தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வைணவமும், சமணமும்

  • 5.3 வைணவமும், சமணமும்

    சமயம் சார்ந்த பல இலக்கியங்கள் இக்காலக் கட்டத்தில் படைக்கப்பட்டன. குறிப்பாக, வைணவ இலக்கியங்களும் சமண இலக்கியங்களும் உரைகளும் தோன்றின.

    5.3.1 வைணவம்

    வைணவ சமயம் செல்வாக்குடைய ஒரு சமயமாகத் திகழ்ந்தது. வைணவம் சார்ந்த படைப்பாளர்கள் பல இலக்கியங்களைப் படைத்தனர்.

    • வேதாந்த தேசிகர்

    தேசிகப்பிரபந்தம் எனும் நூலை இயற்றியவர் வேதாந்த தேசிகர். இவர், வடமொழி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நூல்களை இயற்றியிருக்கிறார். வடமொழியில் 95 நூல்கள்; தமிழில் 24 நூல்கள் (பிரபந்தங்கள்). இந்த 24 நூல்களின் தொகுப்பே தேசிகப்பிரபந்தம் ஆகும். மொத்தம் 405 பாடல்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன: சில நூல்கள் வடமொழித் தலைப்புகளைக் கொண்டுள்ளன.

    1)

    அமிருதரஞ்சனி

    2)

    அதிகார சங்கிரகம்

    3)

    அம்ருதாஸ்வாதினி

    -

    இதில் கடைசி மூன்று பாடல்கள் திருப்பாணாழ்வாரைப் போற்றுகின்றன.

    4)

    பரமபத சோபானம்

    5)

    பரமதபங்கம்

    -

    பிற சமயங்களைக் கண்டித்தல்.

    6)

    அத்திகிரிமகாத்மியம்

    -

    காஞ்சி அத்திகிரி வரதராசப் பெருமாளைப் புகழ்வது

    7)

    அடைக்கலப் பத்து

    8)

    அத்திகிரி பஞ்சகம்

    9)

    வைணவ தினசரி

    10)

    திருச்சின்னமாலை

    -

    வரதராசப் பெருமாள் உலாவரும் போது ஊதப்படும் ஊதுகுழல் திருச்சின்னம். இந்நூல் அதன் பெருமையைக் கூறுகிறது.

    11)

    பன்னிரு நாமம்

    -

    திருமாலின் பன்னிரு திருநாமங்களைச் சொல்லித் துதிக்கிறது,

    12)

    திருமந்திரச்சுருக்கு

    -

    மந்திரப்பொருளைச் சுருக்கி உரைப்பது

    13)

    துவயச் சுருக்கு

    -

    என்பதும் மந்திரப் பொருளைச் சுருக்கி உரைப்பது

    14)

    சரமசுலோகச் சுருக்கு

    -

    பார்த்தசாரதியாக நேரில் நின்ற கண்ணபிரான் எல்லாச் செயல்களையும் விட்டு விட்டு என்னைச் சரணாக அடைவாயாக என்று அருச்சுனனுக்குக் கூறிய உபதேசத்தைச் சுருக்கிக் கூறுகிறது.

    15)

    கீதார்த்த சங்கிரகம்

    -

    கீதையின் சாரத்தைச் சுருக்கிக் கூறுவது

    16)

    மும்மணிக்கோவை

    -

    நாராயணனைப் புகழ்கிறது.

    17)

    நவரத்தினமாலை

    -

    திருவகீந்திரபுரத் தோத்திரம்

    18)

    ஆகாரநியமம்

    -

    வைணவனாயிருப்பவன் உணவில் கொள்ள வேண்டிய முறைகளையும், தள்ள வேண்டியவைகளையும் கூறுகிறது,

    19)

    பிரபந்தசாரம்

    -

    திவ்வியப்பிரபந்தம் பாடிய ஆழ்வார்களின் பெயர், அவதரித்த நாள், திங்கள், ஊர், பாடிய பாடல் தொகை முதலியவற்றைத் தொகுத்துரைப்பது.

    24 பிரபந்தங்களுள் மேற்கண்டவை (19) தவிர, பந்து, கழல, அம்மானை, ஊசல், ஏசல் என்பனவும் மும்மணிக்கோவையுள் 20 பாடல்களும் கிடைக்கவில்லை.

    இந்த 24இல் முதல் பிரபந்தமான அமிருதரஞ்சனி ‘திருமால் திருவடியைச் சேர்க’ என்று அறிவுரை கூறுகிறது. திருவடிப்பெருமை கூறும் 51ஆம் பாடல் சிறப்பானது. இவருடைய பாடல்கள் எளிமையான நடையுடையன.

    • பிள்ளை லோகாசாரியார் (கி.பி. 1264-1369)

    வசன பூஷணம் உட்பட 18 நூல்கள் இவரால் இயற்றப்பட்டன. இவர் பெண்களும், பேதைகளும் உய்ய வேண்டும் என்ற பெருநோக்கோடு அட்டாதச ரகசியங்கள் என்னும் 18 சாத்திரங்களை எழுதினார். இதனை வடமொழியும் - தமிழ் மொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதினார். சாதியால் உயர்வு, தாழ்வு இல்லை; ஞானத்தினாலும், பக்தியாலுமே உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என்ற கொள்கை உடையவர்.

    • அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

    அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் ஆசார்ய ஹிருதயம் இயற்றப்பட்டது. அவருடைய தமையனார் செய்த வசனபூஷணத்திற்கு விளக்கமாக இந்நூலைச் செய்துள்ளதாகக் கூறுவர். நம்மாழ்வார் புகழையும் அவர் செய்த நூல்களின் பொருளையும் இந்நூல் விளக்குகிறது. இவர் திருப்பாவை ஆறாயிரப்படி, திருவந்தாதி, அமலனாதிபிரான், கண்ணிநுண்சிறுத்தாம்பு போன்றவற்றிற்கு வியாக்கியானம் செய்துள்ளார். மாணிக்கமாலை, அருளிச்செயல் ரகசியம் ஆகிய சமய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

    இதே காலக்கட்டத்தில் வாழ்ந்து, வைணவ இலக்கியம் வளரப் பங்காற்றியவர்களில் நயினாராசாரியர் (கி.பி. 1316-1375), வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் (கி.பி. 1266-1320) போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

    • வில்லிபுத்தூரார்

    வில்லிபுத்தூரார் தமிழில் மகாபாரதத்தை எழுதியவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களையும், வடமொழி நூல்களையும், சமய நூல்களையும் நன்கு கற்றவர். வடமொழி மகாபாரதம் 18 பருவங்களைக் கொண்டது. இவர் எழுதிய மகாபாரதம் 10 பருவங்களைக் கொண்டது. இவருக்கு முன்பு 9ஆம் நூற்றாண்டில் பெருந்தேவனார் பாடிய பாரதவெண்பா புகழ் பெற்றது. வியாசபாரதமே, வில்லிப்புத்தூரார் நூலுக்கு மூல நூல் என்பது மரபாகும். வியாசபாரதத்துக்கும், இவர் நூலுக்கும் கதையமைப்பில் வேறுபாடு உண்டு. நூலாசிரியர் வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்.

    சமயப் பற்றினாலும், தமிழில் பாரதம் பாடிய பெருமையாலும் பின்வந்த ஆன்றோர் இவரை வில்லிபுத்தூராழ்வார் என்றே வழங்குவர். எனினும் மதவெறியின்றி ஓரளவு கதைகளில் வழங்கும் செய்திகளுக்கேற்ப சிவபெருமானைப் போற்றியும் இருக்கிறார். அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்தில் காஞ்சி, திருவண்ணாமலை, திருவெண்ணெய்நல்லூர், திருவதிகை வீரட்டானம் ஆகிய தலங்களைச் சிறப்பித்துப் பாடுகின்றார். இந்நூலாசிரியர் தொடக்கத்தில் நூலை மிகவும் சுருக்கியே பாடியுள்ளார். இதன் காரணமாக விரிவான வருணனைகள் இந்நூலின் தொடக்கத்தில் இல்லை. பண்டைய நூல்களாகிய திருக்குறள், சங்க நூல்கள், சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவற்றின் கருத்துகளும் தொடர்களும் இந்நூலில் பரந்து காணப்படுகின்றன. பாத்திரங்களின் குணம் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில்
    நகைச்சுவையும், தமிழ்ப்பற்றும் காணப்படுகின்றன.

    வில்லிபுத்தூரார் பாரதம் பற்றி மு. வரதராசனார் பின்வருமாறு கூறுகிறார்:

    .... அவருடைய பாரதம் இலக்கிய உலகில் இடம்பெற்று வாழ்கிறது. பாடல்கள் நல்ல ஓட்டம் உள்ள நடையில் அமைந்தவை. போர்க்கள நிகழ்ச்சியைப் பாடும் இடத்தில் நடை மிக மிடுக்காகச் செல்கிறது. போரின் வேகத்தை நடையே புலப்படுத்துவதாக உள்ளது. அவ்வாறே வியப்பு, அவலம் முதலான சுவை மிகுந்த நிகழ்ச்சிகளைப் புலப்படுத்தும் இடங்களிலும், அந்தந்த உணர்ச்சிக்கு ஏற்றவாறு நடையின் இயக்கம் உள்ளது.

    வில்லிபுத்தூராரின் புதல்வரான வரந்தருவார், தந்தையார் பாடிய பாரதம் முதல் 10 பருவங்கள் போக, எஞ்சிய எட்டுப் பருவங்களையும் விரித்துப் பாடினார் என்று சொல்லப்படுகிறது. அது இப்போது கிடைப்பதாகத் தெரியவில்லை.

    5.3.2 சமணம்

    சமண நூல்களின் பங்கு ஒவ்வொரு நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்து வருகிறது. இக்காலப் பகுதியில் தோன்றிய சமண இலக்கியம் பற்றிப் பார்க்கலாம். 14-15 ஆம் நூற்றாண்டில் சமணர்களின் பங்களிப்பு சற்று அதிகம் எனலாம்.

    • மேருமந்தர புராணம்

    மேருமந்தர புராணம் என்னும் நூல் வாமன முனிவரால் இயற்றப்பட்டது. இவர் நீலகேசி நூலுக்கு உரையெழுதியிருக்கிறார். இந்நூலாசிரியர் வடமொழியிலும், தென்மொழிகளிலும் வல்லவர். இவரது மேருமந்தர புராணம் 13 சருக்கங்களில் 1405 பாடல்களைக் கொண்டது. இந்நூல் மேரு, மந்தரர் என்ற இருவரின் முற்பிறப்பு, அவர்கள் முக்தி பெறுதல் முதலியனவற்றைக் கூறுகிறது. மேருமந்தர புராணத்துக்கு ஸ்ரீபுராணமே மூல நூலாகும். ஸ்ரீபுராணம் வடமொழியில் அமைந்த நூலாகும்.

    • நீலகேசி விருத்தியுரை

    இவ்வுரையானது சமய திவாகர முனிவரால் எழுதப்பட்டதாகும். இதில் குண்டலகேசியின் 20 பாடல்கள் காணப்படுகின்றன. இன்று கிடைக்கப்பெறாத பல இலக்கணச் சூத்திரங்கள், புத்த சமய நூல்களான பிம்பிசாரக்கதை, மானாவூர்ப்பதிகம் போன்றவை இதனுள் காணப்படுகின்றன. உரையாசிரியர் சமயக் கருத்துகளை மட்டும் விளக்கிச் சொல்கிறார். இவ்வுரையுள் வடமொழி நூல்கள், உபநிடதங்கள், இலக்கண நூல்கள், சமண நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவை உட்படப் பல நூல்கள் சுட்டப்பட்டுள்ளன. உரையை மணிப்பிரவாள நடையில் ஆசிரியர் எழுதியுள்ளார்.

    • சீவசம்போதனை

    இது ஒரு சிறப்பான சமண நூலாகும்; 550 பாடல்களையுடையது. இந்நூலின் ஆசிரியர் தேவேந்திர மாமுனிவர் ஆவார். சமண சமயத்தின் கொள்கைகளை இது விளக்கிக் கூறுகிறது. மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. சீவனுக்கு (உயிர்களுக்கு) நன்மை பயக்கும் 12 சிந்தனைகளைப் போதிப்பதால் இது சீவசம்போதனை எனப்பட்டது. சமண சித்தாந்தத்திற்கு இது ஒரு சிறப்பான நூல். பாடல்களின் ஓசை, செய்யுள் அமைப்பு, கருத்தமைதி போன்ற பல கூறுகள் நளவெண்பாவை நினைவூட்டுகின்றன. நூலாசிரியர் நளவெண்பாவை நன்கு பயின்று அதன் எளிமையான கவிதைச் சுவையில் பெரிதும் ஈடுபட்டுள்ளார். அந்நூலையே தமக்கு முன்மாதிரியாகக் கொண்டு தம் சமய நூலைச் செய்தார் எனலாம். சமணத்தில் இக்காலத்தில் அதிக நூல்கள் தோன்றியுள்ளன. திருநூற்றந்தாதி, மேருமந்தர புராணம், ஸ்ரீபுராணம், திருக்கலம்பகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 16:55:11(இந்திய நேரம்)