தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- இந்திய அரசியலில் மாற்றங்கள்

  • 5.1 இந்திய அரசியலில் மாற்றங்கள்

    இந்திய வைஸ்ராயான கர்ஸன் பிரபு வங்காளம் பெரியதொரு நிலப்பரப்பாக இருக்கிறது என்று எண்ணி அதனை 1905ஆம் ஆண்டில் மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என இரண்டாகப் பிரித்தார். வங்காளப் பிரிவினை காரணமாக மக்களிடையே பெருங்கிளர்ச்சி தோன்றியது. இக்கிளர்ச்சிக்குப் பின்னர் இந்திய வைஸ்ராயாக மின்டோ பிரபு பதவி ஏற்றார். இவர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய அமைச்சராக இருந்த மார்லி பிரபுவுடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டார். இதில் இந்தியாவுக்குச் சில உரிமைகளை வழங்கலாம் என்றிருந்தது. இவ்வுடன்பாட்டிற்கு மின்டோ-மார்லி சீர்திருத்தம் என்று பெயர். இவ்வுடன்பாடு கி.பி.1909இல் கையெழுத்தாயிற்று. இவ்வுடன்படிக்கையால் மத்திய சட்டசபைகளும், மாநிலச் சட்டசபைகளும் விரிவாக்கப்பட்டன. எனினும் இவ்வுடன்பாட்டின்படி யாதொரு பயனும் மக்களுக்கு ஏற்படவில்லை. இதன் மூலம் இந்தியருக்கு எந்த உரிமையும் சரிவரக் கிடைக்கவில்லை.

    இச்சமயத்தில் இந்திய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியும் அதனுடைய எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையருக்கு அடிமைப்பட்டுப் பல்வகையான இன்னல்களுக்கு இடையே வாழ்ந்துவந்த இந்தியருடைய நலனுக்காகப் பாடுபட்டு ஓரளவு வெற்றி பெற்று, 1917இல் காந்தியடிகள் இந்தியாவிற்குத் திரும்பினார். திரும்பிய உடனே காங்கிரஸ் அரசியல் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபடலானார். காங்கிரசும் காந்தியடிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டது.

    இதன் இடையில் 1919இல் மான்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத் திட்டம் ஒன்று வந்தது. இதன்படி மாநில அரசுகளுக்குச் சற்று விரிவான உரிமைகள் வழங்கப்பட்டன. அச்சீர்திருத்தத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட அரசில் காங்கிரஸ் பங்குகொள்ள மறுத்துவிட்டது. இத்திட்டத்தை அன்னிபெசன்ட் அம்மையார் எதிர்த்தார். இவர் தாமே ஹோம்ரூல் (சுயாட்சி) இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். இதனால் ஆங்கில அரசாங்கம் அவர் மேல் நடவடிக்கை எடுத்து அவரைச் சிறையில் அடைத்தது.

    மான்டேகு-செம்ஸ்போர்டு திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட அரசியலுக்கு இரட்டையாட்சி என்று பெயர். இதன்படி மாகாணக் கவர்னரே அரசாங்கத்தின் தலைவராக இருந்தார். அவருக்குத் துணைபுரிய ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் கவர்னரால் நியமிக்கப்பட்டவர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இருந்தார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்று அழைக்கப்பட்டனர். சென்னை மாநிலச் சட்டசபையில் மொத்தம் 132 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். அவர்களுள் 98 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; 11 பேர் உத்தியோகப் பற்றுடையவர்கள். ஏனைய 23 பேர் கவர்னரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆவார். இவர்கள் அரசாங்கத்துடன் எந்தவிதமான தொடர்பும் கொண்டிராதவர்கள் ஆவர். சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரைக் கவர்னர் ஆலோசனைக் குழுவில் சேர்த்துக் கொள்வார். ஆலோசனைக் குழுவில் கவர்னரால் நியமிக்கப்பட்டவர்களிடம் போலீசு, நீதி நிருவாகம், பொருளாதாரம், பாசனம், வரிவசூல் போன்ற பொறுப்புமிக்க ஆட்சித்துறைகள் ஒப்படைக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களிடம் கல்வி, பொதுப்பணித்துறை, சாலைகள், ஸ்தல ஸ்தாபனங்கள், சுகாதாரம், மருத்துவம், காடுகள், தொழில்கள் முதலியன ஒப்படைக்கப்பட்டன. கவர்னரால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் வெள்ளையராகவே இருப்பர். அமைச்சர்கள் இந்தியராக இருப்பர்.

    இவ்வாறாக இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:48:15(இந்திய நேரம்)