தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்-6.1 பண்டைக் காலந்தொட்டு. . .

  • 6.1 பண்டைக் காலந் தொட்டு . . .

    Audio Button

    பாய்மரங்களோடு அணிவகுத்து நின்ற கப்பல்களில் ஏராளமான சரக்குகள் ஏலம், இலவங்கம், மிளகு, யானைத் தந்தம், அரிசி, இஞ்சி, மயில்தோகை, அகில், இரும்பு, ஆட்டுத் தோல், நெய், மரப்பெட்டிகள், மேசைக் கால்கள், பறவைக் கூண்டுகள், சீப்புகள், முத்துக்கள், மஸ்லின் ஆடைகள் ஆகியவைகளெல்லாம் பாரசீகம், ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், ரோம், சீனா, பர்மா, மலேயா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

    ரோமாபுரி மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ஆறு இலட்சம் பொன் மதிப்புள்ள பொருள்களைத் தமிழகத்திடமிருந்து பெற்றது. தொண்டி, முசிறி, கொற்கை, காவிரிப் பூம்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் இரவு பகலாகச் செயல்பட்டன. தாலமி போன்ற யவன ஆசிரியர்கள் இந்தத் துறைமுகங்களைக் குறிப்பிடுகின்றனர்.

    “பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி" என்று தமிழ் இலக்கியம் பேசுகின்றது. பொன்னொடு வந்து மிளகைக் கொண்டு போகும் கப்பல்களைக் கொண்ட முசிறி என்பது இதன் பொருள். இவ்வாறு பெரிய அளவு வணிகம் செய்யக் கூடிய வளமான பொருளாதாரம் படைத்திருந்த தமிழகம் பிற்காலத்தில் வளம் இழக்கக் காரணம் யாது? பண்டைக் காலந்தொட்டு வணிக வளம் மிக்க தமிழகம், பிற்காலத்தில் நலிவுற்றதற்கு யார் காரணம்? காணலாமா?

    6.1.1 தமிழர் பண்பாடு உருவான நிலை

    தமிழர் பண்பாடு எப்படி உருவாயிற்று? ஆண்டுக்கு மூன்று போகம் நெல் விளையும் வயல்கள்; கரும்புக் கழனிகள்; சோளம், கம்பு, தினை முதலான புன்செய்ப் பயிர்கள்; மா, பலா, வாழை எனும் கனிமரங்களின் சோலை; ஆண்டு முழுவதும் ஓடிக் கொண்டிருந்த ஆறுகள்; தென்னந் தோப்புகள்; இயற்கை வளம் செறிந்த குறிஞ்சிக் காடுகள் இவ்வாறு வளம் மிக்க தமிழகமாயிருந்தது. வறுமை உடையோர் எண்ணிக்கை குறைவாயிருந்தது. அவர்களின் வறுமையைத் துடைக்கும் கைகள் பலவாக இருந்தன. அவர்களுக்கு வாழ்க்கையின் தலையாய குறிக்கோள் எது தெரியுமா? பழி வந்துவிடக் கூடாது. வாழ்வில் கடுகளவுகூடக் கறை படிந்து விடக் கூடாது. அப்படி வருமுன் உயிர் போய்விட வேண்டும். புகழ், பலராலும் பாராட்டப் பெறும் புகழ் வேண்டும். எப்படிப் புகழ வேண்டும்? 'சான்றோர்' என்று வையகம் சொல்ல வேண்டும். அக்காலத்தின் மிக உயர்ந்த பட்டம் அதுதான். சான்றோர் ஆதல், சான்றோரால் எண்ணப்படுதல் என்பவையே தலையாய பெருமைகள். இந்த அடிப்படையில்தான் பழந்தமிழ்ப் பண்பாடு உருவாயிற்று.

    6.1.2 மாற்றங்கள் எதனால் விளைந்தன?

    • புதிய கண்டுபிடிப்புகள்

    புகழ் பெற வேண்டுமென்று விரும்பியவன், தன் வீட்டில் அளவில்லாது கிடக்கும் உணவுப் பொருளைப் பிறர்க்கு வாரி வழங்கினான். வயல் விளைத்துக் கொடுத்தது. வீடு முழுவதும் நெல், பிற தானியங்கள். அவனுக்கு உரிய பல வீடுகளிலும் கொட்டிக் குவித்து வைக்கப்பட்ட கூலங்கள் (தானியங்கள்). அடுத்த அறுவடை வருவதற்குள் செலவிட்டாக வேண்டும். வறியவர்க்கும் புலவர்களுக்கும் வழங்கினால் வாழ்த்துவார்களே! வழங்கினான்; இவ்வாறு வழங்குதல் வழக்கமாயிற்று; அடுத்த தலைமுறையில் இவ்வழக்கம் தொடர்ந்தது; இரத்தத்தில் ஊறிய பண்பாயிற்று. இந்தப் பண்பு எப்போது மெலிவடைந்தது?

    நாணயம் என்ற ஒன்று வழக்கத்திற்கு வந்தபிறகு இந்த வழக்கம் படிப்படியே குறைந்தது. விளைச்சலைப் பணமாக்கி, பணத்தை வங்கியில் செலுத்தி வைப்பாக்கி, அதற்கு வட்டி கண்டு, செல்வம் பெருக்கி வாழும் நிலையில் ஈகை, ஒப்புரவு ஆகியன நலிவுற்றன. பண்பாட்டில் ஒரு மாற்றம் தோன்றியது. வீட்டில் வடித்து வைத்த சோறும் குழம்பும் வீணாகுமுன் யாருக்காவது கொடுத்து மகிழும் வழக்கம் பதனப் பெட்டி (Fridge) வந்தவுடன் மாறிவிடவில்லையா - அதுபோலத்தான் பணப் புழக்கம் தோன்றிப் பண்டங்களின் புழக்கம் குறைந்தவுடன் பண்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. பொருளாதார மாற்றங்களாலும், அறிவியல் வளர்ச்சியாலும் பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் பல மாற்றங்கள் தோன்றிவிட்டன.

    • அயலவர் தொடர்பு

    தமிழன் வடவேங்கடம் தென்குமரிக்கு இடையில் உள்ளடங்கிய சிற்றூர்களில் வாழ்ந்தபோது அவனுடைய புற நாகரிகத்திலும் மாற்றமில்லை. வேற்றவர்கள் வந்து புகுந்து ஆட்சியைப் பிடித்து அவனை அடிமையாய் ஆக்கினர். ஆண்ட மக்களோடு ஏற்பட்ட பழக்கம் சில புதிய அலைகளைத் தமிழனின் வாழ்க்கைக் கரைகளில் மோதச் செய்தது. பிறகு தமிழன் பிழைப்புக்காகப் பல நாடுகளுக்கும் சென்றான். அங்கங்கே கண்ட நாகரிகக் கூறுகளில் சிலவற்றுக்குத் தன் வாழ்விலும் இடம் கொடுத்தான். தன் பண்பாட்டுக் கூறுகளை அயலவர்க்குக் கொடுத்து அயலவரின் பண்பாட்டுக் கூறுகளை இவன் தழுவிக் கொண்டான். பண்பாட்டு மாற்றங்கள் இவ்வண்ணமே நிகழ்ந்தன.



புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:07:57(இந்திய நேரம்)