தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடல் காட்சிகள்

  • 4.1 பாடல் காட்சிகள்

    சுருக்கமான பேச்சுகள் காட்சிகளுக்கும், காட்சிகள் உணர்வுகளுக்கும் உங்களைக் கொண்டு செல்வதை இப்பாடல்களில் நீங்கள் காணலாம்.

    கொங்குதேர் வாழ்க்கை

    எனத் தொடங்கும் இறையனார் பாடல் குறுந்தொகை-2)

    இறையனார்

    மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுளே இறையனார் என்னும் புலவர் எனக் கூறுவர். திருவிளையாடற் புராணம், கடம்பவன புராணம், தமிழ்விடுதூது போன்ற பிற்கால நூல்களில் சிவன் தருமிக்குப் பொற்கிழி கிடைப்பதற்காகக் ‘கொங்கு தேர் வாழ்க்கை’ எனும் பாடலைப் பாடிக் கொடுத்தார் எனக் கூறப்படுவது காணலாம்.

    திணை : குறிஞ்சி

    கூற்று : இயற்கைப் புணர்ச்சியின்போது தலைவன் தலைவியின் நாணம் நீங்குவதற்காக, மெய்தொட்டுப் பயிறல் (உடலைத் தொட்டுப் பழகுதல்) முதலிய செயல்களைச் செய்து, அவள் மீதுள்ள அன்பு தோன்ற அவள் நலம் பாராட்டுதல் (நலம் = அழகு).

    இப்பாடலில் தலைவன் தலைவியின் கூந்தலில் அமர்ந்துள்ள வண்டைப் பார்த்துப் பேசுவதுபோல அவள் அழகைப் பாராட்டுகிறான். வண்டை விரட்டுவது போலத் தலைவியின் தலையைத் தொடும் குறிப்பு இருப்பதால் மெய்தொட்டுப் பயிறல் துறையும் இப்பாடலுக்குப் பொருந்தும் எனலாம். இப்பாடல் தலைவன் கூற்று.

    தலைவன் தலைவி கூந்தலில் அமர்ந்துள்ள வண்டை நோக்கிப் பேசுகிறான் “அழகிய சிறகுகளையுடைய வண்டே! தேனைத் தேடி ஆராய்ந்து உண்பதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறாய். ஆதலால் நீ சொல்! என் மன விருப்பம் அறிந்து எனக்காக ஒருதலைப் பட்சமாகச் சொல்ல வேண்டாம்; உன் அனுபவத்தில் நீ கண்டுணர்ந்த உண்மையையே சொல். என் தலைவி பல பிறவிகளிலும் என்னோடு காதல் உறவு பூண்டு நெருங்கிய பேரன்பினையுடையவள். மயில் போன்ற சாயலைக் கொண்டவள். அழகிய பல்வரிசையை யுடையவள். நீ அறிந்துள்ள பூக்களுள் இவளது கூந்தல் போலச் சிறந்த நறுமணமுள்ள பூக்களும் உண்டோ?

    மயிலியல்
    செறியெயிற் றரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீ அறியும் பூவே

    (மயிலியல் = மயில்போன்ற சாயல். சாயல் என்பது இன்னது என உணர்த்த முடியாத அழகு. அது அழகின் மென்மை. உடலின் சிறு சிறு அசைவுகளில் தோன்றும் அழகு, செறிஎயிறு = செறிவான பல்வரிசை)

    இயற்கைப் புணர்ச்சியில் இப்போதுதான் கண்டு புதிதாகப் பழகும் தலைவன், பல பிறவிகளிலும் அவளே தன் காதல் இணையாக இருந்தவள் என உணர்த்துவதன் மூலம் தலைவியின் உள்ளத்தில் ஒரு பாதிப்பை உருவாக்குகிறான். அவள் மனத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டு அவள் அவன்மீது நம்பிக்கை கொள்ளப் பயிலியது கெழீஇய நட்பு என்னும் தொடர் உதவும், ‘பயின்று பல பிறவிகளிலும் சேர்ந்த நட்பு’ என்பது பொருள்.

    தலைவியின் கூந்தல் நறுமணத்தைப் பற்றித் தீர்ப்புரைக்கத் தகுதியானது தேன் உண்ணும் வண்டு. “கொங்குதேர் வாழ்க்கை”யையுடைய வண்டு! ‘ஒருதலைப்பட்சமாகச் சொல்லி விடாதே’ என்று தலைவன் வண்டினிடம் சொல்வதற்குக் காரணம், அது அவனது மலைப்புறத்து வண்டு என்பதாகும். இக்குறிப்பின் மூலம் தலைவிக்குத் தலைவன் குறிப்பாக உணர்த்த விரும்புவது அவனது ஊரும் தொலைவில் இல்லை, அருகில்தான் உள்ளது என்பதாகும். இக்குறிப்பும் தலைவிக்கு ஒரு நம்பிக்கை உருவாக்குவதாகும்.

    இப்பாடலைத் தொடர்புபடுத்தும் புராணக்கதை ஒன்று உண்டு. அதற்கு ஒரு காரணம் பாடலைப் பாடிய புலவர் பெயர் ‘இறையனார்’ என்றிருப்பதாகும். தன் தேவியின் கூந்தல் மணம் இயற்கையானதா எனச் சிந்தித்த பாண்டிய மன்னன் தன் ஐயம் இன்னதென்று வெளிப்படுத்தாமல், அதனைத் தீர்க்கும் புலவனுக்கு ஆயிரம் பொன் பரிசு தருவதாக அறி்வித்ததும், தருமி என்ற ஏழைப் புலவனுக்கு உதவச் சிவபெருமான் “கொங்கு தேர் வாழ்க்கை” என்ற பாடலைப் பாடித் தருமிக்கு வழங்கியதும், அரசவையில் நக்கீரர், பாட்டில் பொருட்குற்றம் இருக்கிறது என்று சொல்லிப் பரிசைத் தடுத்ததும், சிவன் வந்து வாதாடியும் ‘குற்றம் குற்றமே’ எனப் பிடிவாதம் செய்ததும், சிவனின் நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கப்பட்டதும், பின் சாப விடுதலை பெற்றதும் திருவிளையாடற் புராணத்தில் விரிவாகச் சொல்லப்படுகின்றன.

    நள்ளென்றன்றே யாமம்

    எனத் தொடங்கும் பதுமனார் பாடல் (குறுந்தொகை-6).

    பதுமனார்

    பதுமனார் எனும் பெயர்கொண்டு இவரைச் சமணர் எனக் கூறுவாரும் உண்டு. பெரும்பதுமனார் என்பது வேறொரு புலவரைக் குறிக்கும் பெயர். பதுமனார் தலைவியின் பிரிவுத் துயரை, ‘நனந்தலை உலகமும் துஞ்சும்’ என அவள் வருந்துவதைக் கூறி, அழகுற வெளிப்படுத்தியுள்ளார்.

    திணை : நெய்தல்

    கூற்று : தலைவன் வரைவிடை வைத்து (திருமணத்தைத் தள்ளி வைத்து)ப் பிரிந்தபோது ஆற்றாளாகிய தலைமகள் தோழி கேட்குமாறு சொல்லியது.

    தலைவியை மணப்பதற்காகப் பொருளீட்டத் தலைவன் பிரிந்து போயிருக்கிறான். பிரிவு ஆற்றாத தலைவி, இரவில் தனக்கு ஆறுதல் தரும் துணையாக விழித்திராமல் உறங்கிய தோழியைப் பழித்துத் தன் வருத்தம் தோன்றப் பேசுகிறாள். இது தலைவி கூற்று.

    தலைவி தோழி கேட்குமாறு தன்னொடு பேசுகிறாள் : ‘இந்த நடு இரவு ‘நள்’ என்ற ஓசையுடையதாயிருக்கிறது. என்னைப் பற்றி அலர் தூற்றுதலை விட்டு மக்களும் இனிதாக உறங்குகின்றனர். என்மீதுள்ள வெறுப்பை மறந்து இந்த அகன்ற உலகமும் துஞ்சுகிறது. நான் ஒருத்தி மட்டும்தான் துயிலாதிருக்கிறேன்’

    நனந்தலை உலகமும் துஞ்சும்
    ஓர்யான் மன்ற துஞ்சாதேனே

    (நனந்தலை = அகன்ற இடத்தை உடைய ; துஞ்சும் = உறங்கும்; மன்ற = மிகவும்)

    ‘நான் ஒருத்தி மட்டுமே துயிலாதிருக்கிறேன்’ என்று தலைவி சொல்வதன் குறிப்பு, துன்ப நேரத்தில் துணையாக இருக்க வேண்டிய தோழியும், இரவின் கொடிய கைகளில் தலைவியை விட்டுவிட்டு உறங்கிவிட்டாள் என்பதாகும். திருவள்ளுவர் படைத்த தலைவியும் இதே போன்ற உணர்வை வெளிப்படுத்துகிறாள்.

    மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
    என்னல்ல தில்லை துணை      (திருக்குறள்-1168)

    ‘எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்ட இந்த இரவு, பாவம், எந்த நேரமும் இறந்துபோகக்கூடிய என்னைப்போய்த் துணையாகக் கொண்டிருக்கிறது!’ என இரவுக்காக வருந்துவது போல் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள்.

    கழனி மாத்து

    எனத் தொடங்கும் ஆலங்குடி வங்கனார் பாடல் (குறுந்தொகை-8).

    ஆலங்குடி வங்கனார் : இப்புலவரைப் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் 3-இல் கண்க.

    திணை : மருதம்

    கூற்று : தலைவி தன்னைப் புறம்பேசினாள் எனக் கேள்விப்பட்ட காதற்பரத்தை, தலைவியோடு தொடர்புடைய தோழியர் முதலியோர் கேட்கும்படியாகச் சொல்லியது.

    இப்பாடல் பரத்தை கூற்று.

    காதற்பரத்தை சொல்கிறாள் : ‘வயல் வரப்பிலுள்ள மாமரத்தில் விளைந்து காம்பு இற்றுத் தானே விழுகின்ற இனிய பழத்தைப் பக்கத்திலுள்ள பொய்கையில் வாழும் வாளைமீன் கவ்விக் கொள்ளும். இத்தகைய இனிய ஊரைச் சார்ந்த தலைவன், என் வீட்டில் இருக்கும்போது என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைச் சொல்கிறான் ; தன் வீட்டிற்குப் போகும்போது, கண்ணாடிமுன் நின்று கையையும் காலையும் தூக்கும் கணத்திலேயே அதில் தோன்றும் உருவமும் அவ்வாறே செய்வதைப் போலத் தன் புதல்வனின் தாயான மனைவி என்ன விரும்புகிறாளோ அவற்றை அறிந்து, அவள் விரும்பிய கணத்திலேயே செய்கிறான்.’

    கையும் காலும் தூக்கத் தூக்கும்
    ஆடிப் பாவை போல
    மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே

    (ஆடிப்பாவை = கண்ணாடியில் தெரியும் உருவம் ; மேவன = விரும்புவன)

    தன்னைப் புறம்பேசிய தலைவியைப் பழிக்காமல், அவள் பழிப்பதற்குக் காரணமாக இருக்கிறான் என்று தலைவனைப் பழிக்கிறாள் பரத்தை. தலைவன் தலைவிக்குப் பணிந்து ஆண்மைக்கு இழிவு தோன்ற இயங்குகிறான் என்பது பரத்தையின் குற்றச்சாட்டு. இவ்வாறிருப்பதால் தான் தலைவி, பரத்தையைப் புறம்பேசிப் பழிக்கிறாள் என்பது பரத்தையின் சினக்குறிப்பு.

    இனி, ஓர் ஆண்மகனை அடக்கி ஆள்வது பெண்மைக்கு இழுக்கு என்று தோன்றுமாறும் அமைகிறது இந்தப் பரத்தை கூற்று.

    கழனி மாமரத்திலிருந்து கனிந்து தானே உதிரும் பழத்தை வாளைமீன் கவ்விக் கொள்ளும் என்ற வருணனை குறிப்புப் பொருளுடையது. தலைவிக்குரிய தலைவன், பரத்தையிடம் தானே விரும்பி வருகிறான்; அவனுடன் அவள் மகிழ்கிறாள் என்பதுதான் குறிப்புப் பொருள். தன்னைக் கண்டிக்கத் தலைவிக்கு உரிமையில்லை என்ற எண்ணம் இதில் வெளிப்படுகிறது.

    உள்ளார் கொல்லோ

    எனத் தொடங்கும் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல் (குறுந்தொகை-16).

    பாலைபாடிய பெருங்கடுங்கோ : இப்புலவர் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் 1-இல் காண்க.

    திணை : பாலை

    கூற்று : பொருள் வயிற் பிரிந்தபோது தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி கூறியது.

    பொருள்வயிற் பிரிந்த தலைவன் மீண்டு வாராமை கண்டு வருந்திய தலைவியைத் தோழி, ‘அவர் வந்துவிடுவார்’ என்று கூறி ஆற்றுவித்தது. ‘தலைவர் செல்லும் பாலை நிலத்தில் உன் நினைவை உண்டாக்கும் நிகழ்ச்சி எதுவும் நிகழலாம் ; அது கண்டு அவர் உன்னை நினைத்து மீண்டு வருவார்’ எனத் தோழி காரணம் கூறுகிறாள். இப்பாடல் தோழி கூற்று.

    தோழி தலைவியை நோக்கிச் சொல்கிறாள் : ‘தலைவர் கள்ளிக் காடுகள் மிகுந்த பாலையைக் கடந்து செல்கின்றார். அங்கே ஆறலை கள்வர்கள் தீட்டிய அம்பின் இரும்பு நுனியைச் சரி செய்வதற்காக நகத்தில் புரட்டிப் பார்ப்பார்கள் அப்படி புரட்டும்போது எழும் ஓசை போல, பாலை நிலத்தில் செங்கால் பல்லி, தன் பெண் பல்லியை அழைக்கும்போது எழுப்பும் ஓசை இருக்கும். அந்தக் காதல் அழைப்போசையைக் கேட்கும் தலைவர் நம்மை நினைக்க மாட்டாரா?’

    உள்ளார் கொல்லோ தோழி?

    (உள்ளுதல் = நினைத்தல் ; உள்ளார் கொல் = நினைக்கமாட்டாரா?)

    ‘ஆண்பல்லியின் ஓசை தரும் தூண்டலால் உன்னை நினைத்து விரைவில் திரும்பி வருவார் ; ஆகவே ஆற்றியிரு’ என உணர்த்துகிறாள் தோழி.

    விலங்குகள், பறவைகள், பூச்சிகள் எல்லாவற்றுக்கும் தம் துணையை அழைப்பதற்கென்று தனிப்பட்ட ஓசை எழுப்பும் தன்மை உண்டு. அத்துணைகள் அத்தனியோசைகளை அறிந்து கொள்ளும். இவ்வாறே பல்லியும் ஓசை எழுப்பும். அவ்வோசை பாலை நிலத்தின் அச்சம் தரும் ஓசையாகிய ஆறலை கள்வர் அம்புநுனியை நகத்தில் தேய்க்கும் ஓசை போலிருக்கிறது. இந்த உவமை சிறப்பான பொருத்தத்தால் மட்டுமன்றி வேறொரு காரணத்தாலும் பாராட்டுக்குரியதாகிறது. பல்லி ஓசை தலைவனுக்குத் தலைவியை நினைவுபடுத்தும் ; அம்பு தேய்க்கும் ஓசை, பல்லியை நினைவுபடுத்தி மீண்டும் தலைவியையே நினைவுபடுத்தும். பாலைவழிப் பயணத்தில் இவ்விரு ஓசைகளும் மாறிமாறிக் கேட்குமாதலால் தலைவனுக்குத் தலைவி நினைவு தோன்றும் வாய்ப்புகள் இரட்டிப்பாக உள்ளன என்பதை இவ்வுவமை மூலம் காட்டுகிறார் புலவர்.

    வேரல்வேலி

    எனத் தொடங்கும் கபிலர் பாடல் (குறுந்தொகை-18).

    ஆசிரியர் கபிலர் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் 1-இல் காண்க.

    திணை : குறிஞ்சி

    கூற்று : இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு வேண்டியது.

    (இரவுக்குறி = இரவு நேரத்தில் தலைவன் தலைவியைத் சந்திக்கக் குறிக்கப்பட்ட இடம்.) அது தலைவியின் வீட்டுத் தோட்ட எல்லைக்குள் இருப்பது. இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்துத் திரும்பும் தலைவனைத் தோழி தனியே கண்டு ‘தலைவியின் காமவேதனை அவளால் தாங்க முடியாததாக உள்ளது; விரைவில் அவளை மணந்துகொள்’ என்று குறிப்பாக வேண்டுகிறாள். வரைவு கடாவுதற்குரிய பல காரணங்களுள் ஒன்று இப்பாடலில் அமைந்துள்ள ‘காதல் மிகுதி உரைத்தல்’ என்பது. இப்பாடல் தோழி கூற்று.

    தோழி தலைவனிடம் கூறுகிறாள் : ‘மூங்கிலாகிய வேலியையுடையதும், வேரிலேயே குலைகளையுடையதுமாகிய பலாமரங்கள் நிறைந்த அழகிய மலைச்சாரல் நாட்டையுடைய தலைவனே ! தலைவியுடன் மகிழ்ந்து காதல் இன்பம் துய்த்தற்குரிய செவ்வியை (உரிய வேளை, சூழல்) அறிந்து கொள்வாயாக ! உன்னைத் தவிர வேறு யார் அதனைச் சரியாக உணர முடியும்? மலைப்பக்கத்துப் பலாமரத்தில் சிறிய கொம்பில் கனமான பெரிய பழம் கனிந்து தொங்குவது போல, இவள் உயிரை இவளது காமம் வருத்திக் கொண்டிருக்கிறது. இவள் உயிர் மிகச் சிறிது; இவள் காமமோ மிகப்பெரிது.’

    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கிவள்
    உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

    பழத்தின் சுமையைத் தாங்க முடியாமல் கிளை எப்போதும் முறியலாம் ; அதுபோலக் காமநோயின் கடுமையைத் தாங்கமுடியாமல் தலைவியின் உயிர் எப்போதும் பிரியலாம் என்னும் எச்சரிக்கையை இந்த உவமையின் வாயிலாகத் தோழி தலைவனுக்குத் தெரிவிக்கிறாள்.

    தலைவன் நாட்டுப் பலாப்பழங்கள் வேரிலேயே காய்ப்பதால் பழத்திற்கோ மரத்திற்கோ கேடில்லை. அவை ‘வேர்க்கோட் பலா’க்கள். வேரிலேயே குலை கொண்டவை. தலைவி நாட்டுப் பலாப் பழங்களோ கிளைகளில் தொங்கிக் கிளைகளை வருத்துபவை. இந்த வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவதன் மூலம், தலைவியின் மனச் சுமையைத் தலைவன் உணரவில்லை என அவனுக்குக் குறிப்புணர்த்துகிறாள் தோழி.

    வண்டுபடத் ததைந்த

    என்று தொடங்கும் ஓதலாந்தையார் பாடல் (குறுந்தொகை-21).

    ஓதலாந்தையார்

    ‘ஆந்தை’ எனும் பெயர் வேறு சில புலவர்க்கும் உண்டு. ‘ஆதன் தந்தை’ என்பது ‘ஆந்தை’ என மருவி வழங்கியது. இப்புலவர் பாலைத்திணையைப் பாடுவதில் வல்லவர். ஐங்குறுநூற்றில் நான்காம் நூறாகிய பாலைத் திணையை இவர் பாடியுள்ளார். தலைவிக்குத் தலைவன் மீது உள்ள நம்பிக்கையைக் கானம் காரெனக் கூறினும் யானோ தேறேன் ; அவர் பொய் வழங்கலரே எனும் தலைவி கூற்றில் அழகுறக் கூறியுள்ளார்.

    திணை : முல்லை

    கூற்று : தலைவன் குறித்த பருவம் வரும்வரை தலைவியை ஆற்றுவித்த தோழி, அப்பருவம் வந்தவுடன், இனித் தலைவியை எவ்வாறு ஆற்றுவிப்பது எனக் கவலை கொண்டபோது, குறிப்பால் இதனை உணர்ந்த தலைவி, ‘கவலைப்படாதே! நான் ஆற்றியிருப்பேன்’ எனும் பொருளில் சொல்லியது.

    தலைவி கூற்று இது.

    தலைவி தோழியை நோக்கிச் சொல்கிறாள் : ‘தோழி ! கொன்றை மரங்கள் நிறைந்தது இக்காடு. இம்மரங்களில் ஏராளமான வண்டுகள் வந்து மொய்க்கும்படி புதிய பூக்கள் நெருங்கி நீண்ட கொத்துகளாகப் பூத்துத் தொங்குவது, பொன் அணிகளை அணிந்த பெண்களின் கூந்தல்போல உள்ளது. இந்தப் புதிய பூக்கள் பூத்த கொன்றை மரங்கள் நிறைந்த காடு, ‘இது கார்காலம்தான்’ என்று தெரிவித்தாலும் நான் நம்பமாட்டேன். ஏனெனில், ‘கார்ப்பருவத் தொடக்கத்தில் வந்து விடுவேன்’ என்று சொன்ன தலைவர் பொய் சொல்பவர் அல்லர்.

                   புதுப்பூங் கொன்றைக்
    கானம் காரெனக் கூறினும்
    யானோ தேறேன் ; அவர் பொய்வழங்கலரே

    கொன்றை கார்ப்பருவத்தில் மலர்வது. கவிஞர் “புதுப்பூங்கொன்றை” என்று தெளிவுபடுத்துவது கார்காலம் வந்துவிட்டதைத் தெரிவிக்கத்தான். ஆயினும் தலைவன் சொல்லை உறுதியாக நம்பும் தலைவி ‘பருவம்தான் பொய் சொல்கிறது ; தலைவர் பொய்சொல்லமாட்டார்’ என உணர்த்துகிறாள். இந்த நம்பிக்கைதான், தலைவன் வரும்வரை ஆற்றியிருக்கக் கூடிய மனவலிமையை அவளுக்குத் தருகிறது.

    அடர்ந்த இலைகள் நிறைந்து பசுமையாகத் தோன்றும் கொன்றைக் கிளைக்கு மகளிர் கூந்தலும், மஞ்சள் நிறத்தில் கொத்தாகப் பூத்துத் தொங்கும் மலர்களுக்குக் கூந்தலில் அணிந்துள்ள பொன் நகைகளும் பொருத்தமான உவமையாகின்றன.

    அகவன் மகளே

    எனத் தொடங்கும் ஒளவையார் பாடல் (குறுந்தொகை-23).

    ஆசிரியர் வரலாறு : ஒளவையாரைப் பற்றி நற்றிணை - பாடம் 3-இல் காண்க.

    திணை : குறிஞ்சி

    கூற்று : கட்டுக் காணிய (குறி கேட்க) நின்றவிடத்துத் தோழி அறத்தொடு நின்றது.

    அதாவது, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்ப் பிரிந்த தலைவனைக் கூடமுடியாமல் தலைவி ஆற்றாமை கொண்டு மெலிகிறாள் ; அவள் நோய்க்கும் காரணம் அறிவதற்காகச் செவிலி கட்டுவிச்சி (குறி கூறுபவள்)யை அழைத்துக் குறிகேட்கிறாள் ; அப்போது இடையே குறுக்கிடும் தோழி, ‘இந்நோய் தெய்வத்தால் வந்ததன்று, ஒரு தலைவனால் வந்தது’ என்பதைச் செவிலிக்கும் குறிப்பாக உணர்த்தித் தலைவியின் களவுக் காதலை வெளிப்படுத்துகிறாள். இது தோழி கூற்று. (அறத்தொடு நிற்றல் : தலைவன் - தலைவிக்கிடையேயுள்ள களவுக்காதலை வெளிப்படுத்தல்)

    தோழி கட்டுவிச்சியை நோக்கிக் கூறுகிறாள்: ‘கட்டுவிச்சியே! கட்டுவிச்சியே! சங்குமணி மாலை போன்ற அழகிய வெண்மையான நீண்ட கூந்தலையுடைய கட்டுவிச்சியே! நீ இப்பொழுது பாடிய பாட்டையே மீண்டும் பாடு! குறி கூறுதலை விட்டு அந்தப் பாட்டையே மீண்டும் பாடு! அவருடைய அழகிய பெரிய குன்றைப் பற்றிப் பாடினாயே, அந்தப் பாட்டையே பாடு!’

    அகவன் மகளே பாடுக பாட்டே
    இன்னும் பாடுக பாட்டே,, அவர்
    நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே
    link to movie

    கட்டுவிச்சி குறி சொல்வதற்கு முன் தெய்வங்கள் உறையும் மலைகளைப் பாடுவது மரபு. அவ்வாறு பாடிவரும் போது, முருகன் உறையும் மலையைப் பாடுகிறாள். அந்த மலைதான் தலைவனது மலையும். அறத்தொடு நிற்க வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்த தோழி, அந்தப் பாடல் முடிந்தவுடன் வேறு எதையும் பாடவிடாமல் குறுக்கிட்டு, அந்தப் பாடலையே பாடுமாறு கட்டுவிச்சியை வற்புறுத்துகிறாள். தோழியின் குறுக்கீட்டையும், திரும்பத் திரும்ப ஒரு மலையை - அவர் நன்னெடுங் குன்றத்தைப் பாடச் சொல்வதன் குறிப்பையும் செவிலி கவனித்துக் களவுக்காதலை உணர்வாள், அல்லது தோழியை மேலும் கேட்டு அறிவாள் என்பது தோழியின் திட்டம். களவுக் காதலை வெளிப்படுத்தும் (அறத்தொடு நிற்கும்) முறை எந்த அளவு நாகரிகமாகவும் மென்மையாகவும் இருந்தது என்பதற்கு ஒளவையாரது இப்பாடல் சிறந்த சான்றாகும்.

    யாரும் இல்லை

    எனத் தொடங்கும் கபிலர் பாடல் (குறுந்தொகை-25).

    ஆசிரியர் வரலாறு : முன்னரே பார்த்தோம்.

    திணை : குறிஞ்சி

    கூற்று : வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

    அதாவது, தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் நீட்டிப்பது கண்டு வருந்திக் கூறுவது. தலைவி கூற்று.

    தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி! தலைவர் என்னைக் களவுப் புணர்ச்சியில் கூடிய பொழுது அவ்விடத்தில் சாட்சியாகக் கூடியவர் ஒருவரும் இல்லை. அது நிகழ்ந்த களத்தில் (இடத்தில்) இருந்தவர் அவர் ஒருவரே ! அவர் எனக்குக் கூறிய உறுதிமொழியைப் பொய் ஆக்குவார் ஆனால், நான் என்ன செய்ய முடியும்?

    யாரும் இல்லைத் தானே களவன்
    தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

    ஓடைநீரில் ஆரல்மீன் வருகிறதா என்று கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த, தினைத்தாள் போன்ற சிறிய கால்களையுடைய கொக்கு மட்டும் அவ்விடத்தில் இருந்தது’.

    ‘களவன்’ என்ற சொல்லுக்குக் களத்தில் - இடத்தில் இருப்பவன் என்பது பொருள். ஊர் அவையில் (களத்தில்) இருந்து பிறர்க்கு நீதி வழங்குபவன் என்னும் பொருளும் உண்டு, ‘இவ்வாறு நீதி உரைப்பவனாகிய தலைவனே’ உன்னை விரைவில் மணந்து கொள்வேன்’ என்ற உறுதிமொழியைப் பொய் ஆக்கிவிட்டால் என் நிலை என்னவாகும்?’ எனக் கலக்கமடைகிறாள் தலைவி.

    ‘தந்த உறுதிமொழியில் தவறமாட்டார்கள்’ என்று தலைவர்கள் மீது முழு நம்பிக்கை கொண்ட தலைவியரை நாம் பார்த்திருக்கிறோம். நின்ற சொல்லர் என்று பாராட்டுகிறாள் நற்றிணைத் தலைவி (நற்றிணை-1). ‘நிலம்புடை பெயர்ந்தாலும் என் தலைவர் தான் சொன்ன சொல் தவறமாட்டார்’ என்று நம்புகிறாள் மற்றொரு தலைவி (நற்றிணை-289). ‘காடு கார்காலம் வந்துவிட்டது எனச் சொன்னாலும் நான் நம்பமாட்டேன் ; அவர் பொய் சொல்பவர் அல்லர்’ என்று தலைவனைப் போற்றுகிறாள் வேறொரு குறுந்தொகைத் தலைவி (குறுந்தொகை-21). இவர்கள் எல்லாம் திருமணமானவர்கள்; களவுக்காதலின் தொடக்க நிலையைத் தாண்டியவர்கள். பிரிந்து போயிருக்கும் தலைவர் தம் செயல்முடித்துத் திரும்புவதற்காகக் காத்திருப்பவர்கள்.

    ஆனால், இந்தப் பாடலில் வரும் தலைவி களவுக்காதலின் தொடக்க நிலையில் இருப்பவள்; திருமணத்தை எதிர் நோக்கிக் காத்திருப்பவள். காத்திருக்கும் காலம் நீட்டித்துக் கொண்டு போவதால் ஐயமும் அச்சமும் அவளுக்குத் தோன்றுவது இயல்பே.

    தான் தலைவனைக் கூடிய இடத்தில் யாரும் இல்லை என்ற தலைவி, அங்கே கொக்கு மட்டும் இருந்தது என்கிறாள்; கொக்கு சான்று கூறாது என்பது மட்டுமன்றி, அது காதலர் பக்கம் பாராமல் ஓடைநீரில் ஆரல் மீனைத் தேடிக் கொண்டிருந்தது என்றும் சொல்கிறாள்.

    ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்,
    குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே

    தனக்குச் சாட்சி இல்லாத, ஆதரவில்லாத நிலையை இவ்வாறு உணர்த்துகிறாள்.

    கன்று முண்ணாது

    எனத் தொடங்கும் வெள்ளிவீதியார் பாடல் (குறுந்தொகை-27).

    வெள்ளிவீதியார் : இப்புலவர் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் எண் 2-இல் காண்க.

    திணை : பாலை

    கூற்று : பிரிவிடை ஆற்றாள் எனக் கவலை கொண்ட தோழிக்குத் தலைவி, ‘நான் ஆற்றுவேன்’ என்று பொருள்படக் கூறுவது.

    தலைவி கூற்று.

    தலைவி தோழியிடம் சொல்கிறாள் : ‘நல்ல பசுவினது இனிய பால் கன்றும் உண்ணாமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், மண்ணில் வீணாகச் சிந்தியது போலத் தேமல் படர்ந்த அல்குலையுடைய என் மாமை அழகு எனக்குப் பயன்படாமலும் என் தலைவர்க்கு இன்பம் செய்யாமலும் வீணாகிக் கொண்டிருக்கிறது. அவ் அழகைப் பசலை விரும்பி உண்டு கொண்டிருக்கிறது’.

    எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
    பசலை உணீஇயர் வேண்டும்
    திதலை அல்குல்என் மாமைக் கவினே

    (என்னை = என்+ஐ= என்தலைவன்; பசலை = பிரிவினால் ஏற்படும் நிறமாற்றம். இது பீர்க்கம் பூ நிறத்தில் உடலை மூடுவதால் தலைவியின் மாமை (மாந்தளிர் நிற) அழகு மறைகிறது. உணீஇயர் = உண்ண ; வேண்டும= விரும்புகிறது. திதலை = தேமல்.)

    ஆவின்பால் கன்றுக்குரியது; அதுபோலத் தலைவியின் அழகு தலைவிக்கு உரியது. தலைவிக்கு அவள் அழகு பயன்படுவது என்றால் என்ன? அவ்வழகு அவளைவிட்டு நீங்காதிருந்து அவளை மனத்தாலும் உடலாலும் செழிக்கச் செய்வது. கன்றுக்குப் போக எஞ்சிய பால் கறக்கும் பாத்திரத்தில் விழ வேண்டியது. அது போலத் தலைவியின் அழகு தலைவனுக்கு இன்பம் தர வேண்டியது. பால் இருபயனும் தராமல் வீணாவது போல் தலைவியின் அழகும் இருபயனும் தராமல் வீணாகிறது எனும் உவமை மிகச் சிறப்பானது. பால் மண்ணாலும், அழகு பசலையாலும் உண்ணப்படும் அவலத்தைப் புலவர் எடுத்துக் காட்டுகிறார்.

    ‘நான் ஆற்றியிருப்பேன்’ என வெளிப்படையாகத் தலைவி சொல்லவில்லை. ஓதலாந்தையார் பாடல் (குறுந்தொகை-21) தலைவி ‘அவர் பொய் சொல்லமாட்டார்’ என்று தன் நம்பிக்கையை வெளிப்படுத்துவதன் மூலம், தான் ஆற்றியிருப்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிறாள். வெள்ளிவீதியார் காட்டும் தலைவியோ ஆறுதல் அற்றவளாகவே தோன்றுகிறாள். தன் காதல் வேதனையையும், உடல் அழகு வீணாகும் இழப்பையும் மறைக்காமல் சொல்லி, ‘அவ்வாறு இருப்பினும் நான் பொறுத்துக் கொள்கிறேன்’ என்பது போலத்தான் அமைகிறது அவளது வெளிப்பாடு. தலைவி இறந்து விடுவாளோ என்று தோழி கவலைப்படும் அளவுக்குத் தலைவியின் நிலை இருக்கிறது. இத்தகைய நிலையை அகப்பொருள் இலக்கணம் ‘காதல் கைம்மிகல்’ (காதல் அளவு கடந்து பெருகுதல்) என விளக்குகிறது.

    இப்பாடலை இயற்றிய வெள்ளிவீதியார் எனும் பெண்பாற் புலவரின் சொந்த வாழ்க்கைப் பிரிவுத் துயரமே இக்கவிதை என உரைக்குறிப்புக் கூறுகிறது. பாடலில் தம் பெயரையோ, தம் தலைவன் பெயரையோ கூறாது விட்டதனால் அகப்பொருள் மரபின்படி இது பொதுவான ஒரு காதல் பாடலாகக் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது என உரையாசிரியர் குறித்துள்ளார். கரிகாற் சோழனின் மகள் எனக் கருதப்படுகின்ற ஆதிமந்தி, தன் கணவன் ஆட்டனத்தியைப் பிரிந்து ஊர்தோறும் நாடுதோறும் அவனைக் கடல்கொண்டதோ, ஆறுகொண்டதோ என்று புலம்பித் தேடித் திரிந்ததாகப் பரணர் (அகநானூறு-236) கூறுகிறார். ‘ஆதிமந்திபோலப் பேதுற்று உழல்வேனோ’ என்று வெள்ளிவீதியாரது பாடல்-45) தலைவி கூறுகிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒளவையார் (அகநானூறு-147) ‘நீண்ட காட்டில் தன் தலைவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதி போல’ என உவமை சொல்கிறார். இவைகளைக் கொண்டு பார்க்கும்போது புலவராகவும் காதல் தலைவியாகவும் இருக்க நேர்ந்த வெள்ளிவீதியாரின் சொந்த வாழ்வு அவரது படைப்பில் வெளிப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. புறப்பொருள் பாடல்களில் சுயவரலாறு வருவது வெளிப்படையாகத் தெரியும். ஒளவை அதியமான் தந்த நெல்லிக்கனி உண்டது, பாரிமகளிர் பறம்பைவிட்டு நீங்கும்போது மனமுருகிப் பாடியது போன்றவை எடுத்துக் காட்டுகள். அகப்பாடலில் சுயவரலாற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

    யாயும் ஞாயும்

    எனத் தொடங்கும் செம்புலப் பெயல்நீரார் பாடல் (குறுந்தொகை-40).

    செம்புலப்பெயல்நீரார்

    இயற்பெயர் அறியப்படாமல், தாம் படைத்த உவமைகளால் பெயர் பெற்ற புலவர்களுள் இவரும் ஒருவர். அன்பு நெஞ்சங்களின் காதல் கலப்பைச் செம்புலத்தில் பெய்த மழைநீர்க் கலப்பாக உவமித்துக் காட்டிய இவர் புலமைத்திறம் போற்றத்தக்கது.

    திணை : குறிஞ்சி

    கூற்று : இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர்த் ‘தலைவர் பிரிவாரோ’ என எண்ணி அஞ்சிய தலைமகளின் மனக்குறிப்பை உணர்ந்து கூறிய தலைமகன் கூற்று.

    தலைவனும் தலைவியும் யாரும் கூட்டுவிக்காமல் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்தனர். அப்போது, ‘இவன் எந்த ஊரோ, நம்மைப் பிரிந்து போய்விடுவானோ, மறப்பானோ, துறப்பானோ, அவ்வாறு துறந்தால் நாம் உயிர்வாழ்வது எப்படி?’ என்பன போன்ற ஐயங்கள் தலைவிக்கு எழுந்தன. அவள் மனத்தில் ஓடுவதை அவளது முகக்குறிப்பால் அறிந்த தலைவன், ‘நம் உறவு பிரிக்க முடியாதது’ என்பதை உணர்த்தி அவளைத் தேற்றுகிறான்.

    தலைவன் தலைவியை நோக்கிக் கூறுகிறான் : ‘தலைவியே! என் தாயும் உன் தாயும் ஒருவருக்கொருவர் என்ன உறவுடையவர்கள்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவாகுவர்? இங்குச் சந்திப்பதற்குமுன் நானும் நீயும் எவ்வாறு ஒருவரையொருவர் அறிவோம்? எனினும் செந்நிலத்தில் பெய்த மழைநீர் அந்நிலத்தியல்போடு ஒன்றிக் கலந்துவிடுவதுபோல, அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே கலந்துவிட்டன!’

    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே

    இவர்களுக்கிடையே தாய்வழி உறவும் இல்லை ; தந்தைவழி உறவும் இல்லை ; இவ்விருவரும் இதற்குமுன்பு சந்தித்ததும் இல்லை. பின் எவ்வாறு நெஞ்சங்கள் கலந்தன? இக்கேள்வியைத்தான் தலைவன் தலைவியின் நெஞ்சத்தில் எழுப்புகிறான். நெஞ்சங்களின் கலப்பில் இருவருக்கும் ஐயம் இல்லை ; அது உண்மையானது ; பிரிக்க முடியாதபடி நிகழ்ந்து முடிந்துவிட்டது இந்தக் கலப்பு (செம்புலப் பெயல்நீர்போல). இக்கேள்வியை எழுப்பும் தலைவன், ‘இது தெய்வத்தால் ஆகிய புணர்ச்சி, வழிவழியாகப் பல பிறவிகளில் தொடர்ந்து வரும் பிணைப்பு’ எனத் தலைவிக்கு உணர்த்த முயல்கிறான். இயற்கைப் புணர்ச்சி இருவகைப்படும் என விளக்குகிறது அகப்பொருள் இலக்கணம். 1. தெய்வத்தான் எய்தும் புணர்ச்சி 2. தலைவியால் எய்தும் புணர்ச்சி. இப்பாடலில் நிகழ்ந்துள்ளது தெய்வத்தான் எய்தும் புணர்ச்சியே என உணர்கிறோம்.

    இவ்வாறு தெய்வமே இணைத்து வைத்திருப்பதால் பிரிதல், மறத்தல், துறத்தல் என்பவற்றுக்கு இடம் ஏது? தலைவிக்குத் தலைவனின் வெளிப்பேச்சில் உள்ள உள் அர்த்தங்கள் நன்கு புரிந்திருக்கும் என்பதை இந்த அழகிய பாடல் காட்டுகிறது.

    சங்கப் பாக்களில் இடம்பெறும் மிகச்சிறப்பான உவமைகளுள் ஒன்று ‘செம்புலப் பெயல்நீர் போல’ என்பது. இந்த உவமைச் சிறப்புக் காரணமாகவே, இயற்பெயர் அறிய முடியாத இந்தப் புலவரைச் ‘செம்புலப்பெயனீரார்’ என்று அழைத்துள்ளனர். தேய்புரிப் பழங்கயிற்றை உவமையாகச் சொன்ன புலவரைத் ‘தேய்புரிப் பழங்கயிற்றினார்’ எனக் குறித்ததை முன்னர்க் கண்டோம் (நற்றிணை-284).

    அணிற்பல்லன்ன

    எனத் தொடங்கும் அம்மூவனார் பாடல் (குறுந்தொகை-49).

    அம்மூவனார் : இப்புலவர் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் எண் 1-இல் காண்க.

    திணை : நெய்தல்

    கூற்று : பரத்தையிடம் தலைவன் சென்றிருந்த போது வருந்தியிருந்த தலைவி, அவன் மீண்டு வந்தபின் ஆற்றாமை நீங்கிப் புணர்ச்சிக்குப் பின் மகிழ்ச்சி மிகுதியால் தலைவனை நோக்கிக் கூறியது.

    தலைவி கூற்று.

    தலைவி தலைவனை நோக்கிக் கூறுகிறாள் : ‘அணிற்பல் போன்ற முள்ளும், கொங்கும் நிறைந்த கழிமுள்ளிச் செடிகளையும், நீலமணி போன்ற கரிய நீரையும் உடைய கடற்கரைப் பகுதித் தலைவனே ! இப்பிறவி நீங்கி நமக்கு மறுபிறவி வந்தாலும், அப்போதும், நீயே என் கணவனாவாயாக! உன் உள்ளம் ஒத்த தலைவி நானே ஆவேனாக!’

    இம்மை மாறி மறுமை யாயினும்
    நீயாகியர் என் கணவனை
    யானாகியர்நின் நெஞ்சு நேர்பவளே

    பரத்தையிற் பிரிந்து திரும்பும் தலைவன்மீது ஊடல் கொண்டு வாயில்மறுக்கும் தலைவியரை மருதத் திணைப் பாடல்கள் பலவற்றில் காணலாம் ; தலைவனது தூதை ஏற்கும்போது கூடத் தோழி தலைவனை இடித்துரைப்பதைக் காணலாம்; ‘தலைவியின் வருத்தத்துக்குக் காரணமானாய்’ என்பதையும், ‘தலைவி பெருந்தன்மையுடன் உன்னை மன்னித்தாள்’ என்பதையும் அவள் கூறுவாள். ஆனால், இப்பாடலில் தலைவனை ஏற்று மகிழ்ந்த தலைவி, மிகமிக மென்மையான முறையில் அவன் பரத்தையொழுக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறாள். தலைவனுக்கும் பரத்தைக்குமிடையே உள்ள காம உறவைவிடப் பிறவிதோறும் தொடரும் தலைவன்-தலைவி அன்புறவை மேம்படுத்திப் பேசுவதுடன் நிறுத்திக் கொள்கிறாள். கழிமுள்ளிச் செடியில் முள்ளும் கொங்கும் (பூந்தாது) சேர்ந்திருப்பது போலத் தலைவனிடம் பரத்தைமை ஒழுக்கமும் இல்லற ஒழுக்கமும் ஒருங்கே உள்ளன என்ற உள்ளுறைப் பொருள் அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகம் என்ற வருணனையில் அமைந்திருக்கிறது.

    பரத்தை காதலியாக இருக்கமுடியும் ; மனைவி மட்டுமே நெஞ்சு நேர்பவளாக (உள்ளம் ஒத்தவளாக) இருக்க முடியும் என்பதே தலைவி பேச்சின் உயிரான குறிப்பு.

    இடிக்கும் கேளிர்

    எனத் தொடங்கும் வெள்ளிவீதியார் பாடல் (குறுந்தொகை-58).

    வெள்ளிவீதியார் : இப்புலவர் பற்றிய குறிப்பை முன்னரே பார்த்தோம்.

    திணை : குறிஞ்சி

    கூற்று : கழற்றெதிர் மறை.

    (கழறு+எதிர் மறை) கழறுதல் = தலைவியிடம் நெஞ்சம் பறிகொடுத்துத் தவிக்கும் தலைவனைப் பாங்கன் கண்டித்தல். எதிர் மறை = அதற்குத் தலைவன் மறுப்புரைத்தல். அதாவது, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவியைக் காணப் பெறாமல் பெரிதும் துன்புற்று நலிந்த தலைவனைப் பாங்கன் ‘இது நின் பெருமைக்குத் தகாதென’ இடித்துக் கூறிய பொழுது, தலைவன் அவனுக்கு மறுமொழியாகக் கூறியது. தலைவன் கூற்று.

    தலைவன் பாங்கனை நோக்கிக் கூறுகிறான்: ‘இடித்துரைக்கும் நண்பரே! உங்களுடைய இந்த இடித்துரை என் உடம்பு உருகி அழியாமல் தடுத்து நிறுத்துமாயின் அதனை விட நற்செயல் வேறொன்றும் இல்லை. சூரியன் கடுமையாகக் காய்வதால் வெப்பமுற்றிருக்கிறது பாறை. பாறையின் மீது வைக்கப்பட்டுள்ளது ஒரு வெண்ணெய்க் கட்டி. அதனைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ளவனோ கையில்லாத ஊமையன். பார்வையால் மட்டுமே ‘பாதுகாப்பவன்’. அவ்வெண்ணெய் உருகி வீணாவதை என் உடம்பும். காமவெப்பம் உடலில் பரவுகிறது ; உருகுகிறேன். அதைத் தடுக்கமுடியாத கையில்லாத ஊமையன்போல நானிருக்கிறேன்’.

    கையில் ஊமன் கண்ணில் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்
    பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே

    (உணங்கல் = உருகி அழிதல்)

    கையில்லாத ஊமையனின் காவலில் உள்ள வெண்ணெய் உருகுவதை அவனும் காக்க முடியாது, பிறரை அழைத்தும் காக்கமுடியாது என்னும் பொருள்படும் உவமை மூலம் தலைவன் தன் அழிவைத் தன்னாலும் தடுக்கமுடியவில்லை; பிறர் உதவியைப் பெறவும் முடியவில்லை எனத் தெளிவாக்குகிறார் புலவர்.

    யாரினும் இனியன்

    எனத் தொடங்கும் வடமவண்ணக்கன் தாமோதரனார் பாடல் (குறுந்தொகை-85).

    வடமவண்ணக்கன் தாமோதரனார்

    வண்ணக்கன் எனும் சொல் நாணயப் பரிசோதகரைக் குறிக்கும் என முன்பே கண்டோம். ‘வடம’ என்பது கொண்டு இவர் வடதிசையிலிருந்து வந்தவராக எண்ணப்படுகிறார்.

    திணை : மருதம்

    கூற்று : வாயில் வேண்டிச் சென்ற பாணனுக்குத் தோழி வாயில் மறுத்தது.

    தலைவனது பரத்தைமை காரணமாகத் தலைவி ஊடியிருக்க, அவ்ஊடல் தீர்ப்பதற்காகத் தலைவன் பாணனைத் தலைவியிடம் தூதாக அனுப்புகிறான். பாணன் தலைவியிடம் சென்று தலைவன் நல்லவன், அன்புடையவன் எனக்கூறித் தலைவியின் ஊடலை நீக்க முயல்கிறான். அப்போது தோழி தலைவன் நல்லவன் என்பதை மறுத்துக் கூறி வாயில் மறுக்கிறாள். தோழி கூற்று.

    பாணன் = பாடற்கலைஞன். தலைவனுக்கு வாயில் ஆவோரில் ஒருவன்.

    தோழி பாணன் கேட்கக் கூறுகிறாள் ‘ஊருக்குள் வாழ்கின்ற ஊர்க்குருவி அது; துள்ளித்துள்ளி நடக்கும் ஆண் குருவி. அது கர்ப்பம் முதிர்ந்த தன் பேடை முட்டையிடுவதற்காக மென்மையான ஒரு நல்ல கூடு அமைக்க விரும்புகிறது. அதற்காகக் கரும்புத் தோட்டத்திற்குப் பறந்து சென்று தேன்பொதிந்த இனிய கரும்பின் மணமற்ற வெண்பூவைக் கோதித் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய இனிய காட்சிகளையும், அன்றாடம் புதிய நீர் வரத்தும் உடைய ஊருக்குத் தலைவன், இந்தப் பாணனின் வாய்ப்பேச்சில் மட்டுமே எல்லாரினும் மிக இனிமையானவன், பேரன்புடையவன் !

    யாரினும் இனியன் பேரன்பினனே
    யாணர் ஊரன் பாணன் வாயே

    ‘பாணனுக்குத்தான் தலைவன் இனியவன் ஆக, அன்பன் ஆகத் தோன்றுகிறான், எங்களுக்கல்ல’ என உணர்த்தும் தோழியின் கூற்றில் தலைவன் அன்பற்றவன் என்ற குற்றச்சாட்டும், பாணன் பொய்யன் என்ற பழிப்பும் கலந்துள்ளன. தலைவி மீது தலைவனுக்கு அன்பும் ஈடுபாடும் இல்லை எனத் தோழி குறிப்பாகச் சொல்கிறாள். ஆண்குருவி தன் பேடைக்குக் கூடு அமைப்பதற்காகத் தொலைதூரம் சென்று மென்மையான கரும்பின் பூக்களைத் தன் சிறிய அலகால் கிள்ளிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டுவந்து சேர்க்கிறது. ஒரு சிறிய கூட்டைக் கட்டுவதென்றாலும் குருவி எவ்வளவு பெரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்? தலைவன் அன்றாடம் பார்க்கக் கிடைக்கும் உள்ளூர்க்குருவி அது. அக்குருவி தன் பெண்குருவி மீது காட்டும் அன்பைத் தலைவன் தலைவியிடம் காட்டவில்லை என்பது குறிப்பு.

    தோழி நேரடியாகப் பாணனிடம் பேசாமல், அவன் காதில் விழுமாறு வேறுபுறம் பார்த்துப் பேசுவது அவளது கோபத்தைக் காட்டுகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    கொங்குதேர் வாழ்க்கை என்னும் குறுந்தொகைப் பாடல் தொடர்பான கதை யாது?

    2.

    ஆடிப்பாவையைப் பரத்தை யாருக்கு உவமையாக்குகிறாள்?

    3.

    ‘கானம் காரெனக் கூறினும் யானோ தேறேன்’ - யார் கூற்று? விளக்குக.

    4.

    பசலை உணீஇயர் வேண்டும் - பசலை எதனை உண்கிறது?

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 17:47:49(இந்திய நேரம்)