Primary tabs
6.0 பாட முன்னுரை
‘ஏழு பிறவியிலும் நானே உன் மனைவி’ என அன்பு காட்டும் தலைவி, கணவன் ஒழுக்கக் கேடு தாங்க முடியாத ஒரு நிலைக்குச் செல்லும் போது அவனை ஏற்க மறுப்பதும் உண்டு. அவள் சார்பில் தோழி பேசுகிறாள். ‘தலைவியிடம் கவர்ந்து கொண்ட அவள் அழகைத் திருப்பிக் கொடுத்து விட்டுப்போ’ எனத் தலைவன் திகைக்குமாறு தோழி பேசுவதை இப்பாடத்தில் காணலாம். ஒருநாள் காதல் பல நாள் துயரமாகிவிட்டதே என வருந்தும் தலைவியையும் பார்க்கிறோம். வாழ்வின் முழுமையே காதல்தான் என உணர்த்தும் தலைவனைப் பார்க்கிறோம். பிரிவுத் துயரம், தலைவி தலைவனை அடைய முடியாத துயரம் என உணர்ச்சிகளின் கொதிநிலையை இப்பாடல்கள் சில எடுத்துக் காட்டுகின்றன. இப்பாடப் பகுதியில் அருமையான உவமைகளும், படிமங்களும் இடம்பெறுகின்றன.