Primary tabs
3.5 உயிர் ஈற்று மரப்பெயர் முன் வல்லினம் புணர்தல்
மரத்தின் பெயர்கள் சிலவற்றுக்கெனப் புதிய விதிகளை நன்னூல் கூறுகிறது.
வேற்றுமைப் புணர்ச்சியில், உயிர் எழுத்தை ஈற்றிலே கொண்ட சில மரப்பெயர்களுக்கு முன்னர் வரும் க,ச,த,ப என்னும் வல்லெழுத்துகள், மேலே சொன்ன பொதுவிதிப்படி மிகாமல், வருகின்ற அவ்வல்லெழுத்துகளுக்கு இனமான மெல்லெழுத்துகள் தோன்றப் பெறுவதும் உண்டு.
மரப்பெயர் முன்னர் இனமெல் லெழுத்து
வரப்பெறு னவும்உள வேற்றுமை வழியே (நன்னூல் , 166)சான்று:
விள + காய் = விளங்காய்
மா + பழம் = மாம்பழம்
காயா + பூ = காயாம் பூநூற்பாவில், வரப்பெறுனவும் உள (தோன்றப் பெறுவதும் உண்டு) என்ற உம்மையால், மரப் பெயர்களின் முன்னர் மெல்லெழுத்துப் பெறாமல் வல்லெழுத்து மிகப் பெறுவனவே பெரும்பான்மை என்பது பெறப்படும்.
சான்று:
பலா + காய் = பலாக்காய்
அத்தி + பழம் = அத்திப்பழம்
அத்தி + காய் = அத்திக்காய்
வாழை + காய் = வாழைக்காய்
வாழை + பழம் = வாழைப்பழம்
இலந்தை + பழம் = இலந்தைப்பழம்