தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடல்களின் வடிவ ஒழுங்குகள்

  • 4.3 பாடல்களின் வடிவ ஒழுங்குகள்

    கவிதையின் உள்ளடக்கம் படிப்பவரின் மனத்தில் ஓர் உருவம் பெற, அதற்கு ஏற்ற வடிவம் அமைவது இன்றியமையாதது. குறுந்தொகைப் புலவர்கள் கவிதை வடிவமைப்பில் எந்த அளவு சிறந்து விளங்குகின்றனர் என இனிக் காணலாம்.

    4.3.1 புறவடிவம்

    ஆசிரியப்பாவின் சிறப்பான அமைப்புக்குக் குறுந்தொகையில் பல பாடல்கள் எடுத்துக்காட்டுகளாகக் கூடும். ஒளவையாருடைய பாடல் (குறுந்தொகை-23) மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

    அகவன் மகளே அகவன் மகளே
    மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன் மகளே பாடுக பாட்டே
    இன்னும் பாடுக பாட்டே அவர்
    நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே

    ஆசிரியப்பாவின் ஓசை சிறப்பாக அமைந்திருப்பதைப் படிக்கும் போதே உணரலாம். பாட்டின் அமைப்புச் சிறப்பு அதன் வேக நடையில் உள்ளது. தோழியின் அவசரம், ஆர்வம், வேகம் ஆகியவை பாடல் அமைப்பால் நன்கு காட்டப்படுகின்றன. அகவன் மகளை அடுத்தடுத்து மூன்றுமுறை விளிப்பது, ‘பாடுக பாட்டே’ என்பதை இருமுறை அடுக்குவது இவற்றால் பாடலின் இயக்க வேகம் கூடுகிறது. வேறு நினைவுக்கு, வேறு பேச்சுக்கு, வேறு செயலுக்கு இடமில்லாதபடி பாடல் ஒருமுகப்பட்ட நோக்கத்திற்கேற்ப வடிவம் கொள்கிறது.

    இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தலைவன் மீது தலைவியின் மனத்தில் ஐயம் எழுகிறது. அவளது முகக்குறிப்பால் இதனை உணரும் தலைவன் அவளுடைய ஐயத்தைப் போக்கி மனநிறைவைத் தரவேண்டும். கவிதை வடிவம் எப்படி அமைந்தால் இந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கும்? புலவர் தலைவன் கேட்பதாக மூன்று கேள்விகளை அடுக்குகிறார்.

    யாயும் ஞாயும் யாரா கியரோ?
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
    யானும் நீயும் எவ்வழி அறிதும்?

    பதிலை உள்ளடக்கிய கேள்விகள் இவை. கருத்துக் கூறும் சாதாரண வாக்கிய வடிவமாக அன்றி, வினா வடிவாக அமைவது தலைவியைச் சிந்திக்க வைக்கும் நோக்கத்திற்குப் பொருத்தமாக உள்ளது. அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற இறுதியடியில் தலைவிக்கு முடிவான விடை கிடைக்கிறது.

    4.3.2 அகவடிவம்

    உள்ளார் கொல்லோ தோழி (குறுந்தொகை-16) ஒரு பிரச்சினையின் நடுவே கேட்கும் கேள்விக்குரல் தொடக்க அடியாக வருகிறது. தலைவி மட்டுமன்றி நாமும் தோழி என்ன சொல்ல வருகிறாள் என்று அவள் பக்கம் கவனம் செலுத்துகிறோம். இறுதியடியில்தான் காடிறந்தோர் என்ற எழுவாய் வருகிறது. அது முதலில் வந்திருந்தால் கவிதை வடிவம் நமக்கு ஆர்வக் கிளர்ச்சியைத் தந்திருக்காது. யாரினும் இனியன் பேரன்பினனே (குறுந்தொகை-85) எனும் பாடலில் பாணன்வாயே எனும் கடைசிச் சொல்வரையில் தோழி தலைவனைத் தாக்கிப் பேசுகிறாள் என்பதே தெரியாதபடி வடிவமைத்திருக்கிறார் வடம வண்ணக்கன் தாமோதரனார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 18:20:34(இந்திய நேரம்)