தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சில பண்பாட்டு நிகழ்வுகள் (புறம்)

  • 6.5 சில பண்பாட்டு நிகழ்வுகள் (புறம்)

    மேலே காதல் வாழ்வில் சில சுவையான நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். இங்கு வெளியுலக வாழ்வில் குறிப்பாக வீரப்பண்பாடு வெளிப்படும் சில நிகழ்வுகளைக் காணலாம்.

    6.5.1 சூளுரைத்த தாய்

    நாட்டில் போர் மூண்டுவிட்டது. வயதில் முதிர்ந்த தாய் ஒருத்தியின் மகனும் போர்க்களம் போயிருந்தான். போர் முடிவு என்ன ஆயிற்றோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் முதியவள். அப்போது பண்பில்லாத சிலர் அந்த முதியவளிடம் வந்து அம்மா! உன் மகன் முதுகிலே காயம்பட்டு இறந்துவிட்டான் என்று பொய் கூறிச் சென்றனர். முதியவள் துடித்து விட்டாள். என் மகன் முதுகிலே புண்பட்டிருந்தால் அவனுக்குப் பால் கொடுத்த மார்பை அறுத்து எறிவேன் என்று சபதம் செய்தாள். வீட்டிலிருந்த வாளைக் கையிலே எடுத்தாள். போர்க்களத்திலே போய் ஒவ்வொரு பிணமாகப் புரட்டிப் பார்த்தாள்.

    அங்கே அவள் மகன் மார்பிலே புண்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டாள். அப்போது அவனைப் பெற்ற நாளில் அடைந்த மகிழ்ச்சியைவிட அதிகமாக அந்தத் தாய் மகிழ்ந்தாள். இப்படி ஒரு வீரநிகழ்ச்சியைச் சங்ககால இலக்கியம் நமக்குக் காட்டுகிறது.

    6.5.2 அறிவுறுத்திய புலவர்

    பாண்டிய அரசன் குடிமக்களிடம் நிலவரி அதிகம் வாங்க முற்பட்டான். குடிமக்கள் துன்பப்பட்டனர். இதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருக்கப் புலவர் பிசிராந்தையார் மனம் இடம் கொடுக்கவில்லை. உடனே அரசனிடம் சென்றார். அரசே! நல்ல விளைந்த வயலில் அறுவடை செய்த நெல்லைச் சோறாக்கி உருண்டை உருண்டையாய்க் கொடுத்தால் யானைக்குப் பலநாள் உணவாகும். அப்படி இல்லாமல் யானையையே வயலில் புகவிட்டால் அதன் வாயில் புகுவதைவிடக் கால்பட்டு அழிவது அதிகமாகும். அதுபோல முறையாகவும் அளவாகவும் வரி வாங்கினால் அழிவு வராது; ஆக்கம் உண்டாகும் என்று அறிவுறுத்தினார். அரசனும் இந்த அறிவுரையை ஏற்றான். இவ்வாறு புலவர் பலர் அரசர்களை நெறிப்படுத்திய காட்சிகள் பழைய இலக்கியத்தில் உள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:40:55(இந்திய நேரம்)