தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உரைகள்

 • 1.2 உரைகள்

  இக்காலப் பகுதியில் சிலப்பதிகாரம், திருக்குறள் முதலியவற்றிற்கு உரைகள் எழுந்தன. பிற உரை நூல்களாக யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, தொல்காப்பிய உரை போன்றவற்றையும் சுட்டலாம்.

  1.2.1 சிலப்பதிகார அரும்பதவுரை

  சிலப்பதிகார அரும்பதவுரையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்த உரையானது நூல் முழுமைக்கும் உள்ளது. இவ்வுரையாசிரியர் தாம் அறிந்த வரையில் இசை, நாடகம் ஆகிய பகுதிகளில் பல மேற்கோள்களையும், மரபுகளையும் உணர்த்தியுள்ளார். பொதுவாக மிகவும் சுருக்கமாக உரை எழுதும் இவர், அரங்கேற்றுகாதை, கானல் வரி முதலிய இடங்களில் மிக விரிவாக எழுத, இவ்வுணர்வினைக் காரணமாகக் கூறலாம். இவர் மேற்கோளாகக் காட்டியுள்ள நூல்களுள் தெரிந்தவை கலித்தொகை, புறநானூறு, திருமுருகாற்றுப்படை, திருக்குறள், புறப்பொருள் வெண்பாமாலை, திவாகரம் போன்றவை ஆகும். இவர் பெயர் குறிப்பிடுகின்ற மேற்கோள் நூல்கள் நற்றிணை, மதுரைக்காஞ்சி, சிந்தாமணி போன்றவையாகும். பெயர் தெரிந்தும் கிடைக்காத நூல்களாக ஆசிரிய மாலை, வளையாபதி போன்றவற்றைச் சுட்டலாம்.

  சில சொற்களுக்கு இவர் கூறும் விளக்கம் சுவையாக உள்ளது. உதாரணத்திற்குச் சிலவற்றைக் காண்போம்.

  ஒழியா விளக்கு
  விடி விளக்கு
  பரதவர்
  கடலோடிகள்
  வெண்குன்றம்
  சுவாமிமலை

  இந்த உரையாசிரியர் சிறந்த வடமொழி வல்லுநர். இவர் கையாண்டுள்ள சில வடமொழிச் சொற்களைக் காண்போம் :

  கருணை மறவ
  கிருபா வீரனே
  வானவர் போற்றும் வழி
  மோட்ச மார்க்கம்

  1.2.2 திருக்குறள் உரை

  மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் திருக்குறள் உரை பரிப்பெருமாளால் எழுதப்பட்டது. கால முறைப்படி கூறும்போது மணக்குடவர், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர், பரிதியார் போன்ற ஐவரைக் கூறலாம். (தொண்டை மண்டல சதகம் 41ஆம் பாடல் உரையின் மேற்கோளாகக் காணப்படும் வெண்பாவிலிருந்து இத்தகவல் கிடைக்கிறது.) பரிப்பெருமாள் குறித்து எவ்விதச் சிறப்பான செய்தியும் இல்லை. இவர் மணக்குடவர் உரையை அப்படியே பின்பற்றி, தேவையான இடத்தி்ல் திருத்தியும், மாற்றியும் எழுதியுள்ளார். பரிப்பெருமாள் தருக்க ரீதியாகவும், மறுப்புகளோடும் எழுதும் திறம் பெற்றவர். அலங்காரம் செய்யும் பழக்கம் இவரிடம் இல்லை. இவர் உரை பல இடங்களில் பொருளுரையும், நயமும் கொண்டதாக உள்ளது.

  பிற மதங்களையும், கொள்கைகளையும் பல இடங்களில் சுட்டுகிறார். எடுத்துக்காட்டாகக் கீழ்க் காண்பவற்றைக் கூறலாம்:

  சுக்கிர மதம் (503)
  துரோணாசாரியார் மதம் (504)
  கௌடில்யர் மதம் (505)

  • உரையின் சிறப்பு

  பழமொழி போல உலகியற் கருத்துகளை இவர் தெரிவிப்பதும் மிகவும் அழகாக அமைந்துள்ளது. பொதுவாகக் கூறுமிடத்து, இவர் உரை சுவை தருவதாயும், நேரே பொருளை உணர்த்துவதாயும் உள்ளது.

  1.2.3. பிற உரை நூல்கள்

  பிற உரை நூல்களாக யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, தொல்காப்பிய உரை போன்றவற்றைக் கூறலாம்.

  • யாப்பருங்கல விருத்தியுரை

  எழுதியவர் பெயர் தெரியவில்லை. இவர் மேற்கோள் காட்டியுள்ள பாடல்களில் மிகப் பல அருகன் துதியாக உள்ளன. இவருடைய ஆசிரியர் (அமிதசாகரர்) சமணராக இருப்பதால், இவரும் சமணராக இருக்கலாம். பிற சமயங்களையும் இவர் போற்றுகின்றார். முந்தையோர் கருத்துகளைக் கூறும் போது இவர் கீழ்க்காணும் முறைகளைப் பயன்படுத்துகின்றார்:

  1) இவை ஒருசார் ஆசிரியர் கொள்கை
  2) ஒருசார் வட நூல் வழித் தமிழாசிரியர் இவ்வாறு கூறுகிறார்.
  3) மாபெரும் புலவர்
  4) புராணக் கவிஞர்

  இவ்வுரைக்காரர் பல நூல்களைச் சுட்டுகிறார். உதாரணத்திற்குச் சிலவற்றை இங்கே காண்போம் :

  கேசி
  காலகேசி, குண்டலகேசி, நீலகேசி
  ஊசிமுறி
  இடைக்காடனார் பாடியது
  மாலை
  அணிநந்த மாலை, தேசிக மாலை, பன்மணி மாலை


  • யாப்பருங்கலக் காரிகையுரை

  இது இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு உரை. இதன் ஆசிரியர் குணசாகரர். இவர் அமிதசாகரரின் மாணாக்கர். பெரும்பாலும் யாப்பருங்கல உரையில் வரும் மேற்கோள்களையே தருகின்றார். மறைந்து போன நூல்களையும், இப்போதுள்ள சில நூல்களையும் சுட்டுகிறார். அதிகமாகச் சுட்டுபவை சூளாமணியும், திருக்குறளும் ஆகும். இவர் காலத்திலேயே இந்நூலைப் பயில்வோர் அதிகமாயினர். அவர்களுக்கு உதவ இவர் இந்நூலுக்கு உரை வகுத்தார். சமயத்தால் சமணராயினும், பிற சமயங்களையும் போற்றியுள்ளார். இந்நூல் யாப்பருங்கலத்துக்கு அங்கமாய் (பகுதியாய்) அலங்காரம் உடையதாகச் செய்யப்பட்டது என்பது இதன் சிறப்பாகும்.

  • தொல்காப்பிய உரை

  இக்காலத்தில் தோன்றிய மற்றொரு உரை தொல்காப்பிய உரையாகும். தொல்காப்பியத்துக்குப் பலர் உரை செய்துள்ளனர். முதல் உரையாகிய இதனைச் செய்தவர் இளம்பூரணர். தாமாகவே முனைந்து இவர் தொல்காப்பியத்தைக் கற்றார் எனலாம். இவ்வுரையைத் தவிர இவர் வேறு எந்த நூலும் எழுதவில்லை. சோழ நாட்டைச் சேர்ந்த இவர், சமண சமயத்தவர். அனைத்துச் சமயங்களையும் போற்றும் பாங்கும் இவரிடம் இருந்தது. ‘ஆசீவகப்பள்ளி’ என்று சமணர் பள்ளியைக் கூறுமிடத்து, குமரக்கோட்டம் பிரமக்கோட்டம் என்பவற்றையும் குறிப்பிடுகிறார். இதன் பின் வேற்றுமையுணர்வின்றி முறையாகக் கீழ்வரும் கடவுளர் மீதான வணக்கப் பாடல்களை எடுத்துக் காட்டுகிறார்:

  அருகன்
  திருமால்
  சிவபிரான்
  ஆதிநாதர்
  விநாயகர் (359 ஆம் சூத்திரவுரை)

  • உரையின் சிறப்பு

  ‘தமிழ் நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்’, என இவரைப் பற்றி, சிவஞான முனிவர் குறிப்பிடுகின்றார். இவருடைய உரை, தமிழ்ப் பண்பாட்டைப் போற்றிக் கூறுவதாகும். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய அனைத்திற்கும் இவர் உரை எழுதியுள்ளார். தெளிவாகவும், சுருக்கமாகவும் நடுநிலைமையோடும் இவர் எழுதியுள்ளார்.

  ஆங்காங்கு இவர் சுவையான சொற் பொருள்கள் பலவற்றைக் கூறுகின்றார். இங்குச் சிலவற்றைக் காண்போம்:

  செறிவு
  அடக்கம்
  நிறைவு
  அமைதி
  செப்பு
  சொல்லுதல்

  இவரைப் பற்றி மு. இராகவையங்கார் கூறும் பாராட்டைக் காண்போம்:

  • பாராட்டுகள்

  ‘பிறர் உட்புகுந்து காணமுடியா வண்ணம் இருண்டு கிடந்த தொல்காப்பியம் எனும் சரக்கறையுள் தம் அறிவென்னும் அணையா விளக்கைக் கொண்டு துருவி ஆங்கே குவிந்து கிடந்த அரதனக் குவியல்களை (இரத்தினக் குவியல்) உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார் இவரே’ ‘பேச்சு நடையை ஒட்டியே எழுத்து நடையும் சென்றால்தான் மொழி வளர்ச்சியுண்டு எனப்படும் கருத்திற்கேற்ப இவ்வியல்பை ஓரளவு இவருடைய உரையில் காணலாம்’ என்கிறார் மு. அருணாசலம்.


  தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1)
  கல்லாடம் எதைப் பற்றிக் கூறுகிறது?
  2)
  திருக்குறளுக்கு உரை செய்தவராக இப்பாடத்தில் குறிக்கப்படுபவர் யார்?
  3)
  அமிர்தசாகரர் செய்த இரு இலக்கண நூல்கள் யாவை?
  4)
  பரிப்பெருமாள் உரையில் சுட்டப்படும் மதங்களின் பெயர்களைக் கூறுக.
  5)
  தொல்காப்பியத்துக்கு இளம்பூரணர் எழுதிய உரையில் சுட்டப்படும் சுவையான சொற்பொருள்களைக் கூறுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 16:51:32(இந்திய நேரம்)