தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தமிழகத்தில் அரசியல் கட்சிகள்

  • 5.2 தமிழகத்தில் அரசியல் கட்சிகள்

    ஆங்கிலக் கல்வி மூலம் இந்தியர்கள் வெளியுலகத்தைப் பற்றி நன்கு அறிந்துகொண்டார்கள். குறிப்பாக அமெரிக்கா போராடிப் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலையைப் பெற்றது. மேலும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் பிரிட்டிஷார் விடுதலை வழங்கினர். இந்நாடுகள் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றதை அறிந்த இந்திய மக்கள், தாமும் பிரிட்டிஷார் ஆதிக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற வேட்கை கொண்டனர். இவ்வாறான விடுதலை வேட்கையினால் கல்கத்தாவில் இந்திய தேசியக் காங்கிரஸ் என்ற கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இதனை அடுத்து வேறு சில கட்சிகளும் தோன்றலாயின. அவைகளைப் பற்றி இங்குக் காணலாம்.

    5.2.1 இந்திய தேசியக் காங்கிரஸ்

    இந்நிறுவனம் 1885இல் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முதல் தலைவர் அன்னிபெசன்ட் அம்மையார் ஆவார். இந்நிறுவனத்தின் தொடக்கத்தில் 70 உறுப்பினர்களே இருந்தார்கள் என்று முன்பே கண்டோம். இதன் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது. அதில் ராஜா. சர்.டி. மாதவராவ், விஜயராகவச்சாரியார்,ஜி. சுப்பிரமணிய ஐயர், பி. ரங்கைய நாயுடு, போன்ற சென்னை மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் பங்கு கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் ஐரோப்பியராகிய எர்ட்லி நார்ட்டன் (Eardley Norton), ஜான் புரூஸ் நார்ட்டன் (John Bruce Norton) என்னும் இருவரும் பங்கு கொண்டனர். இந்நிறுவனம் இந்திய விடுதலைக்காக மிகவும் சிறப்பாகப் பாடுபட்டது.

    5.2.2 முஸ்லீம் லீக்

    19ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் இந்திய அரசியலில் இந்தியருக்கு மேன்மேலும் உரிமைகள் வழங்க வேண்டுமென்றும், சிவில் உரிமைகள் வழங்க வேண்டுமென்றும், சிவில் சர்வீஸ் பணியில் மேலும் பல இந்தியர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்றும் ஆங்கிலேய அரசுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுவதே காங்கிரஸ் நிறுவனத்தின் முழுநோக்கமாக இருந்து வந்தது. ஆனால் முஸ்லிம்கள் சிலர் காங்கிரஸ் நிறுவனத்துடன் ஒத்துழைக்காமல் தமக்கென்று ஒரு அமைப்பு வேண்டும் என்று எண்ணி முஸ்லீம் லீக் என்று ஒரு நிறுவனத்தை அமைத்தனர். ஆங்கிலேயர்கள் வெளிப்படையாகவே முஸ்லிம்கள் சார்பில் தம் ஆதரவைக் காட்டிவந்தனர்.

    5.2.3 நீதிக் கட்சி

    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற இயக்கத்தில் பெரும்பங்கு கொண்டவர்கள் டாக்டர்.டி.எம். நாயர், பி.டி. ராஜன் ஆகியோர் ஆவர். இவர்கள் பிராமணர்கள் அல்லாதார் கட்சி ஒன்றைத் தொடங்கி அதற்கு நீதிக் கட்சி (Justice party) என்று பெயர் சூட்டினர். இக்கட்சிக்காக ஜஸ்டிஸ் என்ற ஆங்கில நாளேடும் திராவிடன் என்ற தமிழ் நாளேடும் தொடங்கப்பட்டன.

    5.2.4 சுயராஜ்ஜியக் கட்சி

    மான்டேகு-செம்ஸ் போர்டு சீர்திருத்தத் திட்டத்தின்படி மாநில அரசுகளுக்குச் சற்று விரிவான உரிமைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் இத்திட்டத்தைக் காங்கிரசார் எதிர்த்தனர். அன்னிபெசன்ட் அம்மையாரும் இதனை எதிர்த்தார். மேலும் இவர் தாமே ஹோம்ரூல் என்ற இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். இத்திட்டத்தால் உருவாக்கப்பட்ட இரட்டை ஆட்சியை அலங்கரிக்கப்பட்ட சமாதி என்றும், இதனால் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட அமைதியைச் சமாதிக்குள் காணப்படும் அமைதி என்றும் காந்தியடிகள் விளக்கினார். மேலும் காந்தியடிகள் 1921ஆம் ஆண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் தந்தை பெரியார், இராஜாஜி ஆகியோர் காந்தியடிகளின் இந்த ஒத்துழையாமை இயக்கத்தில் உறுதியாக நின்றார்கள். எனவே காங்கிரஸ் கட்சியில் பலரும் சட்டசபைக்குப் போட்டியிடாமல் விலகியே இருந்தார்கள். இருப்பினும் காங்கிரசில் ஒரு சிலர் சட்டசபையை விட்டு விலகியிருப்பதைவிட அதில் நுழைந்து, அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளாமல், அரசாங்கத்தை நடைபெற விடாமல் தடுத்து நிறுத்தி விடவேண்டுமென்று கருதினர். அக்கருத்துக்கு உடன்பட்டவர்கள் சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு போன்ற சில தலைவர்கள் ஆவர். சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் சுயராஜ்ஜியக் கட்சி என்ற ஒன்று 1923இல் தொடங்கப்பட்டது. மோதிலால் நேரு அக்கட்சியில் பெரும்பங்கு ஏற்றார்.

    சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு முதலானவர்களின் அடிச்சுவட்டில் தமிழ்நாட்டில் சட்ட மன்ற நுழைவை வலியுறுத்தி, சீனிவாச ஐயங்கார், சத்தியமூர்த்தி, விஜயராகவாச்சாரியார் ஆகியோர் சென்னை மாகாண சுயராஜ்ஜியக் கட்சியை 1923ஆம் ஆண்டு தொடங்கினர். பின்பு இவர்கள் 1934ஆம் ஆண்டு இக்கட்சியை அகில இந்திய சுயராஜ்ஜியக் கட்சியோடு இணைத்து விட்டனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:48:18(இந்திய நேரம்)