Primary tabs
-
5.0 பாட முன்னுரை
பதின்மூன்றாம் நூற்றாண்டிலும், பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சோழப் பேரரசும், பாண்டிய அரசும் அழிந்தன. அதனால் குறுநில மன்னர்கள் ஆட்சி ஏற்பட்டது. இக்காலப் பகுதியில் தமிழகத்தில் வலிமையான அரசு எதுவும் இல்லை. குழப்பம், போர், கொந்தளிப்பு இல்லாத நிலை. சமய நூல்கள் பெருகின. உலகியல் துறையில் மக்கள் மனம் ஒடுங்கியிருக்க வேண்டிய நிலை காரணமாக ஆன்மிகத் துறையில் அவர்கள் உள்ளம் விரிவு காண முயன்றது. ஞான மார்க்கத்தில் இக்காலத்தில் நூல்கள் பெருகியது போல வேறு எந்தக் காலத்திலும் பரவவில்லை.
முகமதிய நாகரிக மோதல், மக்கள் மனத்தில் புரட்சியை உண்டாக்கியது. புனிதம், நாகரிகம், தெய்வீகம் அனைத்தும் முகமதியர்களால் பாதிக்கப்பட்ட போது மக்கள் மனத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக முன்னைவிட அதிகமான சமயப்பற்றும், தெய்வ பக்தியும் ஏற்பட்டு, சமய இலக்கியம் தோன்ற வழிகோலியது. மக்கள் மனத்தில் இக்கொந்தளிப்பு நிலைத்து, எவ்வித முடிவும் காணாமல் தத்தளிப்பு நிலவியது.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பல பெரியோர்களால் புதிய ஞான மரபுகள் எழுந்தன. சிற்றம்பல நாடிகள் வாயிலாக ஞானாசிரியர் பல பிரிவுகளாகப் பிரிந்தனர். சீகாழிக் கண்ணுடைய வள்ளல் ஆதீனம் இக்காலத்தில் தோன்றியது. திருவாவடுதுறை ஆதீனம், காஞ்சி ஞானப்பிரகாசர் ஆதீனம், தருமபுரம் ஆதீனம், துழாவூர் மடம், செப்பறை மடம் முதலியவை பிற்காலத்தில் தோன்றக் காரணமாயிருந்த பெரியோர் பலர் இக்காலத்தில் தோன்றினர்.