Primary tabs
5.4 பிரபந்தங்களும் சித்தர்பாடல்களும்
பதினான்காம் நூற்றாண்டில், பிரபந்த வகை நூல்கள் சிலவும், பிறவகை நூல்களும் எழுதப்பட்டன.
கோவை, மாலை போன்ற பிரபந்த நூல்கள் இக்காலக் கட்டத்தில் தோன்றின.
- கருமாணிக்கன்கோவை
இந்தப் பிரபந்தம் இக்காலப் பகுதியில் தோன்றியது. கப்பலூரில் வாழ்ந்த கருமாணிக்கன் என்ற யாதவகுல வள்ளல் மீது இக்கோவை பாடப்பட்டது. காலத்தால் பழமையான நூல்களுள் இதுவும் ஒன்றாகும். நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இக்கோவை 400 பாடல்களைக் கொண்டது. ஆசிரியர் திருமால் பக்தியுடையவர் என்பதை, பாடலின் அடிகள் உணர்த்துகின்றன. திருக்கோவலூரில் இருந்த வைணவ ஆசாரியார் ஒருவரைக் கருமாணிக்கன் கப்பலூருக்கு அழைத்துச் சென்று சிறப்புச் செய்தான் என்னும் செய்தியை இந்நூல் தெரிவிக்கின்றது.
- மதுரைக்கோவை
இது, இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு கோவையாகும். இதனை இயற்றியவர் சங்கரநாராயணர் என்பவர். கோவைப் பிரபந்த வரிசையில் பாண்டிக்கோவை, திருக்கோவையார், குலோத்துங்கசோழன் கோவை, தஞ்சைவாணன் கோவை, அம்பிகாபதிக்கோவை, நாலாயிரக்கோவை போன்ற பல கோவை நூல்கள் உள்ளன. இவ்வரிசையில் மிகவும் பழமையான கோவைகளில் மதுரைக்கோவை ஒன்றாகும். இதன் செய்யுள் தொகை 403 ஆகும். இந்நூல் மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கேசப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. திருவிளையாடற் புராண சரிதங்கள் பலவற்றை ஆசிரியர் இக்கோவையுள் சுட்டிக் காட்டியுள்ளார். 25 வரலாறுகள் இதில் கூறப்பட்டுள்ளன. இலக்கண விளக்கவுரை மேற்கோள் அமைப்பை ஆராயும்போது, ஆசிரியர் பண்டைய நூல்கள் என்று தாம் கருதியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறார் எனப் புலப்படுகிறது.
- பல்சந்த மாலை
பல்சந்த மாலை என்பது 96 வகை பிரபந்தங்களுள் ஒன்று. இப்போது இந்நூல் கிடைக்கவில்லை. இந்நூலில் 8 பாடல்கள் உள்ளன. வேறு எங்கும் இதன் பாடல்கள் சொல்லப் பெறவும் இல்லை. கிடைக்கின்ற பாடல்கள் கட்டளைக் கலித்துறையில் அமைந்தவையாகும். இவை கலித்துறையாக உள்ளதாலும், அகப்பொருளையே கொண்டுள்ளதாலும் கோவை போன்ற நூலோ என்ற ஐயம் உண்டாகிறது.
சித்தர்களின் பங்களிப்பு முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்காங்கே இருந்துள்ளது. சித்தர் பாடல்கள், அவர்களின் வரலாறு பற்றித் தனியாகப் படிக்கவுள்ளோம் (15ஆம் நூற்றாண்டு - பாடப்பகுதி). இக்காலப் பகுதியில் தோன்றிய சித்தர்கள் பற்றி இங்குக் காண்போம்.
- சிவவாக்கியர் பாடல்கள்
சிவவாக்கியர் தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களுள் ஒருவர். பதினெண் சித்தர்ஞானக்கோவை என்ற தொகுப்பு இவருடைய பாடல்களையே முதலாவதாகக் கொண்டுள்ளது. இவரது பாடல் தொகுப்பில் கடைசியாக உள்ள பாடல்,
நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே...என்று தொடங்கும். இப்பாடல் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த பாடல் எனலாம். சிவவாக்கியர் பாடல்களில் குலாமர் என்ற சொல் காணப்படுகிறது. குலாம் இடுபவர் குலாமர். குலாம் இடுதல், அடிமைத்தொழில் புரிதல், அடிமையாயிருத்தல் போன்றவை போலிச் சடங்குகளுக்கு அடிமையாயிருத்தலையே குறிக்கின்றன. தமிழ்நாட்டில் முகமதியர் ஆதிக்கம் ஏற்பட்ட காலத்தில் அவர்களுடைய சொற்கள் பல தமிழில் புகுந்தன. அவ்வாறு புகுந்த சொற்களில் இதுவும் ஒன்று. குலாமர் என்ற சொல் வரும் பாடலைக் கேளுங்கள்:
கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே(பாடல் 35)
- பட்டினத்தார் பாடல்கள்
பட்டினத்தார் என்று கூறும் போது தமிழறிஞர்கள் பட்டினத்தார் இருவரைக் கூறுவர். முதல் பட்டினத்தார், நம்பியாண்டார்நம்பியால் குறிப்பிடப்பட்டவர். நம்பியின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இறுதி. பட்டினத்தார் பாடிய பாடல்களில் ஐந்து பிரபந்தங்கள் பதினோராம் திருமுறையுள் தொகுக்கப் பெற்றுள்ளன. இந்தப் பட்டினத்தார் 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்.
மேற்கண்ட பிரபந்தங்கள் அல்லாமல், பட்டினத்தடிகள் பெயரால் பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு என்ற ஒரு பாடல் தொகுதி வழக்கத்தில் உள்ளது. இவற்றைப் பாடியவர் முன்கூறிய பட்டினத்தார் அல்லர் என்றும், இவை பட்டினத்தார் என்ற பெயரோடு சில நூற்றாண்டுகளின் பின்பு வாழ்ந்த மற்றொரு பட்டினத்தார் பாடியவை என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இக்காலப் பகுதிக்கு நாம் எடுத்துக் கொள்வது இரண்டாம் பட்டினத்தாரே. (ஒளவையாரைப் பற்றிப் படிக்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளவையாரைப் பற்றி முந்தைய பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம்).
தமிழ்நாட்டில் பிச்சையெடுப்போர்கூட, சில பக்தருடைய அருட்பாசுரங்களைப் பாடிப் பிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களில் பட்டினத்தார் பாடலைப் பாடுவோர் உளர். மற்ற சித்தர்களைப்போல இவருடைய பாடல்களிலும் உலக வாழ்க்கையின் நிலையாமை, அடியவர் சிறப்பு, பக்தியின் சாதனை, அருளின் அனுபவம், போலிக் கிரியைகளைப் பழித்தல், உண்மை அன்பின் உயர்வு முதலியவை மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும் சிறப்புடையது என்றாலும், தில்லை, காளத்தி பற்றிய பாடல்கள் மிகவும் சுவையுடையவையாகும். உள்ளத்தில் இறைவன் உறைகின்ற முறையை உணர்ந்த பெருமிதம் பாடல்கள்தோறும் காணப்படுகிறது.
- பத்திரகிரியார் பாடல்கள்
பத்திரகிரியார் என்பவர் இக்காலப் பகுதியில் பேசப்படும் மற்றொரு சித்தர். இவருடைய வரலாறு பட்டினத்தார் (இதற்கு முன்பு விளக்கப்பட்ட இரண்டாவது பட்டினத்தார்) வரலாற்றோடு தொடர்புடையது. பத்திரகிரியாரின் பெயரை முதன்முதலாகக் கண்ணுடைய வள்ளல் குறிப்பிட்டுப் பாடுகின்றார்.
பட்டினத்துப்பிள்ளையினைப் பத்ரகிரி யைப்பரவி
விட்டு விட மாட்டார்வெறுவீணர்(ஒழிவிலொடுக்கம், 167)
235 கண்ணிகள் கொண்ட சிறு நூலை இவர் பாடியுள்ளார். இவர்தம் பாடல் கருத்தையும் சொற்களையும் தத்துவப் பிரகாசத்திலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார். இந்நூலில் 178ஆம் பாடலைக் கேளுங்கள் :
எவரெவர்கள் எப்படிக் கண்டு எந்தப்படி நினைத்தார்
அவரவர்க்குத் தான் அப்படி ஆவதுவும் எக்காலம்இக்கருத்தும் சொற்களும் தத்துவப்பிரகாசம் 137ஆம் பாடலில் பூசையை முடித்தவிடத்து வேண்டுகோளாகக் கூறும் இடத்தில் காணப்படுகின்றன.
தேவனே எவரெவர்எப்படிச் சிந்தித்தார்
சிந்தித்த இடத்து அந்த வடிவு ஆகை திடமே(ஆகை = ஆதல்)