Primary tabs
4.0 பாட முன்னுரை
பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? தெரியாது. ஆனால் காதலியின் கூந்தலுக்கு மணம் உண்டு. இந்தச் சுவையான வினா விடையுடன்தான் உங்கள் குறுந்தொகைப் பாடம் தொடங்குகிறது. தலைவியின், நள்ளிருள் யாமத்துத் தனிமைத் துயரில், தலைவன் அருகில் இல்லாததால் வீணே அழியும் தன் அழகை நினைத்துப் புலம்பும் வருத்தமும், எப்போது திருமணம் செய்துகொள்வாரோ என்ற ஐயம் கலந்த வருத்தமும், தலைவன் மீது கொண்ட காதல் தலைவியின் உயிரையே முறித்துவிடுமோ என்னும் தோழியின் அச்சமும் ஆகிய இவைகளை இப்பாடப் பகுதியில் காணவிருக்கிறீர்கள். ஒருவேளை, நீங்கள் முன்பே அறிந்திருக்கக் கூடிய ஒரு பாடலும் இப்பாடத்தில் உண்டு. காதல் பிணைப்பின் எதிர்பாராத தன்மையை உணர்த்தும் ‘யாயும் ஞாயும்’ எனும் பாடல்தான் அது. பரத்தையாயிருந்தால் என்ன, பெண்தானே அவளும்! தன்னைப் புறங்கூறியது பற்றி அறிந்தால் எப்படிச் சீறிப் பாய்வாள் என்பதைக் காட்டும் பாடலும் இப்பாடத்தில் உண்டு. இப்பாடல்களின் உள்ளடக்கம், உத்திகள், உருவமைப்பு பற்றிய விளக்கங்களை இனி நீங்கள் படியுங்கள்.