தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.1 சொற்பொருளை அடிப்படையாகக் கொண்டவை

  • 1.1 சொற்பொருளை அடிப்படையாகக் கொண்டவை

    இந்தப் பாடத்தின் முன்னுரையில் மொழி என்னும் சொல்லும் சொல்லைக் குறிக்கும் என்று பார்த்தோம். இங்கே சொற்பொருளை அடிப்படையாகக் கொண்டவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம். சொற்பொருள் அடிப்படையில் மொழி/சொல் மூன்று வகைப்படும். அவை,

    1) தனிமொழி
    2) தொடர்மொழி
    3) பொதுமொழி

    என்பவை ஆகும்.

    1.1.1 தனிமொழி

    ஒரு சொல் தனித்து வந்து ஒரு பொருளைத் தந்தால் அது தனிமொழி எனப்படும்.

    (எ.கா) ஆ, வா, நில், படித்தான்.

    இங்கே, எடுத்துக்காட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தனிச்சொல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைத் தந்து வந்துள்ளன.

    1.1.2 தொடர்மொழி

    தனிமொழிகள் பல தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது தொடர்மொழி எனப்படும்.

    (எ.கா)

    அறம் செய விரும்பு
    ஆறுவது சினம்

    இங்கே தனிச்சொற்கள் பல சேர்ந்து வந்து பொருளைத் தந்துள்ளன.

    1.1.3 பொதுமொழி

    ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும், தொடர்மொழியாகப் பிரிந்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது பொதுமொழி எனப்படும். அதாவது, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக ஒரு சொல் வருவது.

    (எ.கா)   தாமரை

    தாமரை என்னும் ஒரு சொல், தனிமொழியாக நின்று தாமரை மலர் என்னும் பொருளைத் தரும்.

    தாமரை என்னும் ஒரு சொல்லையே தா+மரை என்றும் பிரிக்கலாம். இவ்வாறு பிரித்தால் தாவுகிற மான் என்னும் தொடர்மொழியாகப் பொருளைத் தருகிறது. ‘தா’ என்னும் சொல் இங்கே தாவுதலையும் ‘மரை’ என்னும் சொல் மானையும் குறிக்கிறது.

    ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி
    பல பொருளன பொது இருமையும் ஏற்பன

    (நன்னூல் : 260)

    ஒரு பொருளைத் தரும் ஒருசொல், ஒருமொழியாம். இரண்டு முதலிய சொற்களாய்த் தொடர்ந்து நின்று இரண்டு முதலான பல பொருள்களைத் தருவன தொடர்மொழியாம். ஒன்றாய் நின்று ஒரு பொருளைத் தந்தும் தொடர்ந்து நின்று பல பொருளைத் தந்தும் இரண்டுக்கும் பொதுவாய் வருவது பொதுமொழியாம்.



புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:47:16(இந்திய நேரம்)