தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

யகர, ரகர, ழகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

  • 2.2 யகர, ரகர, ழகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

    யகர, ரகர, ழகர மெய்களை ஈற்றிலே கொண்ட சொற்கள் நிலைமொழியில் இருக்கும்போது அவற்றோடு, வருமொழி முதலில் வரும் க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் அல்வழியிலும், வேற்றுமையிலும் புணரும் முறையை நன்னூலார் பொதுவிதி கொண்டு விளக்கிக் காட்டுகிறார். மேலும் தமிழ், தாழ் (தாழ்ப்பாள்), கீழ் என்னும் ழகர ஈற்றுச் சொற்கள் நிலைமொழியில் இருந்து வருமொழிகளோடு அவை புணரும் முறையை அவர் சிறப்பு விதிகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார்.

    2.2.1 யகர, ரகர, ழகர ஈற்றுப் புணர்ச்சி – பொதுவிதி

    யகர, ரகர, ழகர, ஈற்றுப் புணர்ச்சிக்குப் பொது விதியாக நன்னூலார் இரண்டனைக் குறிப்பிடுகிறார்.

    1.
    யகர, ரகர, ழகர மெய் ஈறுகளின் முன்னர் வரும் க, ச, த, ப என்னும் வல்லினமெய்கள் அல்வழியில் இயல்பாதலும், மிகுதலும் பெறும்.

    நன்னூலார் இங்கே ய, ர, ழ முன்னர் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாகும் அல்லது மிகும் எனப் பொதுப்படக் கூறினாலும், வல்லினம் இயல்பாதல் எழுவாய்த் தொடர், உம்மைத் தொகை, வினைத்தொகை ஆகிய மூன்றில் மட்டுமே ஆகும்; வல்லினம் மிகுதல் வினையெச்சத் தொடர், பண்புத்தொகை, உவமைத்தொகை ஆகிய மூன்றில் மட்டுமே ஆகும்.

    • அல்வழியில் வல்லினம் இயல்பாதல்

    சான்று:

    வேய் + கடிது
    வேர் + சிறிது
    வீழ் + பெரிது
    = வேய்கடிது
    = வேர்சிறிது
    = வீழ் பெரிது
    எழுவாய்த் தொடர்

    (வேய் – மூங்கில்; வீழ் – மர விழுது)

    பேய் + பூதம்
    நீர் + கனல்
    இகழ் + புகழ்
    = பேய்பூதம்
    = நீர்கனல்
    = இகழ்புகழ்
    உம்மைத் தொகை

    (பேய்பூதம் – பேயும்பூதமும்; நீர்கனல் – நீரும் கனலும்; கனல் – நெருப்பு; இகழ் புகழ் – இகழும் புகழும்)

    செய் + தொழில்
    தேர் + பொருள்
    வீழ் + புனல்
    = செய்தொழில்
    = தேர்பொருள்
    = வீழ்புனல்
    வினைத்தொகை

    (தேர் – ஆராய்தல்; புனல் – நீர்)

    • அல்வழியில் வல்லினம் மிகுதல்

    சான்று:

    போய் + பார்த்தான் = போய்ப்பார்த்தான் (வினையெச்சத் தொடர்)

    மெய் + கீர்த்தி
    கார் + பருவம்
    பூழ் + பறவை
    = மெய்க்கீர்த்தி
    = கார்ப்பருவம்
    = பூழ்ப்பறவை
    இருபெயரொட்டுப் பண்புத்தொகை

    (மெய் – உண்மை; கீர்த்தி – புகழ்; மெய்க்கீர்த்தி – உண்மை ஆகிய புகழ் ; கார்ப்பருவம் – கார் ஆகிய பருவம்; பூழ் – காடை; பூழ்ப் பறவை – காடை ஆகிய பறவை)

    வேய் + தோள்
    கார் + குழல்
    = வேய்த்தோள்
    = கார்க்குழல்
    உவமைத்தொகை

    (வேய் – மூங்கில்; கார் – மேகம் ; குழல், கூந்தல்; வேய்த்தோள் – மூங்கில் போன்ற வழுவழுப்பான தோள்; கார்க்குழல் – மேகம் போன்ற கரிய கூந்தல்)

    2
    யகர, ரகர, ழகர மெய் ஈறுகளின் முன்னர் வரும் க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் வேற்றுமையில் மிகுதலும், இனத்தோடு உறழ்தலும் பெறும். (இனத்தோடு உறழ்தலாவது ஒரே புணர்ச்சியில் வல்லினமும் மெல்லினமும் மிகுந்து வருதல் ஆகும்.)
    • வேற்றுமையில் வல்லினம் மிகுதல்

    சான்று:

    நாய் + கால் = நாய்க்கால்
    தேர் + கால் = தேர்க்கால்
    ஊழ் + பயன் = ஊழ்ப்பயன்

    (நாய்க்கால் – நாயினது கால்; தேர்க்கால் – தேரினது கால்; கால் – சக்கரம்; ஊழ்ப்பயன் – ஊழினது பயன்; ஊழ் - விதி. இவை மூன்றும் ஆறாம் வேற்றுமைத் தொகை)

    • வேற்றுமையில் வல்லினம் இனத்தோடு உறழ்தல்

    சான்று:

    வேய் + குழல்  = வேய்க்குழல், வேய்ங்குழல்
    ஆர் + கோடு   = ஆர்க்கோடு, ஆர்ங்கோடு
    குமிழ் + கோடு = குமிழ்க்கோடு, குமிழ்ங்கோடு

    (வேய் – மூங்கில்; வேய்க்குழல் – மூங்கிலால் ஆகிய குழல், புல்லாங்குழல்; ஆர் – ஆத்திமரம்; கோடு – கிளை; குமிழ் – குமிழ்மரம்; ஆர்க்கோடு – ஆத்திமரத்தினது கிளை; குமிழ்க்கோடு – குமிழமரத்தினது கிளை. இவை இரண்டும் ஆறாம் வேற்றுமைத் தொகை)

    யகர, ரகர, ழகர ஈறுகளுக்குரிய இவ்விரு புணர்ச்சி விதிகளை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தருகிறார்.

    யரழ முன்னர்க் கசதப அல்வழி
    இயல்பும் மிகலும் ஆகும்; வேற்றுமை
    மிகலும், இனத்தோடு உறழ்தலும் விதிமேல் (நன்னூல், 224)

    (இனத்தோடு உறழ்தல் – வல்லினமாகவும், அதற்கு இனமாகவும் மிகுந்து வருதல். இதை வல்லினம் விகற்பித்தல் என்றும் கூறுவர்.)

    2.2.2 தமிழ், தாழ் என்னும் சொற்களுக்குச் சிறப்பு விதி

    1.
    தமிழ் என்னும் ழகர மெய் ஈற்றுச் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணங்களும் வர அகரச் சாரியை பொருந்தவும் பெறும்.

    சான்று:

    தமிழ் + அரசன் > தமிழ் + + அரசன் = தமிவரசன்
    தமிழ் + பிள்ளை > தமிழ் + + பிள்ளை = தமிப்பிள்ளை
    தமிழ் + நாகன் > தமிழ் + + நாகன் = தமிநாகன்
    தமிழ் + வளவன் > தமிழ் + + வளவன் = தமிவளவன்

    (தமிழப்பிள்ளை – தமிழை உடைய பிள்ளை; இரண்டாம் வேற்றுமைத் தொகை. மற்றவற்றிற்கும் இவ்வாறே வேற்றுமைப் பொருள் விரித்துக் கொள்க.)

    2.
    தாழ் என்ற ழகர ஈற்றுச் சொல்லும், கோல் என்னும் சொல்    வருமொழியில் வரும்போது அகரச்சாரியை பெறும்.

    சான்று:

    தாழ் + கோல் > தாழ் + + கோல் = தாக்கோல்

    (தாழக்கோல் – திறவுகோல்)

    தமிழ் அவ்வுறவும் பெறும் வேற்றுமைக்கே;
    தாழும் கோல்வந்து உறுமேல் அற்றே (நன்னூல், 226)

    2.2.3 கீழ் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி

    கீழ் என்னும் சொல்லின் முன்னர் வரும் வல்லினம் விகற்பம் ஆகும். அதாவது ஒரே புணர்ச்சியில் வல்லினம் இயல்பாதல், மிகுதல் ஆகிய இரண்டையும் பெறும்.

    கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும் (நன்னூல், 226)

    சான்று:

    கீழ் + குலம் = கீழ்குலம், கீழ்க்குலம்
    கீழ் + தெரு = கீழ்தெரு, கீழ்த்தெரு

புதுப்பிக்கபட்ட நாள் : 12-10-2017 13:09:37(இந்திய நேரம்)