தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடல்களின் வடிவ ஒழுங்குகள்

  • 2.3 பாடல்களின் வடிவ ஒழுங்குகள்

    கவிஞன் தன் பாடல் பொருளை எவ்வாறு வடிவமைக்கிறான் என்பது கவனிக்கத் தக்கது. அவன் உள்ளத்தில் வடிவெடுத்த கவிதை, மொழிக்கு இடமாற்றம் ஆவதற்கு ஏற்ற புறவடிவத்தையும் அகவடிவத்தையும் அவன் அமைத்துக் கொள்ளும் திறத்தை இங்குக் காணலாம்.

    2.3.1 புறவடிவம்

    இப்பகுதியிலும் ஆசிரியப்பாவுக்குரிய ஓசை ஒழுங்கு சிறப்பாக அமைந்த பாடல்கள், அடிகள் உள்ளன. ஆசிரியர் பெயர்காணப்படாத விளையா டாயமொடு எனத் தொடங்கும் பாடலில் (நற்றிணை-172)

    நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்
    றன்னை கூறினள் புன்னையது சிறப்பே
    அம்ம நாணுதும் நும்மொடு நகையே

    என வரும் அடிகளிலும்,

    மாயோனன்ன எனத் தொடங்கும் கபிலர் பாடலில் (நற்றிணை-32)

    அரிய வாழி தோழி பெரியோர்
    நாடி நட்பின் அல்லது
    நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே

    என வரும் அடிகளிலும் ஓசை மிக இனிமையாக அமைந்திருப்பதைப் படித்துப் பார்த்து உணர்ந்திருப்பீர்கள்.

    வெள்ளி வீதியார் பாடலில் (நற்றிணை-70)

    சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
    துறைபோ கறுவைத் தூமடி அன்ன
    நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே

    என வரும் தொடர் அடுக்கு, தலைவியின் அவசர அழைப்பைக் காட்டி, அவளுக்குள்ளிருக்கும் உணர்ச்சிப் பெருக்குக்கு ஏற்ற ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது.

    2.3.2 அகவடிவம்

    அமுதம் உண்க நம் அயலில் ஆட்டி

    (நற்றிணை-65, கபிலர்)

    என்று தொடங்குகிறது ஒருபாடல். யார் அவள்? அமுதம் உண்ணும் சிறப்புக்கு என்ன நற்செயல் செய்தாள்? இந்தக் கூற்று யார் யாருக்குச் சொல்வது? எனும் கேள்வி, வியப்புகளைப் பாடலின் முதல் அடி நமக்குள் எழுப்புகிறது. விடை ஈற்றடியில் கிடைக்கிறது. ‘தலைவன் வந்துவிடுவான்’ என்பதைச் சகுனமாக, விரிச்சியாகச் சொல்லியிருக்கிறாள் அவள் என்பதுதான் காரணம். பெருமலை நாடனை வரூஉம் என்றோளே. ஒரு காட்சியின் இடையில் நுழைந்து, சற்றே காத்திருந்தபின் பொருள் விளங்கிக் கொள்ளும் மகிழ்ச்சியைப் படிப்பவனுக்கு வழங்குகிறது இவ்வடிவமைப்பு.

    பிரசங்கலந்த எனத் தொடங்கும் போதனார் பாடல் (நற்றிணை-110) உணர்வைத் தூண்டும் முரண்பட்ட இரு காட்சிகளை இடைவெளியின்றி அடுத்தடுத்து நிறுத்துகிறது. தலைவி விளையாட்டுச் சிறுமியாக ஓடி, ஆடித் தாயரை அலைக்கழித்து உண்ண மறுத்து ஒதுங்கும் காட்சி முதலாவது; இளம் மனைவியாகத் தலைவனின் வறுமை நிலைக்கேற்பத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு ஒரு பொழுதுவிட்டு ஒரு பொழுது உண்பது இரண்டாவது காட்சி. தலைவியின் நிகழ்கால வாழ்வைப் பார்க்கும் தோழியர், செவிலி ஆகியோர் மனத்தில் பின்னோக்குக் காட்சியாகத் (Flash Back) தெரிவதே இளம்பருவ விளையாட்டுக் காட்சி. முரண்பட்ட காட்சிகளை இணைக்கும் வடிவ அழகு, சிறந்த கவிதை இன்பத்தைத் தருகிறது.

    விரைப்பரி வருந்திய என்ற மருதனிளநாகனார் பாடலை (நற்றிணை-21) வடிவமைப்பைக் கொண்டு மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. உடன் வந்த பணியாட்கள் மெல்ல, விருப்பம்போல் வரட்டும் எனத் தலைவன் சொல்வது. 2. தீண்டா முள்ளால் தீண்டித் தேர்க்குதிரையை விரைந்து செலுத்துமாறு தலைவன் பாகனைத் தூண்டுவது. 3. காட்டுக் கோழி கவ்விய இரையுடன் தன்பேடையைத் தேடுவதைத் தலைவன் பாகனுக்குச் சுட்டிக் காட்டுவது. முறையான ஒரு தர்க்க அமைப்பின் படி பார்த்தால் இப்பகுதிகள் 3,2,1 என்ற வரிசை முறையில் வருவதே பொருத்தமாகும். ஆனால் கவிதையின் உணர்ச்சி ஓட்டம், தலைவனின் மன வேகம் இவ்வாறு எண்ணங்களையும் செயல்களையும் முன்பின்னாக மாற்றி விடுகிறது. இந்த மாற்றத்தால் தான் உரைநடை கவிதை ஆகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 12:30:15(இந்திய நேரம்)