தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கியம், இலக்கணம்

  • 1.1 இலக்கியம், இலக்கணம்

    பதினோராம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கிய நூலாகக் கல்லாடம் அமையும். யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம் போன்றவை இந்தக் காலக் கட்டத்தில் தோன்றிய இலக்கண நூல்களாக அமையும்.

    1.1.1 கல்லாடம்

    கல்லாடம் (கி.பி. 1050) 100 செய்யுட்களைக் கொண்டது. பிற்காலத்தில் திருவிளையாடல் புராணங்கள் தோன்ற இது அடிப்படையாக அமைந்தது. வைணவ, சமணப் புராணங்கள் தோன்றவும், வடமொழி நூல்களின் தொடர்புகள் மிகுவதற்கும் இது வழிவகுத்தது. இயற்கைக் காட்சியின் வருணனை இதில் அதிகம் உண்டு. ஒரு முறை படித்து விட்டால் இன்னும் பலமுறை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கும். ‘கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே’ என்னும் பழமொழி இந்நூலின் பெருமையை விளக்கும். இதன் ஆசிரியர் கல்லாடர். இவர் சிவபெருமானிடமும், முருகனிடமும் தாம் கொண்டிருந்த அன்பை நன்கு காட்டுகிறார். உலகியல் செய்திகளையும் சில பழமொழிகளையும் சுட்டுகிறார். தமிழை இவர் போற்றியிருப்பதைக் காணுங்கள்.

    விரிதிணை ஐந்தும் தேன் உறை தமிழும்... (9)

    (விரிதிணை ஐந்து = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை.)

    ‘குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றவாறு அமைந்த ஐவகை நிலமும் தேனையும் விட இனிமையான தமிழும்’ என்பது இதன் பொருளாகும். மற்றொரு பாடலில், ‘அமுதம் போலச் சுரந்து எழுந்து மகிழ்ச்சியூட்டுவதற்குக் காரணமாகிய தமிழாகிய கடல்’ என்கிறார்.

    அமுதம் ஊற்றெழுந்து நெஞ்சம் களிக்கும்
    தமிழ் என்னும் கடலை .......
    (17)

    வைணவர்கள் இராமாயண, மகாபாரதக் கதைகளைப் பரப்பியதைப் போல, சைவர்கள் சிவனின் திருவிளையாடல்களை மக்களிடையே எடுத்துரைத்தனர். இவ்வகையில் சமய உணர்வுகளை மிகுவிக்க இலக்கியம் துணை புரிந்துள்ளது. கல்லாடம் திருவிளையாடல் புராணக் கதைகளைக் கொண்டது. சமயம் என்ற நிலையைவிடச் சமூகம் என்ற நிலையிலும் இவ்விலக்கியம் சிறப்புப் பெறுகிறது.

    1.1.2 இலக்கண நூல்கள்

    பதினோராம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்க இலக்கண நூல்களாக யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சமய இலக்கிய வளர்ச்சியின் தாக்கம் முற்றிலும் பரவியபின் இதுவரை அதிகம் கவனம் செலுத்தப்படாத துறையான இலக்கணத்தில் இக்காலப் புலவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொல்காப்பியம் தோன்றிய காலத்திற்குப் பின் இக்காலக்கட்டத்தில் இலக்கண நூல்கள் எழுதப்பட இவையே காரணம் எனலாம்.

    • யாப்பருங்கலம்

    யாப்பருங்கலம் (கி.பி. 1000) அமிர்தசாகரரால் எழுதப்பட்டது. அருக தேவனுக்கு வணக்கம் கூறி நூலைத் தொடங்குவதால் அவர் சமணர் என்பது தெளிவாகிறது. இந்நூல் யாப்பிலக்கண நூலாகும். ‘அருங்கலம்’ என்றால் ‘அரிய அணி’ எனப்படும். இலக்கணப் பெயர் தெரிவதற்காக ஆசிரியர் இவ்வாறு பெயரை அமைத்துள்ளார். இந்நூல் யாப்பருங்கல விருத்தி என்றும் அழைக்கப்படுகிறது. காலம் செல்லச் செல்ல இந்நூலைப் பயில்வார் குறையவே, இவர் எழுதிய மற்றொரு நூலான யாப்பருங்கலக் காரிகையே இன்றும் தமிழ்க் கல்வியாளர்களிடம் ஆட்சியுடையதாக உள்ளது.

    • யாப்பருங்கலக் காரிகை

    யாப்பருங்கலக் காரிகை (கி.பி. 1025) யாப்பருங்கலத்தைவிடச் சுருக்கமாகவும், எளிமையாகவும் உள்ள நூல். யாப்பருங்கலத்தையொட்டி இதுவும் மூன்று இயல்களைக் கொண்டு அமைந்துள்ளது. மனப்பாடம் செய்வோருக்கு உதவியாக ஆசிரியரே ஒவ்வொரு இயலிலும் அமைத்து சூத்திரங்களின் முதல் தொடரைச் சூத்திரமாக அமைத்துள்ளார். காரிகை தோன்றிய பிறகு வேறு எந்தவொரு யாப்பிலக்கண நூலும் தோன்றவில்லை. பிற பிரிவுகளில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றியிருந்தும், யாப்புத் துறையில் எந்த நூலும் தோன்றாமை இதன் பெரும் தகுதிக்குச் சான்றாக உள்ளது.

    • வீரசோழியம்

    வீரசோழியம் (கி.பி. 1060 - 75) இக்காலத்தில் தோன்றிய மற்றோர் இலக்கண நூலாகும். இதனை எழுதியவர் பொன்பற்றி என்னும் ஊரைச் சேர்ந்த புத்தமித்திரனார் என்பவர் ஆவார். இவர் பௌத்த சமயத்தவர். இச்சமயத்தவர் செய்த ஒரே இலக்கண நூல் என்ற பெருமை இந்நூலுக்கு உண்டு. சமணர்கள் காட்டிய ஆர்வம், பௌத்தர்களால் இலக்கணத்தில் காட்டப் பெறவில்லை. இந்நூலில் பௌத்தத் தத்துவங்கள் ஆராயப் பெறுகின்றன. இந்நூலாசிரியர் வீரராசேந்திரன் (கி.பி. 1063 - 70) அவையில் தலைமைப் புலவராக இருந்தவர். அரசன் இவரை இவ்விலக்கணம் செய்யப் பணித்தான் எனலாம்.

    வீரசோழியம் மிகச் சுருக்கமாக ஐந்து இலக்கணங்களையும் சொல்ல முயல்கிறது. வடமொழி இலக்கணத்தையொட்டித் தமிழில் இலக்கணம் கூற முற்பட்ட புது முயற்சியே இந்நூலாகும். தமிழ்த் தொல்காப்பியம், வடமொழித் தண்டியாசிரியர் செய்த காவியாதரிசம் முதலியவை இந்நூலாசிரியரின் மூல நூல்கள் ஆகும்.

    சந்தி பற்றி வீரசோழியம் கூறும் இலக்கண விதி பிற்காலத்தில் எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டதென்பதைக் கந்த புராணம் அரங்கேற்றம் பற்றிய வரலாறு கூறுகிறது. அதில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் வரி, (‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்பதாகும். திகழ் + தசக் கரம் = திகட சக்கரம் என்பதாயிற்று என்பர்.)

    மேற்குறிப்பிட்ட இந்தச் சந்திக்கு இலக்கணம் இல்லை என அரங்கேற்றத்தின்போது ஒருவர் மறுத்துக்கூற, மறுநாள் முருகப் பெருமானே நூலாசிரியர் கச்சியப்பருக்காக அருள் சுரந்து ஒரு தமிழ்ப்புலவர் வடிவில் வந்து, வீரசோழிய இலக்கணத்தைக் காட்டி, அதில் இதற்கு விதி இருப்பதைத் தெரிவித்தார் என்கிறது கந்த புராண அரங்கேற்ற வரலாறு.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 13:51:22(இந்திய நேரம்)