Primary tabs
-
5.1 வேற்றுமை - விளக்கமும் வகைகளும்
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்படும் என்று பார்த்தோம்.
பொருளை வேறுபடுத்திக் காட்டத் துணை செய்யும் உறுப்புக்கு வேற்றுமை உருபு என்று பெயர். இவ்வாறு வேறுபடுத்துவதால்தான் ஒரு வாக்கியத்தின் பொருள் நமக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.
எடுத்துக்காட்டாக,
சேரன் சோழன் வென்றான்
தமிழ்நாடு தில்லி பேச்சு
புலிகொல் யானைஎன்ற தொடர்களைக் காணுங்கள். மேற்கண்ட தொடர்களின் பொருள் விளங்கவில்லை.
முதல் தொடரில் யார் யாரை வென்றது என்று பொருள் விளங்காமல் இருக்கின்றது. சேரனைச் சோழன் வென்றானா? அல்லது சோழனைச் சேரன் வென்றானா? என்பது தெரியவில்லை. பொருள் நன்கு விளங்குவதற்காகச் சேரன் என்னும் பெயரினை அடுத்து ‘ஐ’ என்னும் உறுப்பினைச் சேர்த்துவிட்டால் ‘சேரனைச் சோழன் வென்றான்’ என்று பொருள் நன்கு விளங்குகின்றது. இல்லையென்றால் சோழன் என்னும் பெயரினை அடுத்து ‘ஐ’ என்னும் உறுப்பினைச் சேர்த்துவிட்டால் ‘சேரன் சோழனை வென்றான்’ என்று பொருள் நன்கு விளங்குகின்றது.
இரண்டாம் தொடரில் தமிழ்நாட்டுடன் தில்லி பேச்சா? அல்லது தில்லியுடன் தமிழ்நாடு பேச்சா? என்ற பொருள் விளங்காத நிலை ஏற்படுகின்றது. தமிழ்நாடு என்பதை அடுத்து ‘உடன்’ என்னும் உறுப்பினைச் சேர்த்துவிட்டால் ‘தமிழ்நாட்டுடன் தில்லி பேச்சு’ என்று பொருள் நன்கு விளங்குகின்றது.
மூன்றாம் தொடராகிய ‘புலிகொல் யானை’ என்பதில் ‘புலியால் கொல்லப்பட்ட யானையா?’ அல்லது ‘புலியைக் கொன்ற யானையா?’ என்ற பொருள் ஐயம் உண்டாகின்றது. புலி என்னும் பெயரினை அடுத்து ‘ஆல்’ என்னும் உறுப்பைச் சேர்த்துவிட்டால் ‘புலியால் கொல்லப்பட்ட யானை’ எனப் பொருள் ஆகின்றது. ‘ஐ’ என்னும் உறுப்பினைச் சேர்த்தால் ‘புலியைக் கொன்ற யானை’ எனப் பொருள்படுகின்றது.
இவ்வாறு சொற்றொடர்களில் தோன்றும் ஐயம் நீங்கி, பொருள் நன்கு விளங்குவதற்காகப் பெயர்களோடு சேர்க்கப்படும் உறுப்புக்கு உருபு என்று பெயர். பொருளை வேறுபடுத்துவதற்கு வேற்றுமை என்று பெயர். இவ்வேற்றுமை தமிழில் எட்டு வகைப்படும்.
ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப்பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை(நன்னூல் : 291)
- வேற்றுமை வகைகள்
பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவதற்கு அதன் ஈற்றில் (இறுதியில்) சேர்க்கும் சொற்கள் வேற்றுமை உருபுகள் எனப்படும். அவை, ஐ, ஆல், கு, இன், அது, கண் முதலியனவாம்.
உருபு - இது வேற்றுமையைக் காட்டும் உருவம் அல்லது அடையாளம் ஆகும். முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என்று வேற்றுமை எட்டு ஆகும். முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனவும், எட்டாம் வேற்றுமை, விளிவேற்றுமை எனவும் பெயர் பெறும்.
எடுத்துக்காட்டு
1) முல்லை மலர்ந்தது2) அவள் முல்லையைச் சூடினாள்3) முல்லையால் மணம் பெற்றாள்4) முல்லைக்கு நீர் ஊற்று5) முல்லையின் எடுத்த இதழ்6) முல்லையினது நறுமணம்7) முல்லைக்கண் வண்டுகள் மொய்த்தன8) முல்லையே! நீ மாலையில் மலர்கிறாய்!மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் முல்லை என்னும் பெயர்ப்பொருள் எட்டுவகையாக வேற்றுமை அடைந்திருக்கிறது.
விளக்கம்
1. முல்லை மலர்ந்ததுமுதல் வேற்றுமை; எழுவாய்ப் பொருள்2. முல்லையைஇரண்டாம் வேற்றுமை; ஐ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு, செயப்படுபொருள்.3. முல்லையால்மூன்றாம் வேற்றுமை; ஆல் : மூன்றாம் வேற்றுமை உருபு, கருவிப்பொருள்.4. முல்லைக்குநான்காம் வேற்றுமை; கு : நான்காம் வேற்றுமை உருபு, கோடல்பொருள். (கொள்ளுதல்)5. முல்லையின்ஐந்தாம் வேற்றுமை; இன் : ஐந்தாம் வேற்றுமை உருபு, நீங்கல் பொருள்.6. முல்லையினதுஆறாம் வேற்றுமை; அது : ஆறாம்
வேற்றுமை உருபு, கிழமைப்பொருள். (உடைமைப்பொருள்)7. முல்லைக்கண்ஏழாம் வேற்றுமை; கண் : ஏழாம்
வேற்றுமை உருபு, இடப்பொருள்.8. முல்லையே !எட்டாம் வேற்றுமை; விளிப்பொருள். (அழைப்பு)இந்த எடுத்துக்காட்டுகளில் முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் வேற்றுமை உருபுகள் இல்லை. மற்றவற்றில் அவ்வுருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து பெயர்ப்பொருளை வேறுபடுத்தின.
இத்தொடர்களில் மூன்று உறுப்புகள் உள்ளன.
1) வேற்றுமையை ஏற்ற பெயர்
2) வேற்றுமை உருபு
3) பயனிலைஇம் மூன்றின் துணை கொண்டே வேற்றுமையை அறிதல் வேண்டும்.