Primary tabs
1.4 இலக்கிய வகைச் சொற்கள்
இலக்கியங்களில் இடம் பெறும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,
1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்என்பவை ஆகும்.
கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் உள்ள சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
(எ.கா) மரம், நடந்தான்
மேலே காட்டப்பட்ட சொற்கள் தங்கள் எளிமை இயல்பால் அனைவருக்கும் பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்(நன்னூல் : 271)
செந்தமிழ் நாட்டின் சொற்களில் கற்றவர், கல்லாதவர் என்று எல்லோருக்கும் எளிதில் பொருள் விளங்கும் தன்மை உடையவை இயற்சொல் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
● இயற்சொல் வகைகள்
இயற்சொல் இரண்டு வகைப்படும். அவை,
1) பெயர் இயற்சொல்
2) வினை இயற்சொல்என்பவை ஆகும்.
● பெயர் இயற்சொல்
கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் பெயர்ச் சொற்களைப் பெயர் இயற்சொற்கள் என்று கூறுகிறோம்.
(எ.கா) மரம், மலை, கடல்
இந்தப் பெயர்ச் சொற்களின் பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை பெயர் இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
● வினை இயற்சொல்
கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் வினைச்சொற்களை வினை இயற்சொற்கள் என்று கூறுகிறோம்.
(எ.கா) நடந்தான், சிரித்தாள், வந்தது.
இந்த வினைச் சொற்களின் பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. எனவே, இவை வினை இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
(எ.கா) தத்தை, ஆழி, செப்பினான்
மேலே காட்டப்பட்டுள்ள சொற்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயலாத வகையில் வந்துள்ளன.
தத்தை
-கிளி
ஆழி
-கடல்
செப்பினான்
-உரைத்தான்
என்று கற்றவர்களால் பொருள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை திரிசொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
● திரிசொல் வகைகள்
திரிசொல் இரண்டு வகைப்படும். அவை,
1) ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
2) பல பொருள் குறித்த ஒரு திரிசொல்என்பவை ஆகும்.
1. ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
ஒரே பொருளைத் தரும் பல திரிசொற்கள் தமிழில் உள்ளன. அவை ஒரு பொருள் குறித்த பல திரிசொல் எனப்படும்.
(எ.கா)
கமலம்
கஞ்சம்
முண்டகம்
முளரிஇவை யாவும் தாமரை என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள் ஆகும். இவை யாவும் பெயர்ச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல பெயர்த் திரிசொற்கள் ஆகும்.
(எ.கா)
செப்பினான்
உரைத்தான்
மொழிந்தான்
இயம்பினான்இவை யாவும் சொன்னான் என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள் ஆகும். இவை யாவும் வினைச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொற்கள் ஆகும்.
2. பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
பல பொருளைத் தரும் ஒரு திரிசொல்லும் தமிழில் உள்ளது. அது, பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனப்படும்.
(எ.கா) ஆவி
இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள் உள்ளன. ஆவி என்பது பெயர்ச்சொல். எனவே இதைப் பலபொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல் என்கிறோம்.
(எ.கா) வீசு
இச்சொல்லுக்கு எறி, சிதறு, பரவச்செய், ஆட்டு முதலான பல பொருள்கள் உள்ளன. வீசு என்பது வினைச்சொல். எனவே இதைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் என்கிறோம்.
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்(நன்னூல் : 272)
ஒரு பொருளைக் குறிக்கும் பலசொற்களாகவும் பலபொருள்களைக் குறிக்கும் ஒருசொல் ஆகவும் கற்றோர் மட்டுமே பொருளை உணரும் வகையில் வருவன திரிசொல் ஆகும் என்பது இதன் பொருள்.
தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
(எ.கா) ஆசாமி, சாவி
இவற்றில் ஆசாமி என்னும் சொல் உருதுமொழிச் சொல். சாவி என்னும் சொல் போர்த்துக்கீசிய மொழியில் உள்ள சொல். இச்சொற்கள் தமிழ்மொழியில் கலந்து வருகின்றன. இவ்வாறு தமிழ்நாட்டுக்கு நான்கு திசைகளிலும் உள்ள பகுதிகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
செந்தமிழ் நிலத்துடன் சேர்ந்த பன்னிரு நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்களும் திசைச் சொற்கள் எனப்படும்.
பெற்றம்-பசு-தென்பாண்டி நாட்டுச்சொல்தள்ளை-தாய்-குட்ட நாட்டுச்சொல்அச்சன்-தந்தை-குடநாட்டுச்சொல்பாழி-சிறுகுளம்-பூழிநாட்டுச்சொல்இவை போன்றவை செந்தமிழ்நிலத்துடன் சேர்ந்த நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் ஆகும்.
சில திசைச் சொற்களின் பட்டியலையும் அவற்றின் நாடுகளையும் காண்போம்.
திசைச்சொல்
மொழி
தமிழ்
கெட்டிதெலுங்குஉறுதிதெம்புதெலுங்குஊக்கம்பண்டிகைதெலுங்குவிழாவாடகைதெலுங்குகுடிக்கூலிஎச்சரிக்கைதெலுங்குமுன் அறிவிப்புஅசல்உருதுமுதல்அனாமத்துஉருதுகணக்கில் இல்லாததுஇனாம்உருதுநன்கொடைஇலாகாஉருதுதுறைசலாம்உருதுவணக்கம்சாமான்உருதுபொருள்சவால்உருதுஅறைகூவல்கம்மிபாரசீகம்குறைவுகிஸ்திபாரசீகம்வரிகுஸ்திபாரசீகம்குத்துச்சண்டைசரகம்பாரசீகம்எல்லைசுமார்பாரசீகம்ஏறக்குறையதயார்பாரசீகம்ஆயத்தம்பட்டாபாரசீகம்உரிமம்டாக்டர்ஆங்கிலம்மருத்துவர்நைட்ஆங்கிலம்இரவுபஸ்ஆங்கிலம்பேருந்து
செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப(நன்னூல் : 273)
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதிகளிலிருந்தும் பதினெட்டு மொழி பேசும் நாடுகளில் தமிழ்மொழி பேசும் பகுதி அல்லாத பிற பதினேழு நிலங்களில் உள்ள மொழிகளிலிருந்தும் தமிழ் மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
பன்னிரண்டு நிலங்கள் (நாடுகள்)
1) தென்பாண்டி நாடு
2) குட்ட நாடு
3) குட நாடு
4) கற்கா நாடு
5) வேணாடு
6) பூழி நாடு
7) பன்றி நாடு
8) அருவா நாடு
9) அருவா வடதலை நாடு
10) சீதநாடு
11) மலாடு
12) புனல் நாடுஎன்பவை பன்னிரண்டு நாடுகள் ஆகும்.
பதினெட்டு மொழி வழங்கும் நாடுகளில் தமிழ் தவிர்த்து ஏனைய பதினேழு நாடுகள்.
1) சிங்களம்
2) சோனகம்
3) சாவகம்
4) சீனம்
5) துளு
6) குடகம்
7) கொங்கணம்
8) கன்னடம்
9) கொல்லம்
10) தெலுங்கம்
11) கலிங்கம்
12) வங்கம்
13) கங்கம்
14) மகதம்
15) கடாரம்
16) கௌடம்
17) குசலம்என்பவை பதினேழு மொழிகள் பேசப்படும் நாடுகள் ஆகும்.
வடமொழி என்று குறிப்பிடப்படும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் எனப்படும். வடசொல் இரண்டு வகைப்படும்.
1) தற்சமம்
2) தற்பவம்1. தற்சமம்
வடமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் தமிழ்ச் சொற்கள் போன்றே மாற்றமின்றி வருவது தற்சமம் எனப்படும்.
(எ.கா)
கமலம்
காரணம்
மேருஇச்சொற்களில் வடமொழிக்குரிய சிறப்பு எழுத்து எதுவும் இல்லை. இவற்றில் தமிழ் எழுத்துகளே இடம் பெற்றுள்ளன. எனவே இச்சொற்கள் தற்சமம் என்று அழைக்கப்படுகின்றன.
2. தற்பவம்
வட மொழிக்குரிய சிறப்பு எழுத்துகள் தமிழ்த் தன்மைக்கு ஏற்ப மாறி வருவது தற்பவம் எனப்படும்.
(எ.கா)
பங்கஜம்
-பங்கயம்
ரிஷபம்
-இடபம்
ஹரி
-அரி
பக்ஷி
-பட்சி
சரஸ்வதி
-சரசுவதி
வருஷம்
-வருடம்
இவற்றில் வடமொழிக்கே உரிய ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகள் தமிழ் மொழிக்கு ஏற்ப மாறி வந்துள்ளன. எனவே தற்பவம் என்று அழைக்கப்படுகின்றன..
தமிழில் தேவையில்லாத இடங்களில் திசைச்சொற்களையும் வடசொற்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்(நன்னூல் : 274)
வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துகளாலும் வடமொழிக்குச் சிறப்பாக உள்ள எழுத்துகளாலும் வடமொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் வடசொற்கள் என்பது இதன் பொருள்.