தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.6 தொகுப்புரை

    நிலைமொழியின் இறுதியிலும் வருமொழியின் முதலிலும் உயிர் வரும்போது, அவ்விரண்டு உயிர்களையும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது தோன்றும் விட்டிசையைத் தடுக்க, அவ்விரண்டு உயிர்களுக்கு இடையே உடம்படுமெய்களாக யகரமெய்யும், வகர மெய்யும் வருகின்றன. விட்டிசை காரணமாக உடம்படாமல் இருக்கும் இரண்டு உயிர்களை உடம்படுத்தும் மெய்களாக இவை வருதலால் உடம்படு மெய்கள் எனப்பட்டன. நிலை மொழியின் இறுதியில் இ,ஈ,ஐ வரும்போது யகரமெய்யும், பிற வரும்போது வகர மெய்யும் உடம்படு மெய்களாக வருகின்றன. எகர வினா, முச்சுட்டுகளின் முன்னர் உயிரும் யகர மெய்யும் வரும் போது இடையில் வகர மெய் தோன்றும், வல்லினம், மெல்லினம், யகரம் நீங்கிய இடையினமும் வரும்போது, இடையில் வருகின்ற அந்தந்த மெய் எழுத்துகளே மிக்குத் தோன்றும்.

    நிலை மொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம், வருமொழியின் முதலில் உயிர் வரும்போது, தான் ஏறியிருக்கும் வல்லின மெய்யை விட்டு நீங்கும். முற்றியலுகரமும் வருமொழியின் முதலில் உயிர் வரும்போது தான் ஏறியிருக்கும் மெய்யை விட்டு நீங்கும்.

    இயல்பு ஈறாகவும், விதி ஈறாகவும் மொழி இறுதியில் வரும் எல்லா உயிர்கள் முன்னும் வரும் க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள் நான்கும் பெரும்பாலும் மிகும். இவ்விதிக்கு மாறாகச் சில உயிர் ஈற்று மரப்பெயர்களின் முன்னர் வரும் வல்லினம் மிகாமல், அவ்வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினம் தோன்றப் பெறுவதும் உண்டு.

    இவற்றை எல்லாம் இந்தப் பாடத்தின் வாயிலாக விளக்கமாக அறிந்து கொண்டோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
    2.
    பின்வரும் சொற்களுள் எவை குற்றியலுகரச் சொற்கள், எவை முற்றியலுகரச் சொற்கள் எனக் குறிப்பிடுக. காது, அது, கொடு, நாடு, முரசு, கதவு
    3.
    நாடு+எல்லாம், சார்பு+எழுத்து -இவற்றைச் சேர்த்து எழுதுக.
    4.
    நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழி முதலில் யகர மெய் வந்தால் எவ்வாறு திரியும்?
    5.
    இயல்பினும், விதியினும் நின்ற நிலைமொழி உயிர் ஈற்றின் முன்னர் வரும் எந்த மெய்கள் மிகும்?
    6.
    மரக்கிளை, பலாச்சுளை, நேற்றைப் பொழுது, மலைப்பழம்- இவற்றில் இயல்பு உயிர் ஈறாகவும், விதி உயிர் ஈறாகவும் அமைந்தவை எவை எனக் காட்டுக.
    7.
    மா+பழம், விள+காய் - இவை எவ்வாறு புணர்ந்து வரும்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 14:17:28(இந்திய நேரம்)