Primary tabs
5.3 தென்னிந்திய நல உரிமைச்சங்கம்
மான்டேகு-செம்ஸ்போர்டு திட்டத்தின் கீழ் இரட்டை ஆட்சி என்ற ஒன்று அமுல்படுத்தப்பட்டது. இந்த இரட்டை ஆட்சித் திட்டம் சில இடங்களில் சரிவர இயங்கவில்லை. ஆனால் சென்னையில் இந்த ஆட்சி முறைக்கு வெற்றி கிடைத்தது எனலாம். ஏனென்றால் வேறு எந்த மாகாணத்திலும் காணப்படாத ஒரு சமூகநிலை சென்னை மாகாணத்தில் காணப்பட்டது. இங்கு அரசாங்க அலுவல்களிலும், வேறு பல பொதுப் பணிகளிலும் உயர்மட்டத்தில் பிராமணரே இடம் பிடித்திருந்தனர். மொத்த மக்கள் தொகையில் பிராமணர்கள் நூற்றுக்கு மூன்று பேர்களே இருந்தனர். ஏனையோர் 97 பேர்களாக இருந்தும் அவர்களுக்குப் போதிய அளவு அரசாங்கப் பணிகளில் இடம் கொடுக்கப்படவில்லை. அவர்களுடைய படிப்பும் குன்றியிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டில் இருந்த வழக்கறிஞர்கள், டாக்டர்கள், எஞ்சினீயர்கள் ஆகியோரில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பிராமணர்களாகவே இருந்தனர். இத்தகைய நிலையில் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றால் பிராமணர்களின் ஆதிக்கமே பெருகும் எனப் பிராமணர்கள் அல்லாதவர்கள் எண்ணினர்.
சோழர் காலத்திலும், விசயநகரத்துப் பேரரசர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் ஆட்சியிலும், சமயத் தலைமையிலும் அமர்த்தப்பட்டிருந்த பிராமண சமூகம் ஆங்கிலேயர் ஆட்சியிலும் அந்த இடங்களைப் பிறருக்கு விட்டுக் கொடுக்கவில்லை. ஆரிய வழக்கின்படி மக்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பிராமணர் என்றும், பிராமணர் அல்லாத ஏனையோர் அனைவரும் சூத்திரர் என்றும் இருவிதப் பிரிவினராக மட்டுமே பிரிக்கப்பட்டனர்.
பொதுவாகப் பிராமணர் அல்லாதோர் சமுதாயத்தில் தாழ்வாக மதிக்கப்பட்டனர். இதன் காரணமாகச் சென்னையில் 1916 நவம்பர் 20ஆம் நாள் பிராமணர் அல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. இதில் தென்னிந்தியநல உரிமைச் சங்கம் என்று ஓர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்.பி.தியாகராசச் செட்டியார் அறிக்கை ஒன்று வெளியிட்டார். அவ்வறிக்கையில் பிராமணர் எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற்றுள்ளனர். அதுபோல் எல்லா வகுப்பினரும் சமநிலை பெற்ற பின் சுதந்திரம் பெறவேண்டும். அப்போதுதான் எல்லாருக்கும் நலம் பயக்கும் எனக் கூறியிருந்தார்.
இதுவே தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆகும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I