தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எட்டுத்தொகை நூல்கள் I

 • 6.2 எட்டுத்தொகை நூல்கள் - I

  Audio

  எட்டுத்தொகை நூல்கள் என்பன

  1. நற்றிணை

  2. குறுந்தொகை

  3. ஐங்குறுநூறு

  4. பதிற்றுப்பத்து

  5. பரிபாடல்

  6. கலித்தொகை

  7. அகநானூறு

  8. புறநானூறு

  என்பன. இவற்றில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்ற ஐந்தும் காதல் வாழ்க்கை பற்றிய பாடல்களாகும். காதல் வாழ்வு பற்றிப் பேசுவது அகப்பொருள் எனப்படும். பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும் வீரவாழ்வு பற்றியவை. வீரத்தையும், வெளியுலக வாழ்வையும் பற்றிப் பேசுவது புறப்பொருள் எனப்படும். பரிபாடல் இரண்டு பொருளும் பற்றிய நூலாகும். இனி இவை காட்டும் பண்பாட்டைத் தனித்தனியே காணலாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் அக, புறப்பொருள்களாக வகைப்படுத்தப் பட்டிருப்பதை அட்டவணையில் காண்க.

  பத்துப் பாட்டு

  அகப்பொருள் (காதல் வாழ்க்கை) பற்றியது
  புறப்பொருள் வெளியுலக வாழ்க்கை (வீரவாழ்வு) பற்றியது
  1.
  திருமுருகாற்றுப்படை
  2.
  பொருநராற்றுப்படை
  3.
  சிறுபாணாற்றுப்படை
  4.
  பெரும்பாணாற்றுப்படை
  5. முல்லைப்பாட்டு
  6.
  மதுரைக்காஞ்சி
  7. நெடுநல்வாடை
  8. குறிஞ்சிப்பாட்டு
  9.பட்டினப்பாலை
  10.
  மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)

  எட்டுத் தொகை

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. ஐங்குறுநூறு
  4
  பதிற்றுப்பத்து
  5. பரிபாடல்
  பரிபாடல்
  6. கலித்தொகை
  7. அகநானூறு
  8.
  புறநானூறு

  6.2.1 நற்றிணையில் பண்பாடு

 • ஆயர்

 • ஆயர்

  நற்றிணையில் தமிழர் பண்பாட்டுக் கூறுகள் நன்கு விளக்கம் பெற்றுள்ளன. இந்நூல் ஆயர்களின் வாழ்க்கை முறையைத் தெளிவாகக் காட்டுகின்றது. முல்லை மலரையும் பனங்குருத்தையும் சேர்த்துத் தலைமாலையாகச் சூட்டிக் கொள்ளும் ஆயனைக் காணுங்கள். அவன் தோளில் ஓர் உறியும் தோல் பையும் விளங்குவதைப் பாருங்கள். உறியிலே அவனுக்குரிய உணவு; தோற்பையில் தீக்கடை கோல் முதலியன உள்ளன. முதுகில் ஒரு பனை ஓலைப் பாயைக் கட்டியிருக்கிறான். கையில் கோல் கொண்டு இருக்கும் ஆயன் சில சமயம் அக்கோலை ஊன்றி அதன் மீது ஒரு காலை ஊன்றி ஒடுங்கிய நிலையில் இருப்பான். ஆடு மாடுகளை நெறிப்படச் செலுத்த இவன் வீளை (Whistle) ஒலியும் எழுப்புவான். இது ஆயர்களின் வாழ்க்கை முறையைக் காட்டுகிறது.
   

 • குறிஞ்சிக் காவலர்
 • மலை சார்ந்த குறிஞ்சி நில ஊர்களில் இரவு முழுவதும் குறிஞ்சிப்பண்ணைப் பாடிக்கொண்டு தூங்காமல் காவலர் வலம் வருவர். நெய்தல் நில ஊர்களில் காவலர் யாமம் தவறாமல் மணியடித்து ஓசை எழுப்பித்தலைக்கடை புறக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பர்.
   

 • நெய்தல் பரதவர்
 • இரவில் நெய்தல் நிலப் பரதவர் திமிங்கல வேட்டையாடுவர். மீன்களைப் பிடித்துக் கொண்டு விடியற்காலையில் கரைக்குத் திரும்புவர். புன்னைமர நிழலில் அமர்ந்து கள் அருந்துவர். மேற்குறிப்பிட்ட நற்றிணைச் செய்திகள், பண்டைத் தமிழர்களின் வாழ்க்கை முறையையும், பண்பாட்டுச் செம்மையினையும் வெளிப்படுத்துகின்றன.
   

 • ஆடை
 • அக்காலத்தில் மெல்லிய ஆடை வகைகள் நேர்த்தியாக நெய்யப்பட்டன. துகில், நுண்துகில், அம்துகில், கலிங்கம், பூங்கலிங்கம், நூலாக்கலிங்கம் என அவை பல வேறு வகைப்பட்டன. பாலை நிலத்தவர் துவராடை உடுத்தியிருந்தனர். மலைநில மக்கள் நாணல் பின்னிய உடை உடுத்தியிருந்தனர். மகளிர் தழையாடை உடுத்தலும் உண்டு.
   

 • மனச்செம்மை
 • மக்களின் மனச் செம்மையையும் சால்பையும் நற்றிணையில் சில காட்சிகள் விவரிக்கின்றன. தேரின் உருளையில் நண்டுகள் நசுங்காதவாறு பாகன் தேரை ஓட்டினான். மருந்து மரமாக இருந்தாலும் அம்மரம் பட்டுப் போகும்படி அதனிடம் பயனைக் கொள்ள மாட்டார். இரவுப் பொழுதில் விருந்தினர் வந்தாலும் வீட்டில் உள்ளவர் மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்றனர். இவையெல்லாம் நற்றிணை புலப்படுத்தும் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள்.

  6.2.2 குறுந்தொகையில் பண்பாடு

  குறுந்தொகையில் மக்களின் பண்பட்ட உள்ளம் நன்கு வெளிப்படுகின்றது. குறுந்தொகையில், தமிழ் மக்களின் அகவாழ்க்கை சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. காதலர்களின் அன்பின் தன்மையும், அதனை அவர்கள் வெளிப்படுத்திய பாங்கும் படித்துச் சுவைக்கத் தக்கன. காதலர்கள் ஒருவருக்கொருவர் பேசும் உரையாடல்களிலிருந்து, பண்டைத் தமிழர்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலியனவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

  தலைவனைப் பார்த்துத் தலைவி கூறும் கூற்றாக வரும் பாடல் ஒன்றில், இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி வரும் பிறவிகளிலும், உன் நெஞ்சினுள் நிறைந்து நிற்கும் காதலி நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சுவைபடக் கூறுகிறாள்.

  இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என்கணவனை,
  யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே

  (குறுந்தொகை : 49)

  c03110ad.gif (1294 bytes)

  காதலர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அன்பின் பிணைப்பினை, இதைவிடச் சுவையாகச் சொல்ல இயலுமா? இதில், காதலர்கள், ஒருவருக்கொருவர் எத்தகைய அன்பு உள்ளங்கொண்டு வாழ்ந்தனர் என்பதுவும், அந்தக்கால மக்கள் எந்த விதமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் என்பதும் சிறப்பாக வெளியிடப்படுகிறது. மேலும் பண்டைத் தமிழர்களுக்குப் பல பிறவிகளில் நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதுவும் புலப்படுகிறது. இவை தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளாகத் திகழ்கின்றன.

  6.2.3 ஐங்குறுநூற்றில் பண்பாடு

  ஐங்குறுநூற்றில் பண்பாடு பற்றிய செய்திகள் பல உள்ளன. அக்காலத்தில் ஓர் ஊரை அடுத்திருந்த பகுதி சேரி எனப்பட்டது. குறிப்பிட்ட சாதியினர் வாழுமிடத்தைச் சேரி என்று அக்காலத்தவர் கூறுவதில்லை. அக்காலத்தில் பகல் பன்னிரண்டு மணி முதல் இரவு பன்னிரண்டு மணி வரை உள்ள பொழுது பாதிநாள் எனக் கணக்கிடப்பட்டது. பகல் பன்னிரண்டு மணியிலிருந்தே நாளைக் கணக்கிடுவது அக்கால வழக்கமென்பது இதனால் அறியப்படும். மகனுக்குத் தந்தை தன் தந்தையின் பெயரை வைத்தல் அக்கால மரபாகும். தந்தை பெயரன் என அதனால் பேரனைக் குறித்தனர். இவையெல்லாம் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளாக ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-10-2017 12:48:08(இந்திய நேரம்)