Primary tabs
-
5.0 பாட முன்னுரை
முன்னர்ப் படித்த பாடங்களில் பெயர்ச்சொற்கள் பற்றியும், திணை, பால், பொதுப்பெயர்கள் பற்றியும் விளக்கமாக அறிந்தோம்.
இனி, அப்பெயர்ச்சொற்கள் தொடரில் அமையும்போது பொருள் வேறுபடும் முறை பற்றி அறிவோம்.
ஒற்றுமைக்கு எதிர்ச்சொல் வேற்றுமை ஆகும். ஒன்றுபடுத்திக் காட்டுவது ஒற்றுமை. வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்படும். சான்றாக இரண்டு தொடர்களைக் காணலாம்.
மாறன் அடித்தான்
மாறனை அடித்தான்இந்த இரண்டு தொடர்களில் உள்ள பொருள் வேறுபாட்டைக் கவனியுங்கள். முதல் தொடர் மாறன் வேறொருவனை அடித்ததாகக் கூறுகிறது. இரண்டாவது தொடர், மாறனை வேறொருவன் அடித்ததாகச் சொல்லுகிறது. இந்த வேறுபாடு எதனால் ஏற்பட்டது? மாறன் என்ற சொல் ‘ஐ’ என்னும் எழுத்தை இறுதியில் பெற்றதனால் ஏற்பட்டது. இவ்வாறு பெயரின் பொருளை வேறுபடுத்த அதன் இறுதியில் சேர்க்கப்படும் உறுப்புக்கு ‘உருபு’ என்று பெயர்.
ஒரு பெயரின் பொருளை (கருத்தை) வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்படும்.
இனி, அவ்வேற்றுமை பற்றிய விரிவான விளக்கத்தையும் அதன் வகைகளையும் அறிந்து கொள்ளலாம்.