் என்றும் மணிநிறம் குஞ்சி என்றும்
புகழ்எழ விகற்பிக்கின்ற பொருளில் காமத்தை மற்றோர்
தொகைஎழும் காதல் தன்னால் துய்த்துயாம் துடைத்தும் என்பார்
அகைஅழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்க லாமோ(குஞ்சி = கூந்தல்; அகைஅழல் அழுவம் = கொழுந்துவிட்டு எரியும் அனல்கடல்)