தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கணம், உரைகள்

  • 5.2 இலக்கணமும், உரைகளும்

    பதினான்காம் நூற்றாண்டில், சில இலக்கண நூல்களும் சிறப்புடைய சில உரைகளும் தோன்றின.

    5.2.1 இலக்கணம்

    இக்காலப் பகுதியில் சிறப்புடைய எந்த இலக்கண நூலும் எழவில்லை எனலாம். இருப்பினும் இக்காலத்தில் தோன்றிய சில நூல்கள் பற்றி இங்குக் காணலாம்.

    • களவியற்காரிகை

    இக்காலப் பகுதியில் தோன்றியது. களவியல் என்பது இறையனார் களவியல் என வழங்கப்படுகின்ற இறையனார் அகப்பொருள் நூலாகும். அகப்பொருள் இலக்கணம் இல்லையே எனக் கவலையுற்ற பாண்டிய மன்னனுக்காக மதுரை சோமசுந்தரக் கடவுள் அறுபது அகப்பொருள் சூத்திரங்களைச் செப்பேட்டில் எழுதித் தந்ததாக அந்நூல் உரையும், திருவிளையாடல் புராணமும் கூறும். இக்களவியல், நூற்பாவால் ஆன 60 சூத்திரங்களைக் கொண்டது. இந்த 60 சூத்திரங்களுக்கு நேராக 60 கட்டளைக் கலித்துறையால் அக்களவியலைத் தழுவி, மற்றோர் அகப்பொருள் இலக்கண நூலாக எழுதப்பட்டுள்ளது. அதுவே களவியற்காரிகை எனப்படும். இதற்குச் சிறப்பான உரை உண்டு. இந்நூலுக்கு ஆசிரியர் பெயரும், நூற்பெயரும் தெரியவில்லை. மரபினையொட்டியே இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    • நவநீதப் பாட்டியல்

    இந்நூலை இயற்றியவர் நவநீத நாடர். 13-16 நூற்றாண்டுகளிடையே பல பாட்டியல் நூல்கள் தோன்றின. அவற்றுள் இதுவும் ஒன்றாகும். பாட்டியல் என்பது பாட்டினாலான நூல்களுக்கு அமைய வேண்டிய இலக்கணங்களைத் தொகுத்துக் கூறும். கலித்துறையாப்பால் ஆனதால் இந்நூல், கலித்துறைப் பாட்டியல் என்றும் கூறப்படும். இது பொருத்தவியல், செய்யுள், மொழி இயல், பொது மொழி இயல் என்ற மூன்று பிரிவுகளை உடையது. 108 கலித்துறைகளை உடையது. இதனுள் சொல்லப்பட்ட பிரபந்தங்களின் தொகை 63 ஆகும்.

    • உரிச்சொல் நிகண்டு

    இந்நூல் காங்கேயரால் இயற்றப்பட்டதாகும். இதன் காலம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. தமிழில் தோன்றிய ஆதி நிகண்டுகள், திவாகரமும், பிங்கலந்தையும் ஆகும். பின்னால் வந்த நிகண்டு நூல்களில் உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு, நிகண்டு சூடாமணி போன்றவை காலத்தால் பழமையானவையும் சிறப்பானவையும் ஆகும்.

    5.2.2 உரைகள்

    இக்காலப்பகுதியில் உரையாசிரியர்கள் என்ற நிலையில் குறிப்பிடத்தக்கவர்களாக மயிலைநாதர், நச்சினார்க்கினியர் போன்றோரைக் கூறலாம்.

    • மயிலைநாதர்

    மயிலைநாதர் நன்னூலின் பழைய உரையாசிரியர் ஆவார். சமயத்தால் சமணர். இவர் நன்னூல் உரையில் தொல்காப்பிய இளம்பூரணர் உரை, அவிநய உரை, யாப்பருங்கலக் காரிகை போன்றவற்றை எடுத்துக்காட்டியுள்ளதால் இவர், இவ்வாசிரியர்களின் காலத்துக்குப் பிற்பட்டவர் எனலாம். இவ்வுரையாசிரியர் சுவைபட எழுதுவார். எதுகை, மோனைத் தொடை நயம்பட எழுதுவார். பண்டைய ஆசிரியர்களை நயம்படப் போற்றுவார். இவர் உரையானது உரை இலக்கணம் முழுமையும் பொருந்தியது. நன்னூல் பாயிரச் சூத்திரங்கள் 52 ஆகும். இவை பவணந்தி செய்தனவல்ல என்பதை இவர் உரை மூலம் அறிய முடிகிறது.

    • நச்சினார்க்கினியர்

    இக்காலத்தில் தோன்றிய மற்றோர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, கலித்தொகை போன்ற நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். நச்சினார்க்கினியர் என்பது சிவபெருமானின் பெயராகும். பத்துப்பாட்டுள் மதுரைக்காஞ்சியில் சில இடங்களில் (வரிகள் 365, 522) இவர் எழுதிய உரை நுட்பங்கள் இவர் மதுரைக்குரியவர் எனப் புலப்படுத்தும். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை செய்தவர்கள் இவரும் இளம்பூரணருமே. சங்க நூல்கள் அனைத்திலிருந்தும் இவர் மேற்கோள் காட்டுகின்றார். வடமொழி வழக்கு, உலக வழக்கு, சாதி சமய வழக்கு ஆகியன இவருடைய உரையுள் நிரம்பியுள்ளன. வடமொழி நூல்கள் பலவற்றை எடுத்துக் கூறுகிறார். குறுந்தொகைக்குப் பேராசிரியர் உரை எழுதாது விடுத்த இறுதி இருபது பாடல்களுக்கும் இவர் உரை எழுதியுள்ளார். ஆனால் இவ்வுரை கிடைக்கவில்லை.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1)

    பதினான்காம் நூற்றாண்டில் சைவ இலக்கியம் படைத்த பெரியோர்கள் இருவரின் பெயர்களைக் கூறுக.

    2)

    இரட்டைப்புலவர் பாடிய நூல்கள் யாவை?

    3)

    கந்தபுராணத்தின் காலம் யாது?

    4)

    நச்சினார்க்கினியரின் உரையில் குறிப்பிடத்தக்க சிறப்புகள் யாவை?

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 16:15:14(இந்திய நேரம்)