தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- ஐரோப்பியர் வருகைக்கான காரணங்கள்

  • 1.1 ஐரோப்பியர் வருகைக்கான காரணங்கள்

    ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் விளையும் வாசனைப் பொருள்களாகிய மிளகு, இலவங்கம், ஏலம், இஞ்சி போன்றவைகளின் பெருமைகளை அறிந்திருந்தனர். இவைகளுடன் மஸ்லின் துணியும் பெருமையுற்றிருந்தது. இவைகளைப் பெறவேண்டும் என்று எண்ணித் தொன்று தொட்டுத் தமிழகத்துடன் ஐரோப்பியர் வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதனை முந்தையப் பாடங்களில் படித்துள்ளோம்.

    கி.பி. 17ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த ஐரோப்பியர்கள் முதலில் வாணிகத்தைப் பரப்பும் எண்ணத்திலேயே வந்தார்கள். பின்பு அவர்கள் தமிழகத்தை ஆண்டு வந்த மன்னர்களின் நன்மதிப்பைப் பெற்றுத் தமிழகத்தில் தங்களது கிறித்தவ மதத்தைப் பரப்பினர். முதலில் சில மன்னர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் மங்கம்மாள் போன்றவர்கள் நல்லிணக்கத்தோடு ஐரோப்பியரின் மதக்கொள்கைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் போர்ச்சுகீசு, ஸ்பெயின் போன்ற இடங்களிலிருந்து வந்த கிறித்தவப் பாதிரியார்கள் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் தங்கி, தமிழ் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்து சிறிது சிறிதாகக் கிறித்தவ மதத்தைப் பரப்பலாயினர்.

    இவ்வாறு மதத்தினைப் பரப்பும் வேளையில் சிறுசிறு காரணங்களுக்காக ஏற்பட்ட சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுப் பொருளுதவி, ஆள் உதவி போன்றவைகளைக் கொடுத்துத் தங்களுடைய மேலாண்மையை நிலைநாட்ட ஆரம்பித்தனர். உதாரணமாக, பரதவ குல மக்கள் கடலில் முத்துக்களை எடுத்து வியாபாரம் செய்து வந்தனர். இப்பரதவ குல மக்களை அரேபிய நாட்டு வணிகர்கள் துன்புறுத்தி முத்துக்களைப் பெற்றனர். இதனால் இம்மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக் கிறித்தவ மதத்தைப் பரப்ப வந்த ஐரோப்பியர்களிடம் உதவியை நாடினர். அவர்களும் உதவி செய்து அம்மக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றினர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பரதவ குல மக்கள் கிறித்தவ மதத்தைத் தழுவலாயினர். இதன் காரணமாக ஐரோப்பியர்கள் தங்களது வலிமையைத் தெரிவித்தனர்.

    மராட்டியர் ஆட்சி நடக்கும்போது ஐரோப்பியர் படை பலத்தைக் காட்டி உதவலாயினர். இதுவே நாளடைவில் அவர்களுக்குத் தமிழகத்தில் நாடு பிடிக்கும் ஆவலைத் தூண்டியது. அச்சமயத்தில் தமிழகத்தில் போர்த்துக்கீசியருக்கு ஏற்பட்டிருந்த அரசியல் ஏற்றத்தையும், வாணிகச் செல்வாக்கையும் கண்டு ஐரோப்பியர்களுள் மற்றொரு பிரிவினரான ஆங்கிலேயர் மனம் புழுங்கினர்.

    இவ்வாறாக வாணிக நோக்கத்துடன் தமிழகத்துள் புகுந்து, கிறித்தவ மதத்தைப் பரப்பி, பின் நாடுகளைப் பிடிக்கும் எண்ணத்துடன் போர்த்துக்கீசியர், டேனியர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்கள் தமிழகத்திற்கு வந்தனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:43:25(இந்திய நேரம்)