Primary tabs
2.2 பாடல்களின் வெளிப்பாட்டு முறைகள்
உணர்வதும் கருதுவதும் அனைவர்க்கும் உரியவை. அவற்றை அனுபவமாக்கி அழகுணர்ச்சியுடன் வெளிப்படுத்துவது கவிஞனால் மட்டுமே முடியும். இலக்கியத்தில் என்ன என்பதைவிட எப்படி என்பதே படைப்பாளியை மதிப்பிடும் அளவுகோல் ஆகும். இங்கு இப்பாடல்களில் கவிஞர்களின் வெளிப்பாட்டு முறைகள் எவ்வாறு தொழிற்பட்டுள்ளன எனக் காணலாம். காதல் வாழ்வைச் சித்திரிக்க இயற்கையை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதையும், உணர்ச்சிகளை எவ்வண்ணம் வெளிப்படுத்துகின்றனர் என்பதையும், படிக்கின்றவனை எவ்வாறு பார்க்கின்றவனாக மாற்றிக் காட்சிகளை உருவாக்குகின்றனர் என்பதையும் காணலாம்.
2.2.1 இயற்கைப் பின்னணியில் காதல் வாழ்வு
கவிதையில் அஃறிணைப் பொருள்கள் பேசலாம்; பாடலாம்; மனித உணர்வுகளோடு மனிதனைப் போலச் சிந்திக்கவும் செய்யலாம். கவிதைக் கற்பனை மரபு அதற்கு இடம் கொடுக்கிறது. நடப்பியலில் இல்லாததைக் கவிஞன் படைத்துக் காட்டுவது நடப்பியலைக் கூர்மைப்படுத்தவும், அதன் அறியப்படாத மறுபுறங்களைக் காட்டவும் தான். இவ் வகையில் சங்கக் கவிதையில் யானையும், மானும், கோழியும், குருவியும் நிறையச் செய்திகளை உணர்த்துகின்றன. ஏன், குன்று குளிரில் நடுங்குவதாகக் கூடக் கவிஞன் காண்கிறான். குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் (நெடுநல்வாடை) நற்றிணையில் (பாடல் எண் 172) ஒரு புன்னைமரம் சற்று வித்தியாசமான மனித உயிர்ப்புடன் விளங்குகிறது. புன்னைமரம் பேசவில்லை; எந்தச் சைகையும் செய்யவில்லை; எந்தவிதமான குறிப்புப் பொருளும் தரவில்லை. ஆனாலும் தன்னைச் சுற்றி நடைபெறும் ஓர் அழகிய காதல் விளையாட்டில் மையப் பாத்திரமாக விளங்குகிறது. சிறுமிப் பருவத்தில் விளையாட்டாக நட்ட புன்னைவிதை தானே முளைவிட, அதை அவள் அன்புடன் வளர்த்ததைப் பார்த்த அன்னை சொன்னாள், ‘இது உன்தங்கை’ என்று. அன்று முதல் புன்னை அவர்கள் குடும்ப உறுப்பினராகிவிட்டது. தோழி தலைவனிடம் சொல்கிறாள். ‘தனது புன்னைத் தங்கையின் எதிரில் இருந்து கொண்டு உன்னோடு காதல் செய்யத் தலைவி கூச்சப்படுகிறாள்; வேண்டாம் இந்த இடம்’ இப்படித் தோழி சொல்வதன் உள் நோக்கம் வேறாக இருக்கலாம். ஆனால் கவிஞனின் சொல்லின் மந்திரத்தால் இயற்கை, மானுடப் பெண்ணோடு உடன்பிறப்பு உறவு கொண்டுவிடுகிறது.
பொருள் தேடப் பிரிந்த தலைவனுக்கு அவன் செயல் வெற்றி பெற்றவுடனே நீண்ட இடைவெளியைத் தாண்டித் தலைவியை உடனே காண வேண்டுமென்னும் வேட்கை தோன்றிவிடும். ‘விரைந்து தேரைச் செலுத்து, தலைவி வருத்தத்துடன் காத்திருப்பாள்’ என்று பாகனிடம் தலைவன் சொல்லும் முல்லைத்திணைப் பாடல்கள் பல உண்டு. அவன் திரும்பும் கார்காலமும் காட்டுப் பகுதியும், விலங்குகளும் பறவைகளும் பூக்களும் செடிகொடிகளும் தலைவனின் அந்த நேரத்து உணர்வுகளோடு ஒன்றிச் செய்தி சொல்வதாகப் புலவர்கள் பாடியிருக்கின்றனர். மருதனிள நாகனார் பாடலில் (நற்றிணை-21) ஒரு காட்டுக்கோழி தலைவன் உணர்வுக்குள் புகுந்து சலனப்படுத்துகிறது. உடலெங்கும் புள்ளிகள் கொண்ட காட்டுக்கோழி, ஈரமணலைக் கிளறி எடுத்த மண்புழுவுடன் தன் பேடையைத் தேடுகிறது. தேடிய பொருளுடன் தலைவியைக் காண விரையும் தலைவனுக்குக் காட்டுக் கோழியுடன் உணர்வு அளவில் ஒரு தோழமை உறவு உருவாகி விடுகிறது.
ஊர்ப்பற்று நாட்டுப்பற்றைவிடக் குறைவானதன்று என்பதை நம் அனுபவத்தில் உணர்கிறோம். சொந்த ஊர்போலவே வேறு சில ஊர்களும் நமக்குப் பிடித்திருக்கின்றன. சங்கப் புலவனுக்குத் தான் உவக்கும் ஊர்களைக் கவிதையில் பதிவு செய்யும் ஆர்வம் இருக்கிறது. பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர் (குறுந்தொகை-116) என்பதுபோல ஊரைப் புகழ்வது உண்டு. உறந்தைத் துறையின் அறல்மணல் போன்ற கூந்தல் (குறுந்தொகை-116), வல்வில் ஓரியின் காடு போல மணக்கும் கூந்தல் (நற்றிணை-6) என்பன போல ஊரைக் குறிப்பிட்டு அவ்வூர்ப் பொருள்களை உவமை சொல்வது உண்டு. இவற்றைத் தாண்டி அழகிய தலைவிகளுக்குத் தாங்கள் விரும்பும் அழகிய ஊர்களை (முழுமையாக) உவமை சொல்லும் புலவர்களும் உண்டு. தொண்டியன்ன என் நலம் (தொண்டி போன்ற என் அழகு) (குறுந்தொகை-238), இருப்பை என்ற ஊர் போன்றஎன்னை (நற்றிணை-260) என்பன போன்றவை இவ்வுவமைகள். இவ்வுவமைகளை எப்படிப் பொருத்தம் காண்பது? நேரடியாக உருவமோ நிறமோ வேறு அடிப்படைகளோ இங்கு உவமைக்குக் காரணம் இல்லை. கவிஞன் உள்ளத்துக்குள் அந்த ஊர்கள் ஏற்படுத்திய அழகுணர்ச்சியும் தலைவி ஏற்படுத்தும் அழகுணர்ச்சியும் ஒன்றாக உள்ளன. கவிஞனின் உணர்வுப் போக்கைப் புரிந்து கொண்டாலன்றி இந்த உவமைகளைப் புரிந்துகொள்ள முடியாது. கபிலரது அமுதம் உண்க எனும் நற்றிணைப் பாடலில் (65) இந்த உவமை மேலும் நுண்பொருள் (Abstract) உணர்த்துவதாக வருகிறது. அயல் வீட்டுப் பெண் சொல்லும் இனிய சொல்லைத் தோழி, கிடங்கில் என்ற ஊரைப் போன்ற இனிய சொல் என உவமிக்கிறாள். ஊரின் இனிமையும் சொல்லின் இனிமையும் கபிலர் உள்ளத்தில் எப்படியோ சந்தித்திருக்கின்றன !
2.2.2 உணர்ச்சி வெளிப்பாட்டு முறைகள்
உணர்ச்சியைச் சற்று அழுத்தி உள்ளடங்கிய தன்மையில் நிறுத்துவதன் மூலம் அதனைப் பன்மடங்கு வலுவுள்ளதாக்கும் ஒருவகைக் கலை உத்தியைச் சங்கப் பாடலில் காணலாம். நற்றிணை 45-ஆம் பாடலில் தோழி செய்வது இது தான். தலைவியைச் சந்திக்க விரும்பும் தலைவனைத் தோழி அலைக்கழிக்கிறாள். ஆனால் அவள் பேச்சில் பணிவும் மென்மையும் நிறைந்திருக்கின்றன. ‘நீ உயர்குலத்தைச் சார்ந்தவன். நாங்கள் பரதவர் குலம்; மீன் நாற்றமுடைய எங்களிடம் வராதே’ புலவு நாறுதும் செலநின்றீமோ எங்களிடம் வராதே ! ஏதோ எங்களுக்கும் எங்கள் குலத்திலேயே நல்ல மணமகன்களும் உண்டு’ என்று அவள் சொல்லும் சொல்லில் அறிவார்ந்த ஒரு தர்க்க நியாயம் தோன்றும்படியாகவும் இருக்கிறது. இப்படிச் சொல்வதன் மூலமாகத் தலைவனின் மனத்துக்குள் புகுந்து அவனை ஆராயும் உளவியல் செயல்பாட்டில் இறங்கியிருக்கிறாள் தோழி. தலைவி தன்னைவிடத் தாழ்ந்தவள் அல்லள் என்பதை அவனும் அறிவான்; தோழியும் அறிவாள். தலைவனின் உணர்வுகளோடு தோழி நடத்தும் ஒருவித விளையாட்டு இது. ‘தலைவி அடைவதற்கு அரியவள்’ என்பதையும், சந்திப்புக்கு உதவும் தோழியின் செயல் அரிய செயல் என்பதையும் தலைவன் உணரச் செய்யவே இந்த நாடகம். இவ்வளவு அரிய தலைவியை அடிக்கடி களவுப் புணர்ச்சியால் சந்திக்க முடியாது என உணர்ந்து அவளை விரைவில் திருமணம் செய்துகொள்ளத் தலைவன் முடிவு செய்ய வேண்டும் என்பது தோழியின் நோக்கம். இத்தகைய உணர்ச்சி ஒடுக்கமும் உளவியல் நுட்பமும் கவிதையை ஒரு குறிப்பிட்ட பயனை நோக்கிக் கொண்டு செல்வதோடு, படிப்பவர்க்குச் சுவையான அனுபவத்தையும் வழங்குகின்றன.
சேகம்பூதனார் (நற்றிணை-69) தலைவியின் பிரிவுத் துயரத்தை வெளிப்படுத்தும் முறை சிறப்பாக அமைகிறது. பாடலின் பெரும்பகுதியை மாலைப் பொழுதின் அழகையும் மயக்கும் இனிமையையும் கொண்டு நிரப்பியிருக்கிறார். வெளிச்சம் மங்கும் மாலை, பறவைகளின் ஒடுங்கல், மான்களின் அன்புப் பிணைப்பு, பூக்களின் இனிய மலர்ச்சி, மாடுகளின் மணியோசையுடன் இடையர் குழலோசை - என்று எல்லாப் புலன்களையும் இன்பத்தால் நிரப்பும் புலவர், தலைவியின் சார்பாக நின்று மாலையின்மீது வழங்கும் தீர்ப்பு வேறுவிதமாக இருக்கிறது. அதனை ‘அருள் இல் மாலை’ எனக் குறிப்பிடுகிறார். கவிதையின் அழகுணர்ச்சி சட்டென்று அவல உணர்ச்சியாக மாறிவிடுகிறது. இரக்கமற்றது இயற்கை எனக் காணும் தலைவியின் உணர்ச்சி விரிவாகச் சொல்லப்படவில்லை. ஆயினும் கவிதையின் முழு உள்ளடக்கம் தலைவியின் உணர்ச்சிதான். இது தான் உணர்ச்சி வெளிப்பாட்டு முறையில் சங்க இலக்கியத்தின் தனித்தன்மை.
காதலைத் துன்பமான இன்பம் எனக் கவிஞர்கள் சொல்வதுண்டு. காதல் ஒன்றுதான்; அதுவே இன்பம், அதுவே துன்பம் என உணர்த்துகிறார்கள். ‘காதல் ஒரு வித்தியாசமான நெருப்பு; விலகியிருக்கும் போது சுடுகிறது, நெருங்கினால் குளிர்கிறது’ என்கிறார் திருவள்ளுவர். காதலின் இன்பப் பகுதியை அடைய நிறையத் துன்பப் பகுதியைத் தாண்ட வேண்டியுள்ளது. இந்தத் தாண்டலுக்காக ஊரைவிட்டே போய்விடத் துணிவு கொள்கிறாள் உலோச்சனார் பாடல் தலைவி. (நற்றிணை-149) பெண்கள் சிலரும் பலருமாகத் தெருக்களில் கூடிநின்று அவளது களவுக் காதலைப் பற்றிப் பழிதூற்றுகிறார்கள். அன்புள்ள அன்னையும் கடிந்து கொள்கிறாள். தாங்க முடியாத வருத்தம், தலைவனுடன் உடன்போக்குச் சென்றுவிடலாமா என நினைக்கத் தூண்டுகிறது. அதன் பின்விளைவு என்ன என நினைத்துப் பார்க்கிறாள். அவளைத் துன்புறுத்திய ஊர்தான் துன்புறும். பழிச்சொற்களைச் சுமத்தத் தலைவி இல்லாததால் அவற்றைப் பேசுவோர் தாமே சுமந்து அலைய நேரிடும். இந்த நினைவே தலைவிக்குச் சற்று ஆறுதல் தருவதாக இருக்கிறது.
2.2.3 காட்சித் தன்மை - நாடகத்தன்மை
மாயோனன்ன என்னும் கபிலர் பாடல் (நற்றிணை-32) முழுமையான ஒரு பாவனை நாடகக் காட்சியாக அமைந்திருக்கிறது. கண்ணில் காணும் காட்சி ஒன்று; மனத்திற்குப் புரியும் உண்மை வேறொன்று. ஏமாற்றமும் வருத்தமும் தோய்ந்த முகத்தோடு தலைவியின் எதிரில் நிற்கிறாள் தோழி; தோழியின் சொற்களை மறுக்கும் முகக்குறிப்போடு நிற்கிறாள் தலைவி. என்ன நடக்கிறது இவர்களுக்கிடையே? தலைவனின் துயரத்தைப் பார்த்து இரங்கிய தோழி, அவனைச் சந்திக்க ஒப்புக் கொள்ளுமாறு தலைவியை வேண்டுகிறாள். தலைவி மறுக்கிறாள். தன் சொல்லுக்கு மதிப்பில்லை, தலைவனிடம் சொன்ன உறுதிமொழியைக் காப்பாற்ற முடியவில்லை என்பதனால் வருந்தும் தோழி, ‘என் சொல்லைப் பொருட்படுத்தாவிட்டாலும் சரி, நீயே தலைவனது நிலையைப் பார் ! என்னைவிட மேலான உன் தோழியரோடும் கலந்து ஒரு முடிவுக்குவா’ என நொந்து பேசுகிறாள். இதுவே கபிலர் நம் கண்ணெதிரே காட்டும் காட்சி. இது அப்படியே உண்மையன்று. இங்குப் பேசும் தோழியை விட நெருக்கமான தோழி வேறுயாரும் இல்லை. தலைவனைத் தலைவி மறுப்பதற்கு அவன் முன்பின் தெரியாதவனுமல்லன். தலைவியும் தலைவனும் முன்பே களவுப் புணர்ச்சியில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். தோழியும் தலைவியும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு ஒருவரையொருவர் ஆழம்பார்க்கும் ஒரு பாவனை நாடகமே இது. காதற்புணர்ச்சி இன்பம் என்றால் அந்நிகழ்வைச் சுற்றி நடைபெறும் அது தொடர்பான நிகழ்வுகளும் பேச்சுக்களும் இன்பமேயாகும். அதனால் தான் காதல் ஒழுக்கம் (உரிப்பொருள்) பற்றிய இலக்கண வரையறை சொன்ன அறிஞர்கள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்பனபோல அதனை விரிவாக்கிக் கூறினர். காதல் அகம்தான். அகத்துக்கு உள்ளேயும் ஒரு மறைவான புறவெளி இருப்பதை இந்நாடகம் உணர்த்துகிறது.
ஒரு பொருளின் ஓர் அசைவு ஒரு காட்சியாக முடியுமா? ஆகுமென்றால் அதைப் படிமம் என்கின்றனர் இன்றைய இலக்கியவாதிகள். உவமை, உருவகம் போன்றவைகளைத் தாண்டி, ஒரே வீ்ச்சில் புலன் உணர்வு ஒன்றை உருவாக்கி விடும் உத்திதான் படிம உத்தி. ஒன்றோடு மற்றொன்றைப் பொருத்திக் காட்டுவது அன்று படிமம். ஒன்றினுள் ஒன்றாக உட்கலந்து ஒரே புலன்காட்சியாகத் தெரிவது அது. சங்கப் பாக்களில் செறிவான படிமங்கள் பல உண்டு. சேகம்பூதனாரின் (நற்றிணை-69) முல்லை நில வருணனையில் இத்தகைய படிமக் காட்சிகள் சிலவற்றைக் காணலாம். ஒருவர் ஒரு செயல் செய்கிறார் என்றால் அச்செயலால் உருவாகிய பொருள் ஒன்று இருக்குமல்லவா ! தச்சர் செய்வது நாற்காலி; தட்டார் செய்வது நகை; சிற்பி செய்வது சிலை என்பதுபோலச் சொல்லலாம். புலவர் கதிரவன் என்ன செய்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அவன் ‘பகல் செய்கிறான்’ என்கிறார். கதிரவன் கையில் பகல் ஓர் உற்பத்திப் பொருளாக நம் புலனுக்குப்படுகிறது அல்லவா ! இதுதான் படிமக்காட்சி. ‘முல்லை மலர்கிறது’ என்று சொல்லாமல், “முல்லை முகைவாய்திறப்ப என்பதன் மூலம் முல்லைக்கு வாய் இருப்பதை, அது திறந்து கொள்வதைக் காட்சிப்படுத்துகிறார். அதேபோலக் காந்தள் மலர்வதைக் காந்தள் விளக்கேற்றுகிறது எனப் படிமம் செய்கிறார். எல்லாவற்றிலும் மேலாக மாலைப்பொழுதை உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனிதப்பிறவி போலக் காட்டுகிறார். தன் அழகால் உலகுக்கெல்லாம் மகிழ்ச்சி தருகிறது; தலைவிக்கு மட்டும் ‘அருள் இல்லாத மாலை’யாகிக் கொடுமை செய்கிறது. இத்தகைய படிமக் காட்சிகளை நிமிட நாடகங்களாக்கிக் காட்டும் கலைத்திறன் பாராட்டுக்குரியது தானே!
குழந்தைகள், சிறுவர் சிறுமியர் விளையாடும் வீட்டுச்சூழல் இனியது. குழந்தைகளுக்குப் பாலோ உணவோ ஊட்டுவதற்குத் தாய்மார் படும்பாடு அறிவோம். காலம்காலமாக இந்தக் காட்சி அன்பும் அரவணைப்பும் கலந்ததாக ஒரேமாதிரி இருந்து வருகிறது. போதனாரின் பிரசங்கலந்த எனும் பாடல் (நற்றிணை-110) பாலுண்ண மறுத்து ஓடும் சிறுமியைக் காட்டுகிறது. பொற் கிண்ணத்தில் இட்டு ஏந்திய பாலுடனும், பொய் அடி அடிப்பதற்காக ஓங்கிய பூங்கொத்துடனும் பின்தொடரும் தாய், துரத்திப் பிடிக்க முடியாமல் களைத்து நிற்கும் முது செவிலியர், அவர்கள் உள்நுழைந்து பிடிக்க முடியாதபடி பூம்பந்தலுக்குள் நுழைந்து கொள்ளும் சிறுமி - இப்படி ஓர் அழகிய காட்சி விரிகிறது பாடலின் முன்பகுதியில். பாடலின் பின்பகுதிக் காட்சி முற்றிலும் எதிரானது. அதே பெண், இப்போது விளையாட்டுச் சிறுமியல்லள். இளம் மனைவி. அவள் இருப்பிடம் கணவனது மனை. இப்போதும் அவள் “பொழுது மறுத்து” (ஒரு பொழுதுவிட்டு ஒரு பொழுது) உண்ணுகிறாள். ஆனால் காரணம் வேறு. கணவன் குடும்பம் சற்று வறுமைப்பட்டிருக்கிறது. விளையாட்டுச் சிறுமியும் பக்குவ முதிர்ச்சியுள்ள இளம் மனைவியும் அடுத்தடுத்த காட்சிகளாகக் காட்டப்படுகின்றனர். இரு நிலைகளுக்கிடையே உள்ள பெரும் வேறுபாடு தோழியரையும் செவிலியையும் வியப்புக்குள்ளாக்குகிறது. நம்மையும் தான்!
சங்கப் புலவர்கள் தலைவன் தலைவி தோழி போன்ற தலைமைப் பாத்திரங்களை மட்டுமின்றி, ஏதோ ஒரு நோக்கத்துக்காக, எப்போதோ ஒருமுறை வந்துபோகும் மிகச்சிறு துணைப் பாத்திரங்களையும் கூடஒரு முழுமை தோன்றுமாறு கவனத்துடன் படைப்பார்கள். தூங்கலோரியார் பாடலில் (நற்றிணை-60) இடம்பெறும் ஓர் உழவனின் சி்த்திரம் அழகாக உருவாகிறது. தலைவன் - தலைவி காதல் நிகழ்வில் உழவனுக்குப் பங்கு எதுவுமில்லை. தோழி தலைவனுக்கு ஒரு செய்தியை - தலைவி இற்செறிக்கப்பட்டிருக்கிற செய்தியைத் தெரிவிக்க வேண்டும். நேரடியாகச் சொல்லாமல் ஓர் உழவனைப் பார்த்துப் பேசுவது போலப் பேசுகிறாள். உழவன் காதில் அது விழாமல் கூடப் போயிருக்கலாம். அது அவனுக்குரிய செய்தி அல்லவே! ஆனாலும் அந்த உழவனைக் கூட மனத்தில் முழுமையாகப் படியும் ஓவியமாக்கிக் காட்டுகிறார் புலவர். விடியலில் மேற்கொள்ள வேண்டிய நடவு வேலைக்காக இரவு உறக்கமில்லாதிருந்திருக்கிறான். விடியலில் புறப்படுமுன் அவன் உணவு உண்பதுதான் காட்சி. பெரிய வரால் மீன் துண்டுகள் கிடக்கின்ற குழம்புடன் அரிசிச் சோற்றை மயக்கமேற உண்கின்றான். அதை வருணிக்கின்ற புலவர் அவனுடைய மனத்தின், நாவின் ஆசை முழுவதையும் அவனுடைய கைக்கு மாற்றுகிறார். கவர்படு கையை கழும மாந்தி- ஆசை நிரம்பிய கை என்கிறார். இந்த அடியிலேயே பாத்திரத்தின் அந்த நேர உணர்வை முழுமையாக்குகிறார்.
அலர் தூற்றுவது பற்றிச் சங்கப் பாடல்கள் நிறையவே சொல்கின்றன. பெரும்பாலும் அது பாத்திரக் கூற்றாகவே வரும். உலோச்சனார் பாடலில் (நற்றிணை-149) அது அபிநயக் காட்சியாகக் காட்டப்படுகிறது. தெருக்களில் அங்கங்கே கூடி நிற்கிறார்கள் பெண்கள். ஓரிடத்தில் சிலர்; வேறோரிடத்தில் பலர். அலர்தூற்றப்படும் பெண் உயர்குலப் பெண் ஆகையால், கடைக்கண்ணால் ஒருவருக்கொருவர் சைகை செய்து கொள்கிறார்கள்; சுட்டுவிரலால் மூக்கி்ன் உச்சியை அவ்வவ்போது தொட்டுக்கொள்கிறார்கள். மௌனத்திலேயே தூற்றுதல் நிகழ்கிறது.