தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தமிழகத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிகள்

  • 1.4 தமிழகத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிகள்

    திப்பு சுல்தான் போரில் இறந்துபட்டவுடன் அவனுடைய புதல்வர்கள் வேலூர்க் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். அப்போது ஆர்க்காட்டு நவாபாக முகமது அலி என்பவன் இருந்தான். அவன் பெயரளவில்தான் மன்னனாக இருந்தானே தவிர, அவனுடைய அரசாங்கப் பொறுப்புகளை எல்லாம் ஆங்கிலேயரே கவனித்து வந்தனர். மேலும் ஆங்கிலேயர்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டனர். அதிக வரிகளை வசூலித்தனர். இதனைச் சகித்துக் கொள்ள முடியாமல் தமிழகத்தில் ஆங்காங்கே கிளர்ச்சிகள் ஏற்பட்டன. அவ்வாறு ஏற்பட்ட கிளர்ச்சிகள் சுதந்திர மனப்பான்மையுடன் இருந்த பாளையக்காரர்கள் மத்தியில் இருந்தன. இனித் தமிழகத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்களைப் பற்றி இங்குக் காண்போம்.

    1.4.1 வீரபாண்டியக் கட்டபொம்மன் (கி.பி.1760-1799)

    மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்த பிறகு அவர்களுக்கு வரி வசூலித்துக் கொடுத்தும், படை வீரர்களைத் திரட்டிக் கொடுத்தும் வந்த பாளையக்காரர்கள் தனிக்காட்டு மன்னராக மாறி விட்டார்கள். இந்த வகையில் பாஞ்சாலங்குறிச்சி என்ற பாளையத்துக்குக் கட்டபொம்மன் என்பவன் கி.பி.1790இல் பாளையக்காரன் ஆனான். இவனுக்கும் ஆங்கிலேயருக்கும் வரி வாங்குவதில் சில கருத்து வேறுபாடுகளும், பூசல்களும் நடைபெற்று வந்தன. கி.பி.1797ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கட்டபொம்மன் ஆங்கிலேயருக்குக் கொடுக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் இராமநாதபுரத்தில் ஆங்கிலேயருடன் முரண்பாடு கொண்டிருந்தவர்கள் அனைவரையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். ஆங்கிலப் படைகளுக்கு உணவுப் பண்டங்கள் வழங்கும் பாளையக்காரனின் கடமை ஒன்றினின்றும் மீறினான். மேலும், ஆங்கிலேயருக்குத் திறை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மேல் அடிக்கடி படையெடுத்துச் சென்று மக்களைச் சூறையாடினான். ஆங்கிலேயருக்குத் துணிகள் வழங்கி வந்த நெசவாளரைத் துன்புறுத்தினான். இவற்றை அறிந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் இராமநாதபுரத்துக் கலெக்டர் ஜாக்சன் தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு உத்தரவிட்டான். கட்டபொம்மனும் சென்றான். ஆனால் அவனுக்கு ஜாக்சனுடைய பேட்டி கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து போர் ஏற்பட்டது. இரு பக்கமும் பலர் கொல்லப்பட்டனர். கம்பெனிப் படைத் தலைவன் கிளார்க் என்பவனும் கொல்லப்பட்டான். இறுதியாக மேஜர் பானர்மேனுக்கும் கட்டபொம்மனுக்கும் இடையில் கடும்போர் நடந்தது. போரில் தோல்வியுற்ற கட்டபொம்மன், கயத்தாறு என்னும் இடத்தில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான். இவ்வாறாகக் கட்டபொம்மனால் ஏற்பட்ட கிளர்ச்சி அடங்கிற்று.

    1.4.2 மருது பாண்டியர்

    கி.பி. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிவகங்கைச் சீமையானது பெரிய மருதுபாண்டியர் என்பவரின் ஆட்சியுடமையாயிற்று. அவருடைய தம்பி சின்ன மருது என்பவர், அவருக்குப் பெருந்துணையாக நின்றார். இவ்விரு சகோதரர்களிடத்தும் புதுக்கோட்டைத் தொண்டைமான் பகைமை காட்டினான். இவர்களுக்கு எதிராக ஆங்கிலேயருக்குப் பல வகையில் அவன் உதவிகள் புரிந்தான். இவ்விரு சகோதரரின் ஆட்சி சுமார் 21 ஆண்டுகள் நடைபெற்றது. ஆங்கிலேயர் மருது சகோதரர்களை அரியணையிலிருந்து இறக்கிவிட்டு உடையத்தேவன் என்ற ஒருவனை மன்னனாக்கினர். பின்பு மருதுபாண்டியர் இருவரும் ஆங்கிலேயர் வசம் சிக்குண்டு தூக்கிலிடப்பட்டு மாண்டனர்.

    1.4.3 தீர்த்தகிரி

    தமிழக விடுதலைப் போரில் வீரபாண்டியக் கட்டப்பொம்மன், மருது சகோரர்கள் முதலியோரை ஆங்கிலேயர் அழித்தபின் கொங்கு நாட்டில் கிளர்ச்சி நடந்தது. தீர்த்தகிரி என்ற கொங்கு நாட்டு வீரன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தினான். கி.பி.1799 முதல் 1805 வரை ஆங்கிலேயரைத் தீவிரமாக எதிர்த்தான். இவன் கொங்கு நாட்டில் ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டி ஒரு படையைத் திரட்டி எதிரிகளுடன் போரிட்டான். இவனையும் கி.பி.1805இல் ஆங்கிலேயர் அடக்கினர். தமிழகத்தில் கடைசியாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்றவன் தீர்த்தகிரியே ஆவான். இவனே பிற்காலத்தில் தீரன் சின்னமலை என்னும் பெயரால் தமிழக வரலாற்றில் புகழ் பெற்றான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:43:34(இந்திய நேரம்)