Primary tabs
1.2 தமிழகத்திற்கு வந்த ஐரோப்பியர்கள்
தமிழகத்திற்கு வாணிக நோக்கத்துடன் முதலில் புகுந்த ஐரோப்பியர்கள் பின்பு தங்களது கிறித்தவ மதத்தைப் பரப்புவதில் ஈடுபடலாயினர். அதன் பின்பு நாடுகளைப் பிடிக்கும் எண்ணத்துடன் தங்களது நாட்டிலிருந்து படைகளை இறக்கினர். இவ்வாறு தமிழகத்திற்கு வந்த ஐரோப்பியர் போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் ஆவர். இவர்கள் தமிழகத்திற்கு வந்து இறங்கி என்னென்ன செய்தார்கள் என்பதனை இத்தலைப்பின் கீழ் படிக்கலாம்.
இந்தியாவுக்குள் முதன் முதல் அடியெடுத்து வைத்த ஐரோப்பியர் போர்த்துக்கீசியர் ஆவர். அவர்கள் வாணிகம் புரிந்து பொருளீட்டும் நோக்கத்துடனே நாட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் பெரிதும் விரும்பி இந்நாட்டில் கொள்முதல் செய்த சரக்கு மிளகும் ஏனைய வாசனைப் பொருள்களும் ஆகும்.
போர்த்துக்கீசிய மாலுமி வாஸ்கோ-ட-காமா என்பவர் முதன்
முதலில் கி.பி. 1498இல் கள்ளிக்கோட்டை வந்தார். இவர் வந்த கடல் வழியே ஏனைய ஐரோப்பியரும் வந்து இந்தியாவுடன் கடல் வாணிகம் மேற்கொள்வதற்கு ஏற்றதொரு நெடும்பாதையாக உதவிற்று. வாணிகக் கப்பல்களைத் தொடர்ந்து போர்க் கப்பல்கள் வந்தன. வாணிகச் செல்வாக்கில் ஓடிய நாட்டம் காலப்போக்கில் நாடு பிடிக்கும் முனைப்பாக மாறிற்று. ஆதியில் நாட்டில் காலெடுத்து வைத்த வணிகர்களிடம் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் எண்ணமே எழவில்லை.
போர்த்துக்கீசியரின் செல்வாக்கானது வெகு துரிதமாக வளர்ந்து வந்தது. அவர்கள் கேரளத்துக் கடற்கரையில் பல குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். தம் வாணிகச் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும், அரசியல் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது சமய வளர்ச்சியைத் தூண்டி விடவும் போர்த்துக்கீசியர்கள் மக்களிடையே பழகலாயினர்.
மதுரையில் வீரப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் பெர்னாண்டஸ் பாதிரியார் என்பவரின் (Fr.Fernandez) தலைமையில் ஜெசூட் பாதிரியார்கள் கிறித்தவ மிஷன் (இயேசு கிறித்தவக் குழு) ஒன்றைத் தொடங்கினார்கள் (ஜெசூட் - ஏசு சபை). கிருஷ்ணப்ப நாயக்கரும் கிறித்தவ மிஷனுக்கு அனுமதி வழங்கியிருந்தார். உயர்வகுப்புக் குடி மக்களைக் கிறித்தவர்களாக மாற்றுவதே இந்த மிஷனின் சீரிய நோக்கமாகும். கிறித்தவ மிஷன் பாதிரியார்கள் மாதா கோயில் ஒன்றையும் எழுப்பினர். பெர்னாண்டஸ் பாதிரியார் பதினான்கு ஆண்டுகள் விடாமல் உழைத்தும் கிறித்தவ சமயம் பரப்புவதில் வெற்றி கண்டிலர். போர்த்துக்கீசியரைத் தமிழர்கள் பறங்கியர் என இழித்துக் கூறினர். போர்த்துக்கீசியர் மாட்டு இறைச்சியைத் தின்றதையும், மதுபானம் குடித்ததையும் தமிழர்கள் வெறுத்தனர். எனவே போர்த்துக்கீசியர் எவ்வளவோ படைபலமும், செல்வச் செழிப்பும் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களால் தமிழர்களின் உள்ளத்தை அசைக்க முடியவில்லை. எனவே மதுரை மிஷனின் தொடக்க முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
ராபர்ட்-டி-நொபிலி பாதிரியார் மதுரைக்கு வந்து பணியேற்ற பிறகு
மதுரை மிஷனின் சரித்திரமே மாறிவிட்டது. தொடக்கத்தில் அப்பாதிரியாரின் முயற்சிகளுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. மதுரை நாயக்கர்களின் படைகளுடன் கிறித்தவப் பாதிரியார்களும் கலந்து அணிவகுத்துச் செல்ல வேண்டியவர்களாக இருந்தனர். ஆனால் அதுவும் ஒரு நல்ல பயனையே விளைவித்தது. படைகள் திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் நொபிலி பாதிரியார் தாமும் உடன் சென்று ஆங்காங்குத் தம் சமயப் பணிகளைச் செய்து வந்தார். சத்தியமங்கலத்தில் கி.பி.1643இல் கிறித்தவப் பிரசாரத்துக்காக டி-காங்டா என்ற பாதிரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. செஞ்சியை அடுத்திருந்த பாளையக்காரன் ஒருவன், பாதிரியார்கள் கிறித்தவப் பணிகளை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இசைவளித்தான். இதனால் மதுரை மிஷனானது மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய ஊர்களின் எல்லைகளைக் கடந்து மேலும் பரவிச் சென்று வேலூர், கோல் கொண்டா தேசங்களிலும் பரவலாயிற்று. மதுரையில் இராணி மங்கம்மாள் கி.பி. 1689இல் அரசாட்சியை ஏற்றாள். அவள் கிறித்தவர்களிடம் பரிவு காட்டினாள். இதனால் பாதிரியார்களும் தம் சமயம் பரப்பும் பணிகளில் முனைப்பாகச் செயல்பட்டனர்.
இவர்கள் ஐரோப்பியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள். போர்த்துக்கீசியருக்கும் டச்சுக்காரருக்கும் இடையே அடிக்கடி பூசல்களும், போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இச்சமயத்தில் டச்சுக்காரர்களின் கை ஓங்கி இருந்தது. ஏனெனில் போர்த்துக்கீசியர் இலங்கையை டச்சுக்காரர் வசம் ஒப்படைக்க வேண்டியதாயிற்று. பின்பு கி.பி. 1658இல் தூத்துக்குடியையும், கி.பி. 1659இல் நாகப்பட்டினத்தையும் டச்சுக்காரர் போர்த்துக்கீசியரிடமிருந்து பறித்துக் கொண்டனர். அதேபோல் கேரளக் கடற்கரையில் போர்த்துக்கீசியர் வசம் இருந்த சில இடங்களும் டச்சுக்காரர்களின் கைக்கு மாறின. நாகப்பட்டினம் டச்சுக்காரர்களின் தலைநகரமாக அமைந்தது. இங்கு டச்சுக்காரர்கள் கோட்டை, கொத்தளங்களை வலிமையாகக் கட்டிக் கொண்டனர். அங்கு டச்சுக் கம்பெனியின் கவர்னர் தங்கினார். டச்சுப் பாதிரியாரான ஆபிரகாம் ரோகர் புலிக்காட்டில் தங்கித் தம் பணிகளைச் செய்து வந்தார்.
நாளடைவில் டச்சுக்காரர்களின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே போயிற்று. அவர்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிட்டியது. வாணிகத்திலும், கப்பல் ஓட்டுவதிலும், தொழில்கள் அமைப்பதிலும், பொருளாதாரத்திலும், அறிவு நுட்பத்திலும் டச்சுக்காரர்கள் ஏனைய ஐரோப்பியர்களை விடப் பலபடிகள் மிஞ்சி நின்றார்கள். தமிழகத்தில் வாணிகத்தைத் தொடர்ந்து நடத்தி வரவும், கைப்பற்றிய நாடுகளை ஆண்டு அனுபவிப்பதற்காகவும் ஹாலந்தில் ஐக்கியக் கம்பெனி ஒன்று நிறுவப்பட்ட பிறகு டச்சுக்காரர்களின் கைகள் வலுவுற்றன.
முதன் முதலில் டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகர்கள் தரங்கம்பாடியில் ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டு தங்களது வாணிகத்தைத் தொடங்கினர். இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்த சரக்குகளை மலேயத் தீவுகளுக்கு ஏற்றிச் சென்று விற்பனை செய்தனர். பின்பு அங்கிருந்து வாசனைப் பண்டங்களை வாங்கி வருவது இக்கம்பெனியின் சிறப்பான நோக்கமாக இருந்தது. ஆனால் இதுபோன்ற வாணிகத்தில் அவர்களுக்கு இலாபம் ஏதும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக டேனியர் தரங்கம்பாடியையும், வடக்கில் இருந்த சேராம்பூரையும் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் ரூ.12,50,000க்கு விற்றுவிட்டார்கள்.
பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி. 1664இல் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டது. கி.பி. 1668இல் சூரத்திலும், கி.பி. 1669இல் மசூலிப்பட்டினத்திலும் இக்கம்பெனியின் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. ஏனைய ஐரோப்பியரைப் போலப் பிரெஞ்சுக்காரர்களும் அரசியலில் ஈடுபடலாயினர். இவர்கள் வந்த காலத்தில் தமிழகத்தில் அரசியல் நிலைமை மோசமாக இருந்தது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சுக்காரர்கள் ஆங்காங்கு இடம் தேடிப் பிடித்து வந்தனர். கி.பி.1672இல் முதலில் சாந்தோமை முற்றுகையிட்டுக் கைப்பற்றிக் கொண்டு பின்பு அதைக் கி.பி.1674இல் இழந்து விட்டனர். பீஜப்பூர் சுல்தானின் கீழ்க் குறுநில மன்னனாக இருந்த ஷேர்கான் லோடி என்பவன் பெரம்பலூருக்கு அண்மையில் உள்ள வாலிகண்டபுரத்தில் அரசாண்டு வந்தான். அவனிடமிருந்து பிரான்சுவா மார்ட்டின் என்ற பிரெஞ்சுக்காரன் புதுச்சேரியைத் தானமாகப் பெற்றான். அப்போது பிரெஞ்சுக்காரர்களின் வாணிக நிறுவனம் அங்கு அமைக்கப்பட்டது. அன்றுமுதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை புதுச்சேரி தமிழகத்து வரலாற்றில் பல நிகழ்ச்சிகளுக்கு விளைகளனாக இருந்து வந்துள்ளது. மராட்டிய மன்னன் சிவாஜியின் படையெடுப்பின்போது கூடப் புதுச்சேரி இன்னல் உற்றது (கி.பி.1677). இருப்பினும் மார்ட்டினின் விடா முயற்சியால் பிரெஞ்சு வாணிகம் மேலும் மேலும் வளர்ந்து வந்தது. ஆனால் கி.பி.1693இல் புதுச்சேரி டச்சுக்காரர்கள் வசம் போயிற்று. எனினும் டச்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரியைக் குறுகிய காலத்திலேயே பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். மார்ட்டின் புதுச்சேரியில் கோட்டை எழுப்பியும், கொத்தளங்கள் அமைத்தும் அதை வளமுள்ள நகரமாக மாற்றினான். புதுச்சேரி பெரிய நகரமாக மாறத் தொடங்கியது. இதன் காரணமாக அவன் காலத்தில் புதுச்சேரியில் மக்கள் தொகை அதிகமாயிற்று. பின்னர் மார்ட்டின் சூரத்து, மசூலிப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள தொழிற்சாலைகளை மூடினான். இவன் பிரெஞ்சு நாட்டுக்காக 38 ஆண்டுகள் அயராது உழைத்துப் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கைத் தமிழகத்தில் நிலை நாட்டிக் கி.பி. 1706இல் காலமானான்.
இந்தியாவில் போர்த்துக்கீசியருக்கு ஏற்பட்டிருந்த அரசியல் ஏற்றத்தையும்,
வாணிகச் செல்வாக்கையும் கண்டு ஆங்கிலேயர் மனம் புழுங்கினர். இதற்காக ஆங்கிலேயர் கி.பி. 1600இல் கிழக்கிந்தியக் கம்பெனி என்னும் பெயரில் ஒரு வாணிக நிறுவனத்தை இங்கிலாந்து அரசி எலிசெபத்தின் ஆதரவுடன் நிறுவினர். சூரத்தில்தான் இக்கம்பெனியின் முதல் தொழிற்சாலை கட்டப்பட்டது. சர் தாமஸ் ரோ என்னும் ஆங்கிலேயர் கி.பி.1616-18ஆம் ஆண்டுகளில் டில்லி மொகலாயர் அரசவையில் அமர்ந்திருந்து தம் நாட்டு வாணிக முன்னேற்றத்திற்குப் பல உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றார். ஆங்கிலேயர் வாணிகத்தின் வளர்ச்சியிலேயே கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். இவர்கள் புலிக்காட்டில் தொழிற்சாலை ஒன்றை நிறுவ முயன்று தோல்வியுற்றனர். பிறகு கி.பி.1611இல் மசூலிப்பட்டினத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவினர். சிறிது சிறிதாக ஆங்கிலேயர் பல உரிமைகளைச் சென்னையில் பெற்றுக் கொண்டனர். ஐந்தாண்டுகள் கழித்துக் கம்பெனியின் கிழக்கிந்திய நாடுகளுக்குச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையே தலைமை ஆட்சி இடமாக அமைந்தது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
(கி.பி.1700இல் )
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
(இன்று)இவ்வாறு வளர்ந்து வந்த ஆங்கிலேயர் மொகலாயப் பேரரசிடமிருந்து பல உரிமைகளையும், வாணிகச் செல்வாக்குகளையும் கேட்டுப் பெற்றனர். மராட்டியருக்கும் போர்த்துக்கீசியருக்கும் இடையே ஏற்பட்ட போர்களினால் கம்பெனி வாணிகம் குறையத் தொடங்கியது. இது காரணமாகக் கம்பெனி தனது தற்காப்புக்காக இங்கிலாந்திலிருந்து ஏராளமான படைகளையும், போர்க் கருவிகளையும் இறக்குமதி செய்து கொண்டது. இப்படைபலத்தைப் பயன்படுத்தி ஆங்கிலேயர் அவ்வப்போது உள்நாட்டுப் போர்களில் தலையிட்டுத் தங்கள் போர்த்திறனையும் பொருள் பலத்தையும் வெளிப்படுத்தி நாடு பிடிக்கும் எண்ணத்தில் ஈடுபடலாயினர். இச்சமயத்தில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நாடு பிடிக்கும் போட்டியானது ஓங்கி வளர்ந்து பல போர்கள் விளைவதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கிற்று.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I