தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.2 பகுப்பை அடிப்படையாகக் கொண்டவை

  • 1.2 பகுப்பை அடிப்படையாகக் கொண்டவை

    பகுப்பை அடிப்படையாகக் கொண்டு சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,

    1) பகுபதம்
    2) பகாப்பதம்

    என்பவை ஆகும். பதம் என்னும் சொல்லும் சொல்லைக் குறிக்கும் வேறு ஒரு சொல் என்பதை முன்னுரையில் ஏற்கெனவே பார்த்தோம்.

    1.2.1 பகுபதம்

    ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க (பிரிக்க) முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.

    (எ.கா) அறிஞன், செய்தாள்

    1.2.2 பகாப்பதம்

    ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.

    (எ.கா) மரம், தேன், தலை, போல, சால

    1.2.3 பகுபத உறுப்புகள்

    பகுதி, விகுதியாகப் பிரிக்கப்படும் சொல்லில் பல உறுப்புகள் இருக்கும். அவற்றைப் பகுபத உறுப்புகள் என்று கூறுவர்.

    (எ.கா) வந்தனன்

    இது ஒரு பகுபதம். இந்தச் சொல்லை,

    வா+த்(ந்)+த்+அன்+அன்

    என்று பிரிக்கலாம். இந்தச் சொல்லில் ஐந்து பிரிவுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளன. இந்தப் பெயர்களைத் தான் பகுபத உறுப்புகள் என்று பொதுவாகக் கூறுகிறோம். அந்தப் பகுபத உறுப்புகள் யாவை என்பதைப் பார்ப்போமா?

    (1) பகுதி
    (2) விகுதி
    (3) இடைநிலை
    (4) சாரியை
    (5) சந்தி
    (6) விகாரம்

    என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும்.

    ● பகுதி

    ஒரு பகுபதத்தின் முதலில் இருப்பது பகுதி எனப்படும். பகுபதத்தில் உள்ள பகுதி பொருள் உடையதாக இருக்கும்.

    (எ.கா) வந்தனன்

    வா+த்(ந்)+த்+அன்+அன்

    இதில் வா என்பது பகுதி ஆகும். வா என்னும் பகுதிக்கு வா என்று அழைக்கும் பொருள் இருக்கிறது. எனவே இது பகுதி ஆகும்.

    ● விகுதி

  • பகுபதத்தில் இறுதியில் இருக்கும் உறுப்பு விகுதி எனப்படும். விகுதி என்றால் இறுதி என்று பொருள்.

    வா+த்(ந்)+த்+அன்+அன்

    இதில் இறுதியில் உள்ள அன் விகுதி ஆகும்.
     

    ● இடைநிலை

    பகுபதத்தில் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.

    வா+த்(ந்)+த்+அன்+அன்

    இதில் இடையில் இருக்கும் உறுப்பாகிய த் இடைநிலை ஆகும்.

    ● சாரியை

    பகுபதத்தில் இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் வருவது சாரியை எனப்படும்.

    வா+த்(ந்)+த்+அன்+அன்

    இதில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் அன் என்பது சாரியை ஆகும்.
     

    ● சந்தி

    பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது சந்தி எனப்படும்.

    வா+த்(ந்)+த்+அன்+அன்

    இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உள்ள த்(ந்) சந்தி ஆகும்.
     

    ● விகாரம்

    பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்கள் விகாரம் எனப்படும். விகாரம் என்றால் மாறுபாடு என்று பொருள்.

    வந்தான்

    வா+த்(ந்)+த்+அன்+அன்

    இதில் சந்தியாக இடம் பெற்றுள்ள த் என்னும் எழுத்து ந் ஆக மாறியுள்ளது. பகுதியாக இடம் பெற்றுள்ள வா என்னும் எழுத்து ‘’ என்று மாறியுள்ளது. இவ்வாறு மாறுபட்டு வருவது விகாரம் எனப்படும்.

    1.

    ‘கிளவி’ என்பதன் பொருள் யாது?

    2.

    ஓர் எழுத்து ஒரு சொல்லுக்கு இரு எடுத்துக்காட்டுத் தருக.

    3.

    தனிமொழி என்றால் என்ன?

    4.

    பொதுமொழியை விளக்குக.

    5.

    பகாப்பதம் என்றால் என்ன?

புதுப்பிக்கபட்ட நாள் : 23-07-2017 11:34:00(இந்திய நேரம்)