Primary tabs
6.1 பாடல் காட்சிகள்
இப்பாடப் பகுதிப் பாடல்களில் காட்டப்படும் காட்சிகளைத் தலைவன், தலைவி, தோழி ஆகியோருடைய கூற்றுகளின் மூலமாக இங்குக் காணலாம்.
பாசவலிடித்த
எனத் தொடங்கும் குன்றியனார் பாடல் (குறுந்தொகை-238).
குன்றியனார்
இப்புலவர் நெய்தல் திணையில் களவு, கற்பு என்னும் இருவகை ஒழுக்கங்களையும் சிறப்புறப் பாடியுள்ளார். மேற்குக் கடற்கரை நகரமான தொண்டியை வருணித்துள்ளார்.
திணை : மருதம்
கூற்று : பரத்தையிடமிருந்து திரும்பிய தலைமகன், தோழியிடம் சென்று சூள் உரைத்துத் தலைவியின் ஊடல் நீங்க வாயிலாகுமாறு அவளை வேண்டியபோது, தோழி வாயில் மறுத்தது
இது தோழி கூற்று.
(சூள் உரைத்தல் : தான் தவறு செய்யவில்லை என உறுதிமொழி கூறல்.)
தோழி தலைவனை நோக்கி : ‘ஒளிமிக்க வளையல் அணிந்த பெண்கள் நெல்லை வறுக்காமல் பச்சையாகவே இட்டு அவல் இடிப்பர் ; பிறகு கரிய, வயிரம் பாய்ந்த உலக்கைகளை, நெற்கதிர் நிறைந்த வயல் வரப்பாகிய படுக்கையில் கிடத்திவிட்டு அருகில் உள்ள இடத்தில் விளையாடுவர். இத்தகைய அழகுடையது தொண்டிப் பட்டினம். அப்பட்டினத்தை ஒத்த பெண்மை அழகுடையவள் தலைவி. அப்பெண்மை அழகைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நீ இப்போது கூறிய உன் சூள்மொழிகளை நீயே எடுத்துக் கொண்டுபோ’ என்று கூறுகிறாள்.
தொண்டி அன்னவென் நலம்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே(சென்மோ = செல்)
தோழியின் கூற்றிலிருந்துதான் தலைவன் எவ்வாறு சூள் உரைத்திருப்பான் என்பது புரிகிறது. தன்மீது தவறு இல்லை என அவன் கூறும் சூள் முற்றிலும் நம்பமுடியாதது ; ஆகவே அவற்றை ‘உன்னோடு எடுத்துக் கொண்டுபோ’ என்கிறாள். ‘போகுமுன்பு உன் பரத்தமை காரணமாக அழிந்துபோன தலைவியின் அழகைக் கொடுத்துவிட்டுப் போ’ என்கிறாள். ‘சொல்லை எடுத்துப்போ’ என்பதும் ‘அழகைக் கொடுத்துவிட்டுப் போ’ என்பதும் கவித்துவம் மிக்க கூற்றுகள். எனினும் பேச்சுமொழியில் இத்தகைய கூற்றுகள் வழக்கில் இருப்பவையே.
பரத்தமை ஒழுக்கம் காரணமாகத் தலைவியின் அழகு கெடுமாறு செய்துவிட்டான் என்றோ, தலைவியுடன் வாழ்ந்து அவள் அழகைக் கவர்ந்து கொண்டபின் பரத்தையரிடம் சென்றுவிட்டான் என்றோ தலைவன்மீது குற்றம் சொல்லப்படுவதை மருதத்திணைப் பாடல்கள் சிலவற்றில் காணலாம். மாண்நலம் தா என வருந்தற் கண்ணும் எனத் தொல்காப்பியம் இது பற்றிக் கூறுகிறது. தந்தனை சென்மோ .... நீ உண்ட என் நலனே எனக் குறுந்தொகைத் தலைவி ஒருத்தி தலைவனிடம் கேட்கிறாள் (236) நலத்தை - அழகைத் திருப்பிக் கொடுத்தல் எப்படி? தலைவன் முழுமையாகத் தலைவிக்கே உரியவனாக வாழ்ந்தால் அவள் இழந்த அழகைத் திரும்பப் பெறுவாள் என்பதுதான் கருத்து.
தொண்டி : சேரனின் துறைமுகப் பட்டினம். இது அழகான ஊராக இருந்திருக்க வேண்டும். திண்டேர்ப் பொறையன் தொண்டி அன்ன என் நலம்தந்து (அகநானூறு-60) என்பது போலச் சங்க இலக்கியத்தில் சில பாடல்களில் தலைவியின் அழகுக்குத் தொண்டி உவமையாகிறது.
பெருங்கடற்கரையது
எனத் தொடங்கும் கபிலர் பாடல் (குறுந்தொகை-246).
கபிலர்
கபிலரைக் குறித்து முன்னரே படித்தோம். (பாடம் எண் : 1 - நற்றிணை - 1)
திணை : நெய்தல்
கூற்று : இரவுக் குறியில் வந்த தலைவன் சிறைப்புறமாக நிற்கத் தலைவி அதை அறியாதவள் போலத் தனக்குள்ள கட்டுக்காவல் மிகுதியைத் தோழியிடம் சொல்லும் முறையில் தலைவனைக் குறிப்பாக வரைவு கடாயது.
இது தலைவி கூற்று.
தலைவி தோழியை நோக்கி கூறுகிறாள் : ‘தோழி! பெரிய கடற்கரையில் வாழும் சிறுவெண் காக்கை, யானைக் காது போன்ற பசிய ஆம்பல் இலைகளைக் கசக்கிக் குளிர்ந்த கழிநீரை இரைக்காகத் துழாவிக் கொண்டிருக்கும் நடு இரவில், தனியாக ஒரு தேர் வந்து சென்றது என்று அயலார் சொன்னார்கள். அச்செய்தியைக் காரணமாகக் கொண்டு அன்னை என்னைத் துன்புறுத்துகின்றாள்.
தனித்தோர்தேர்வந்து பெயர்ந்த தென்ப ; அதற்கொண்டு
ஓரும் அலைக்கும் அன்னை(அதற்கொண்டு = அதன் காரணமாக ; ஓரும் = சிந்திக்கிறாள்; அலைக்கும் = துன்புறுத்துகிறாள்.)
என்னைப் போன்ற இளவயதுப் பெண்கள் எவ்வளவோ பேர் இவ்வூரில் உள்ளனர். பின்னித் தொங்கவிட்ட கூந்தலையும் மின்னும் அணிகலன்களையும் உடைய இளம் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தங்களைத் துன்புறுத்தாத தாய்மார்களோடு வாழும் நல்ல விதியையுடையவர்கள் !”
தலைவன் இரவுக் குறியில் வந்து சென்றதைக் குறிக்கவே ‘ஒரு தேர் வந்து சென்றது’ என்று ஊரார் பேசிக்கொண்டனர் என்கிறாள். தலைவியின் தாய் களவுக் காதலை உணர்ந்து கொண்டு தலைவியைக் காவல் செய்கின்றாள் என்ற செய்தியின் மூலம் இனி இரவுக் குறிச் சந்திப்பு இயலாது. ஆகவே விரைவில் வரைந்து கொள்ள வேண்டும் என்னும் குறிப்பைத் தலைவி புலப்படுத்துகிறாள்.
சிறுவெண் காக்கை : கழுத்துப் பகுதியில் மட்டும் சிறு வெண்மையையுடையது கடற்காக்கை. பெரும்பகுதி கருமையும் சிறுபகுதி வெண்மையும் உடையது. இவ்வருணனை, தலைவன் பெரும்பாலும் நற்குணங்களுடையவனாயினும் இரவில் வந்து இடர்தரும் சிறுஅளவு பேதைமைக் குணமும் உடையவனாக இருக்கிறான் என்பதை உணர்த்தும் உள்ளுறை.
அருவியன்ன பருவுறை
எனத் தொடங்கும் அழிசி நச்சாத்தனார் பாடல் (குறுந்தொகை-271).
அழிசி நச்சாத்தனார்
தலைவன் மீது ஊடல் கொண்ட தலைவியின் மனச்சலிப்பை ‘ஒருநாள் கொண்ட நட்பு, பலநாள் துன்பத்திற்குக் காரணமாயிற்று’ என அருமையாக விளக்கிய புலவர் இவர்.
திணை : மருதம்
கூற்று : தலைமகனுக்கு வாயிலாகத் தலைவியிடம் புகுந்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
அதாவது பரத்தையிற் பிரிந்து திரும்பிய தலைமகன் தலைவியின் ஊடலைப் போக்குவதற்காகத் தோழியை இரந்து வேண்டினான்; தோழி அதற்கு உடன்பட்டு அவனை ஏற்குமாறு தலைவியை வேண்டிய போது, தலைவி வருத்தத்துடன் தான் உடன்பட்டது தோன்றச் சொல்லியது.
தலைவி தோழியை நோக்கி ‘மலையருவி சிதறுவது போலப் பெரிய துளிகளைச் சிதறி, ஆறுகள் தம் வெள்ளத்தை ஊர்கள் தோறும் வழங்கும் வளமான நாட்டைச் சார்ந்தவன் நம் தலைவன். அவனை நல்லவன் என நம்பி அவனோடு நட்புக் கொண்டது ஒருநாள்தான். அந்த ஒருநாள் தவறு, மிகப்பல நாட்கள் நம் தோளோடு கலந்து நமது அழகையெல்லாம் கவர்ந்து கொள்ளும் நோயாக விளைந்துவிட்டதே !’ எனச் சொல்கிறாள்.
உற்றது மன்னும் ஒருநாள் மற்றது
தவப்பன்னாள்தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோயாகின்றே(உற்றது = சேர்ந்தது ; தவ = மிக ; பன்னாள் = பல நாள் ; வௌவும் = கவரும்)
‘தலைவனை ஒருநாள் சந்தித்து நட்புக் கொண்ட தவறு இப்போது பெரும் நோயாகிவிட்டது’ எனத் தன்னைத்தான் நொந்து கொள்வது போலத் தலைவி சொல்வதிலிருந்து ‘இனி என்ன செய்ய முடியும்’ என வருத்தத்துடன் அவனை ஏற்றுக்கொள்ள இசைகிறாள் என்ற குறிப்பு வெளிப்படுகிறது.
ஊர்கள் தோறும் ஆறு தன் வெள்ளத்தை வழங்கும் என்ற வருணனை, தலைவன் தன் நலத்தைப் பரத்தையர்க்கு வழங்குகின்றவன் என்பதைக் குறிக்கும் உள்ளுறை.
கேளிர் வாழியோ கேளிர்
எனத் தொடங்கும் நக்கீரனார் பாடல் (குறுந்தொகை-280).
நக்கீரனார்
சங்கப் புலவருள் பெரும்புலவராக மதிப்பிடப் படுகின்ற கபிலர், பரணர், ஒளவையார் போன்றோருடன் இணையாகச் சொல்லப்படத்தக்கவர் நக்கீரர். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் 33 பாடல்களைப் பாடியதுடன், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் இவர் பாடியுள்ளார். இறையனார் அகப்பொருளுக்கு முதன்முதல் உரை இயற்றியவர் இவர். சிவனுடன் இவர் வாதிட்டதாகக் கூறப்படும் செய்திகள் திருவிளையாடற் புராணம் போன்றவற்றில் காணப்படுகின்றன.
திணை : குறிஞ்சி
கூற்று : கழற்றெதிர்மறை. அதாவது தலைவன் தன்னை இடித்துரைத்த பாங்கனிடம் தலைவியின்றித் தான் வாழ முடியாது என மறுத்துரைப்பது.
இது தலைவன் கூற்று.
(கழறுதல் = கடிந்துரைத்தல் ; எதிர்மறை = அதற்கு மறுப்புரைத்தல்)
தலைவன் பாங்கனை நோக்கிக் கூறுகிறான். ‘நண்பரே! நீங்கள் வாழ்க! அழகிய கூந்தலும் பருத்த தோள்களும் இளமையும் உடைய தலைவி என் நெஞ்சைத் தன்னோடு பிணித்துக் கொண்டவள். அவளுடைய சிறிய மென்மையான மார்பை ஒருபொழுது கூட முடிந்தால் கூடப் போதும்! அதற்குப்பின் அரைநாள் வாழ்க்கை கூட எனக்குத் தேவையில்லை.’
பெருந்தோள் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே(ஆகம் = மார்பு ; வேண்டலென் = வேண்டேன்)
‘சிறந்த ஆண்மைத் தன்மையையுடைய நீ இந்த அளவுக்குக் காதல் நோய் கொள்ளலாமா? தலைவிபால் கொண்ட காதல் அத்துணைச் சிறப்பானதா?’ என்பன போன்ற கடிந்துரைகளைப் பேசிய பாங்கனுக்குத் தலைவன் தந்த பதில் இப்பாடல். தலைவியின் இன்றியமையாமையைக் கூர்மையாக அவன் எடுத்துரைக்கும் முறை மிகச்சிறப்பானது. ஒருமுறை அவளைக் கூடுதலே தன் முழுப் பிறவிப்பயன் என உறுதிப்படுத்துகிறான். பாங்கனைக் “கேளிர்” என (நண்பன்) இருமுறை அழைப்பதிலும், “வாழியோ” என வாழ்த்துவதிலும் தலைவனது கண்டனக் குறிப்பு உள்ளது. தலைவனது துன்பத்தில் உறுதுணையாக இருக்க வேண்டிய உயிர் நண்பன், அதற்கு மாறாகக் கழறுவது (கடிந்துரைப்பது) குறித்த கண்டனம் அது.
உள்ளது சிதைப்போர்
எனத் தொடங்கும் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல் (குறுந்தொகை-283).
பாலை பாடிய பெருங்கடுங்கோ
இப்புலவரைப் பற்றி முன்னரே படித்தோம். (பாடம் எண் : 1 - நற்றிணை - 1)
திணை : பாலை
கூற்று : தலைமகன் பொருள்வயின் பிரிந்தபின், தலைவி ஆற்றாதிருக்கிறாளே எனக் கவலை கொண்டாள் தோழி. அப்போது தலைவி ‘நான் வருந்துவது அவர் பிரிவுக்காக அன்று ; அவர் போன காட்டின் தன்மையை நினைத்துத் தான்’ எனக் கூறுவது.
இது தலைவி கூற்று.
தலைவி தோழியிடம் கூறுகிறாள் : ‘தோழி ! ‘தாமே தம் முயற்சியால் பொருள் ஈட்டாமல், முன்னோர் ஈட்டி வைத்துள்ள செல்வத்தைச் சிதைப்பவர்கள் செல்வமுடையோர் எனச் சொல்லப்பட மாட்டார்கள். தாமே ஈட்டும் பொருள் இல்லாதவர்களின் வாழ்க்கை இரந்து வாழ்வதைவிட இழிவானதாகும்’ என்று அறிவுமிக்கவர்கள் கூறிய ஆண்மைத் தன்மையை நமக்குத் தெளிவுறுத்திப் பொருள் தேடப் பிரிந்தார் நம் தலைவர்.
உள்ளது சிதைப்போர் உளரெனப் படார்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி(உள்ளது = முன்னோர் தேடிவைத்த செல்வம் ; சிதைப்போர் = அழிப்போர்.)
தலைவர் சென்ற வழி மிகக் கொடுமையானது. கூற்றுவனைப் போன்ற கொலைவேல் மறவர்கள் வழிச்செல்வோரைக் கொல்வதனால் அங்குக் கிடக்கும் மனித இறைச்சியைத் தமக்கு உணவாக எதிர்பார்த்திருக்கும் பருந்துகளையுடைய வழி அது ; நீண்ட பழைமையான அவ்வழி நீரற்றதும் ஆகும். இத்தகைய வழியில் அவர் சென்றாரே ! அவர் வாழ்க !’
தலைவனுடைய தெளிவுரையால் அவனுடைய பிரிவை ஏற்றுக் கொண்டாலும் ஆறலை கள்வரின் கொடுஞ்செயல் அவளைக் கலக்கப்படுத்துகிறது. வழிக்கொடுமை நினைத்து வருந்தும் பாலைத் திணைப் பாடல்கள் பல உள்ளன. இப்பாடல் மனித வாழ்வின் நெறியையும் காட்டுகின்றது. தன் முயற்சியால் வாழும் வாழ்வு போற்றற்குரியது என்ற உண்மை புலப்படுத்தப்பட்டுள்ளது.
காமந் தாங்குமதி
எனத் தொடங்கும் கல்பொரு சிறுநுரையார் பாடல் (குறுந்தொகை-290).
கல்பொரு சிறுநுரையார்
உவமையாற் பெயர்பெற்ற புலவருள் இவரும் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. ‘வெள்ளம் கல்லில் மோதும்போது தோன்றும் சிறுநுரைக் கூட்டம் சிறிது சிறிதாக அழிவது போல மெல்ல மெல்லச் சாகிறேன்’ என்று தலைவி கூற்றில் நுட்பமான உவமையை இப்புலவர் அமைத்தார். சுவைப்போர், மனம்மகிழ்ந்து அவ்வுவமையாலேயே இவரை அழைத்தனர்.
திணை : நெய்தல்
கூற்று : வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது.
அதாவது ‘தலைவன் பிரிவின்போது நீ ஆற்றியிருத்தலே அறிவுடைமை’ என்று தோழி வற்புறுத்தியபோது, ‘நீ காமத்தின் தன்மை அறியாமல் இவ்வாறு பேசுகிறாய்’ எனத் தலைவி கடிந்து கூறியது.
தலைவி தோழி கேட்குமாறு முன்னிலைப் புறமொழியாகச் சொல்கிறாள் : ‘காமநோயைப் பொறுத்துக்கொள்’ என்று என்னை வற்புறுத்துவோர் அந்நோயின் இயல்பை அறியாதவர்களோ? அல்லது அதைத் தாங்குமளவு அத்துணை வலிமை உடையவர்களோ?
காமந் தாங்குமதி என்போர் தாமஃது
அறியலர் கொல்லோ? அனை மதுகையர்கொல்?(தாங்குமதி = பொறுத்துக்கொள் ; அனை = அந்த அளவு ; மதுகையர் = வலிமை உடையவர்கள்.)
நானோ என் காதலனைக் காண முடியாத பொழுது, செறிந்த வருத்தம் தேங்கிய உள்ளத்தோடு, பெரிய வெள்ளம் கல்லை மோதும்போது உண்டாகும் சிறுநுரை மெல்லத் தேய்ந்து இல்லாமல் போவதுபோல மெல்ல மெல்லத் தேய்ந்து இல்லாமல் போகிறேன்’.
பெருநீர்க்கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லாகுதுமே(இல்லாகுதும் = இல்லாதுபோவேன்)
சாவைக் காமநோயின் எல்லையாக அகப்பொருள் இலக்கணம் குறிப்பிடுகிறது. தாங்க முடியாமையின் இறுதி எல்லை அழிவு, சாவு என்பது நாம் காண்பதே. மெல்ல மெல்ல இல்லாமல் போவதற்குக் கல்மீது நீரலை மோதியதால் தோன்றிய சிறு நுரையை உவமையாக்கிய சிறப்பினால் பெயர் அறியப்படாத இப்புலவர் கல்பொரு சிறுநுரையார் என அழைக்கப்படுகிறார்.
மண்ணிய சென்ற
எனத் தொடங்கும் பரணர் பாடல் (குறுந்தொகை-292).
பரணர் :
பரணர் பற்றி முன்னரே படித்துள்ளோம். (பாடம் எண் : 1 - நற்றிணை - 1)
திணை : குறிஞ்சி
கூற்று : தலைவன் இரவுக்குறியில் வந்து சிறைப்புறமாக நிற்க, தோழி அதை அறியாதவள் போலத் தலைவியிடம் பேசும் முறையில், தலைவிக்குத் தாயின் காவல் கடுமையாகிவிட்டதைத் தெரிவிப்பது.
தோழி தலைவன் கேட்குமாறு தலைவியிடம் பேசுகிறாள் : ‘தோழியே, கேள் ! ஒருநாள் விருந்தினர்களோடு விருந்தினனாகத் தலைவன் நம் இல்லத்துக்கு வந்துவிட்டான். அவன் மீது ஐயம்கொண்ட அன்னை அன்று தொடங்கி உறங்காதிருக்கின்றாள். போர் நடைபெறும் இடத்தில் உள்ள ஊரைச் சார்ந்தோர் உறங்காதிருப்பது போல உறங்காதிருக்கின்றாள்.
ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளேநீராடுவதற்காக ஆற்றிற்குச் சென்ற இளம்பெண் ஒருத்தி ஆற்றில் மிதந்துவந்த பசிய மாங்காயை அது யாருடையது என அறியாமல் தின்றாள். நன்னன் என்ற மன்னனின் சிறப்புக்குரிய மாமரத்திலிருந்து உதிர்ந்தது அக்காய். இத்தவற்றுக்காக, அப்பெண்ணின் குடும்பத்தார் எண்பத்தோரு யானைகளையும், அவள் எடையளவு பொன்னால் செய்யப்பட்ட பதுமையையும் தண்டமாகக் கொடுக்க முன்வந்தனர். ஆயினும் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் அப்பெண்ணைக் கொலை செய்து விட்டான் நன்னன். அந்தக் கொடியவன் சென்ற எல்லையற்ற நரகத்துக்கு நம் அன்னையும் செல்வாளாக !
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை(வரையா = எல்லையற்ற ; நிரையம் = நரகம் ; செலீஇயரோ = செல்க)
நன்னனின் கொடுஞ் செயலுக்கு ஒப்பானது தாயின் செயல், நன்னனுக்குக் கிடைத்த முடிவு தாய்க்கும் கிடைக்கட்டும் என்பது தலைவியின் வேக உணர்வாகக் கூடும்.
தலைவிக்கு நேர்ந்துள்ள காவல் கட்டுப்பாட்டைத் தோழி தலைவனுக்குத் தெரிவித்து விட்டாள். இனி இரவுக்குறியில் தலைவியைச் சந்திப்பது இயலாது என்பதும், ‘வரைந்து கொள்வதே வழி’ என்பதும் குறிப்பாக உணர்த்தப்பட்டுவிட்டன.
தலைவன் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் விருந்தினர்களோடு தானும் ஒரு விருந்தினன் போலத் தலைவியின் வீட்டிற்குள் புகுவது அகப்பொருள் இலக்கண மரபில் சொல்லப்படுவது (தொல்காப்பியம், களவியல், நூற்பா. 16). ஒரு பாடலில், தலைவியின் வீட்டு வாயிற் காவலர்கள் இரவில் கதவைச் சாத்து முன்பாக வெளியில் பார்த்து விருந்தினர் எவரும் உள்ளார்களா என விசாரிக்கும் வேளை வந்துவிட்டது ; ஆனால் தலைவன் வரவில்லையே என்று தலைவி ஏங்குகிறாள். (குறுந்தொகை-118)
எட்டு அடிகளையுடைய பாடலில் இறுதி மூன்றடிகள் மட்டுமே அகப்பொருள் நிகழ்வைக் குறிப்பவை. முதல் ஐந்து அடிகளில் நன்னன் பெண்கொலை புரிந்த உண்மையான, (புறப்பொருள் சார்ந்த) நிகழ்ச்சி விரிவாகச் சொல்லப்படுகிறது. அன்னைக்கு உவமை சொல்ல எவ்வளவோ பொருள்கள் பரணருக்குக் கிடைக்கக் கூடும். நன்னனை ஏன் உவமையாக்கினார்? புலவர்களுள் பரணர் வேறுபட்ட தனித்தன்மை யுடையவர். அரசியல், சமூக நிகழ்வுகள் அவரைப் பாதிக்கின்றன. அவற்றை ஏதாவது ஒருவழியில் தாம் பாடும் அகப்பாடல்களில் பதிவு செய்கிறார். புறப்பாடல்களில் இடம் பெறாத புறச்செய்திகள் கூடப் பரணரது அகப்பாடல்களில் இடம்பெறுகின்றன. பரணருடைய அகநானூற்றுப் பாடல்களில் இவ்வாறு பல புற நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.
நன்னன் என்ற பெயரில் உள்ள மன்னர் இருவர். ஒருவன் மலைபடுகடாம் எனும் நூலில் பாராட்டப்படுபவன் ; வள்ளல். பரணர் கூறும் நன்னன் கொண்கானவேள் நன்னன் என்பவன். மனித வரலாற்றின் மிகக்கொடூரமான அரக்கச் செயல் ஒன்றை, அக்காலத்து மக்களும் புலவர்களும் வெறுத்த ஒன்றைப் பதிவு செய்ததன் மூலம் பரணர் தமிழகப் பண்பாட்டு வரலாற்றுக்கு உதவியவரும் ஆகிறார்.
கடலுடனாடியும்
எனத்தொடங்கும் அஞ்சியாந்தையார் பாடல் (குறுந்தொகை-294).
அஞ்சியாந்தையார்
அஞ்சில் ஆந்தையார் என்றும் இவர் பெயர் வழங்குகிறது. அஞ்சில் என்பது இவரது ஊர். ஆதன் தந்தை என்பதன் மருவிய வடிவமே ஆந்தை என்பது. இவர் குறிஞ்சி, நெய்தல் வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
திணை : நெய்தல்
கூற்று : பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பறிவுறீஇயது.
அதாவது தலைவி, தன் வீட்டில் தன்னை அடைத்து வைக்கும் நிலையைக் கூறியது. பகற்குறியில் வந்த தலைமகன் சிறைப்புறமாக நிற்கிறான். அவன் வரவை அறியாதவள் போலத் தோழி தலைவியிடம் பேசுகிறாள் : தாய் தலைவியை வீட்டிற்குள் தடுத்துவைக்க எண்ணியிருப்பதாகத் தெரிவிக்கிறாள். இவ்வாறு தலைவனிடம் பகற்குறியில் இனி வரவேண்டாம் என்று உணர்த்துகிறாள்.
தோழி தலைவியோடு பேசுவதுபோலப் பேசுகிறாள்: ‘தோழி ! நாம் கடலில் ஆடியும், கடற்கரைச் சோலையில் தங்கியும், மாலை அணிந்த தோழியர் கூட்டத்துடன் கைகோத்துத் தழுவிக் குரவை ஆடியும் விளையாடும்போது தலைவன் அயலார் போலத் திடீரென்று நம்மை வந்து தழுவிப் போயிருப்பானென்றால்கூட அது அலராகிவிடும். அவ்வாறிருக்கையில் தேமல் படர்ந்த, அகன்ற, அணிகலன்கள் கிடந்து அசைகின்ற அல்குலின் மீது அணிந்துள்ள பசுமையான தழையாடையை விட நமக்கு நெருக்கமாகி நம்மைவிட்டு அகலாதவனாக இருக்கிறான் தலைவன். தாய் நம்மை வெளியே போகாமல் தடுத்துக் காக்கும் நிலைமையை இவ்வாறு அவன்தான் உண்டாக்கினான்!
தழையினும் உழையிற் போகான்
தான் தந்தனன் யாய் காத்தோம்பல்லே(உழையில் = பக்கத்திலிருந்து ; யாய் = தாய் ; ஓம்பல் = காத்தல்)
தழையாடை போல விட்டுப் பிரியாதிருந்த தலைமகன் இனி என்ன செய்வான் என்பது அவனது சிந்தனைக்கு விடுக்கப்பட்ட வினா. இற்செறிப்புக்குக் காரணமானவனே அவள் விடுபடுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்பது குறிப்பு.
தழையாடை : பூக்களும், இலைகளும், மரம் செடிகொடிகளும், அருவிகளும் மற்றுமுள்ள இயற்கைப் பொருள் அனைத்தும் வாழ்வின் நிகழ்வுகளிலும் நினைவுகளிலும் பிணைத்துக் காட்டப்படுவது சங்க அக இலக்கியத்தின் தனிச்சிறப்பு எனலாம். இளம் பெண்கள் பூக்களை அணிவது மட்டுமன்றிப் பசுந்தழைகளை ஆடையாகத் தைத்துத் தாம் விளையாடும் சோலைகளில் தம் ஆடையின் மேல் ஆடையாக அணிந்து கொள்வது வழக்கம். தலைவர்கள் தலைவிகளுக்குத் தழையாடையைப் பரிசாகக் கொடுப்பதும் வழக்கம்.
கண்தர வந்த காம ஒள்ளெரி
எனத் தொடங்கும் குப்பைக்கோழியார் பாடல் (குறுந்தொகை-305).
குப்பைக்கோழியார்
இயற்பெயர் அறியப்படாமல், தாம் படைத்த உவமைகளின் சிறப்பால் பெயர் பெற்ற புலவர்களுள் குப்பைக் கோழியாரும் ஒருவர். தலைவனை அடையத் துணைபுரிவார் யாருமின்றித் தவிக்கும் தலைவியின் நிலைக்கு, விலக்குவார் இல்லாத குப்பைக் கோழிகளின் போரை உவமை கூறிய பொருத்தம் வியக்கத்தக்கது.
திணை : மருதம்
கூற்று : காவல் மிகுதியானபோது, தோழி அறத்தொடு நிற்கவேண்டுமென விரும்பித் தலைவி தன் ஆற்றாமை தோன்றத் தன்னுள்ளே கூறியது.
அதாவது, பெற்றோரது காவல் காரணமாகத் தலைவனைச் சந்திக்க முடியாதிருக்கும் தலைவி, தன் களவு ஒழுக்கத்தைத் தாய் முதலியோர்க்குத் தோழி வெளிப்படுத்த வேண்டுமென விரும்புகிறாள். தன் ஆற்றாமையைச் சொல்வதன்மூலம் தோழியை அறத்தோடு நிற்கத் தூண்டுகிறாள்.
தலைவி தோழி கேட்கத் தன்னுள் கூறிக்கொள்கிறாள். ‘தலைவனைக் கண்ட கண்கள் காம நெருப்பைத் தந்தன. அந்நெருப்பு எலும்புவரை சுட்டுப் பொசுக்குகிறது. ஆயினும் அவர் இருக்குமிடம் சென்று அவரைத் தழுவிக் கொள்ளலாம் என்றால் அவரைக் காண்பது அரிதாயிருக்கிறது. அவரும் வந்து நம் துன்பத்தைக் களையவில்லை. இந்நிலையில் என்னிடம் அவரை அனுப்பி விடுவாரும் இல்லை; அல்லது இங்கிருந்து நம்மைப் பிரித்து அவரிடம் சேர்த்து நம் இன்னலைக் களைவாரும் இல்லை. குப்பையில், செலுத்துவாரும் விலக்குவாரும் இல்லாமல் தாமே போரிட்டுக் கொள்ளும் குப்பைக் கோழிகளின் தனிமையான போர்போல நம் காமநோய், தானே அழியும் காலத்தில் அழிவதன்றி இடை நுழைந்து அதனைக் களைவார் இல்லை’ எனக் கூறிக்கொள்கிறாள்.
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியின் அல்லது
களைவோரிலை யாம் உற்றநோயே(விளிவாங்கு = அழியும்போது ; களைவோர் = நீக்குவோர்.)
குப்பைக் கோழிப்போர் விலக்குவார் இல்லாதது, அது கோழியின் சாவு வரையிலும் கூடப் போகலாம். அதுபோலத் தன்நோயும் தனது அழிவோடுதான் முடியும் என வருந்தியுரைக்கிறாள் தலைவி. ‘நம் நோய் களைவோர் இல்லை’ எனத் தலைவி சொல்வது தோழியைத் தூண்டவே. தோழி அறத்தொடு நின்று களவுக் காதல் திருமணத்தில் முடிய உதவ வேண்டும் என்பது தலைவியின் நோக்கம். மிகப்பொருத்தமான, அருமையான உவமை கூறியதன் மூலம் ‘பெயர்’ பெற்றுக் கொண்ட புலவருள் குப்பைக் கோழியாரும் ஒருவராகிறார்.
கொடுங்கால் முதலை
எனத் தொடங்கும் கவைமகனார் பாடல் (குறுந்தொகை-324).
கவைமகனார்
இவர் இயற்பெயர் தெரியவில்லை. ‘கவை மகவு’ என்பது இரட்டைக் குழந்தைகளைக் குறிக்கும் தொடர். தன் இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்ட நிலையில் யாரை முதலில் காப்பாற்றுவது எனத் தடுமாறும் தாயுள்ளத்தை உவமையாக்கிக் கூறியமையால் இவர் இப்பெயர் பெற்றார்.
திணை : நெய்தல்
கூற்று : தலைவி இற்செறிக்கப்பட்டதனைத் தோழி மூலம் அறிந்த தலைவன் ‘இரவுக் குறியில்வந்து சந்திப்பதாகவும், பின்பு வரைந்து கொள்வதாகவும் கூறியபோது தோழி அதனை மறுத்து வரைவு கடாயது.
தோழி தலைவனை நோக்கிக் கூறுகிறாள் : ‘பெருமானே ! கொல்வதில் வல்ல, வளைந்த கால்களையுடைய ஆண் முதலைகள் கடற்கரைக் கானலில் திரியும். அதனை அறிவோர் அவ்வழியே வருவதைத் தவிர்ப்பர். ஆயினும் நீ தலைவி மீதுள்ள பேரன்பு காரணமாக அவ்வழியாக வருகிறாய். மீன்கள் நிறைந்த கடற்கழிகளை நீந்திக் கடந்து வருகிறாய். தலைவியோ தன் அறியாமை காரணமாக உனக்கு இடர் நேருமோ என அஞ்சி வருந்துகிறாள். உங்கள் இருவர்க்கும் இடைப்பட்ட நான் இருவர்க்கும் இன்னல் விளைவிக்கும் இரவுக் குறிக்கு அஞ்சுகிறேன். தன் இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்டால் தாய் அவ்விருவர்க்குமாக எவ்வாறு வருந்துவாளோ அவ்வாறே நானும் அஞ்சி வருந்துகிறேன்’.
கவைமக நஞ்சுண்டாஅங்கு
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே(கவைமக = இரட்டைக் குழந்தைகள் ; அஞ்சுவல் = அஞ்சுகின்றேன்)
தோழியின் நயமான பேச்சு இப்பாடலின் சிறப்பு. தோழியின் பார்வையில் தலைவன் - தலைவி இருவரும் இரவுக் குறி என்னும் நஞ்சை உண்ட குழந்தைகள். நஞ்சை - இரவுக் குறியை அகற்றிவிடவேண்டும் ; தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பு.
சிறந்த உவமை காரணமாகப் பெயர் பெற்றவர்களின் வரிசையில் ‘கவைமக’னாரும் சேர்கிறார்.
நீர் நீடாடிற் கண்ணும் சிவக்கும்
எனத் தொடங்கும் கயத்தூர் கிழார் பாடல் (குறுந்தொகை-354).
கயத்தூர் கிழார்
இவர் சோழநாட்டிலுள்ள கயத்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவர்; வளோளர். உணர்ச்சிகளை அழுத்தமாகவும் மென்மையாகவும் வெளிப்படுத்தும் திறன் பெற்றவர் என்பதை இவர் பாடல் உணர்த்துகிறது.
திணை : மருதம்
கூற்று : பரத்தையிற் பிரிந்து திரும்பிய தலைவன் வாயில் வேண்டியபோது தோழி வாயில் மறுத்தது.
தோழி தலைவனை நோக்கி : ‘நீரில் நீண்டநேரம் விளையாடினால் கண்களும் சிவக்கும் ; பலநாட்கள் பருகுவோர்க்குத் தேனும் புளிக்கும். இது உலக இயற்கை. நீ தலைவியுடன் நெடுநாள் வாழ்ந்தமையால் சலிப்புற்று அவளைப் பிரிந்தாய். அப்படியாயின், எங்களை எங்கள் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு. அழகிய குளிர்ந்த பொய்கைகளையுடைய எம் தந்தையினது ஊரில் இரவில் கடும்பாம்புகள் திரியும் எம் தெருவில் வந்து எமது நடுங்கும் துயரை நீ களைந்தாய், களவுக் காலத்தில் ! இப்போது எங்களை எங்கள் வீட்டிலேயே கொண்டுபோய் விட்டுவிடு’ என்று கூறுகிறாள்.
நீர்நீடாடிற் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயின் எம் இல்லுய்த்துக் கொடுமோ(ஆர்ந்தோர் = மிகுதியாக உண்டோர்; தணந்தனை = பிரிந்தாய்; உய்த்துக்கொடுமோ = சேர்ப்பித்து விடு)
இப்பாடலில், ‘தலைவியிடம் வராதே’ என்ற சாதாரண வாயில் மறுப்பு நிலையைத் தாண்டி, இனித் தலைவியும் இங்கிருக்கமாட்டாள் என்ற நிலைக்குப் போகிறது தோழியின் பேச்சு. பாம்புகளைப் பொருட்படுத்தாமல் களவுக் காலத்தில் வந்து காட்டிய அன்பையும், இப்போது கற்புக் காலத்தில் காட்டுகின்ற அலட்சியத்தையும் தலைவன் மனத்தில் பாயுமாறு கூறுகிறாள் தோழி. வேப்பங்காயையும் பறம்புமலைச் சுனை நீரையும் கொண்டு தலைவனுடைய அன்றைய - இன்றைய மனநிலைகளைச் சுட்டிக் காட்டிய தோழியை முன்னர்ப் பார்த்தோம் (குறுந்தொகை-196) இப்பாடலில் ‘மிகுதியாக உண்டோர் வாயில் தேன் புளிப்பதை’ உதாரணம் காட்டித் தலைவி மீது தலைவன் கொண்ட காதல் காலப்போக்கில் மாறிப்போனது என்கிறாள் தோழி. அவனுடைய பரத்தமைக்கு இச்சலிப்பே காரணம். அவ்வாறானால் அவன் கொண்டிருந்தது வெறும் உடற்காதல் தான் ; உண்மைக் காதல் அன்று என்பது தோழியின் பேச்சில் உணரக்கிடக்கிறது.
அரிற்பவர்ப் பிரம்பின்
எனத் தொடங்கும் ஒளவையார் பாடல் (குறுந்தொகை-364).
ஒளவையார்
ஒளவையார் பற்றி முன்னரே படித்துள்ளோம். (பாடம் எண் : 3 - நற்றிணை - 3)
திணை : மருதம்
கூற்று : இற்பரத்தை தன்னைப் புறம்பேசிய சேரிப்பரத்தையின் தோழியர் கேட்பச் சொல்லியது.
(இற்பரத்தை : தலைவன் ஒருவனுக்கே உரிமையுடைய பரத்தை. சேரிப்பரத்தை : அத்தகைய வரையறை இல்லாத பொதுமகள்.)
இற்பரத்தை சேரிப்பரத்தையின் தோழியர் கேட்கக் கூறுகிறாள்: ‘பிணங்கிக் கொடியாய்க் கிடக்கும் பிரம்பு போன்ற வரிகளை முதுகில் கொண்ட நீர்நாய், காலை உணவாக வாளை மீனைப் பெறுகின்ற வளமான ஊரின் தலைவன் அவன். ஒளிவீசும் பொன் வளையல்களை அணிந்த, தன்னைத் தானே தகுதியுள்ளவள் என்று சொல்லிக் கொள்கிற அவனது சேரிப்பரத்தை என்னைப் புறங்கூறுகிறாள் என்று சொல்கின்றனர். அவள் கூற்றுப் பொய்யாவதை எல்லாரும் உணரும் விழாநாள் வந்துவிட்டது. அழகாக வளையும் முன்கையையும் மூங்கில் போன்ற தோள்களையும் உடைய பெண்கள் கைகோத்துத் துணங்கைக் கூத்தாடும் விழாநாட்களும் வந்துவிட்டன. அம்மகளிரை மணம் கொள்வதற்காக வீரர்கள் கண்ணோடு கண் மாறுபட்டுச் செய்யும் விளையாட்டுப் போரும் வந்துவிட்டது.’
(கண்பொர = கண்ணொடுகண் மாறுபட ; ஒருவரோடு ஒருவர் கண்கள் கலக்க)
சேரிப்பரத்தை என்ன புறம் கூறினாள்? இற்பரத்தை தலைவனை வெளியே விடாமல் மயக்கித் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டாள் என்று புறம்பேசியிருக்கிறாள். அதற்குப் பதில் கூறும் முறையில்தான் இற்பரத்தை பேசுகிறாள். நீர்நாய் தானே விரும்பி வாளை மீனை உண்கிறது என்னும் வருணனையில், தலைவன் தன் விருப்பப்படியேதான் தன்னோடு இருக்கிறான் என்பதை உள்ளுறைப் பொருளாகக் குறிக்கிறாள் இற்பரத்தை. மேலும் பிற பரத்தையரைவிடத் தன்னையே தலைவன் விரும்புகிறான் என்ற உண்மையைத் துணங்கைக் கூத்தில் அனைவரும் காணலாம் என அறைகூவல் விடுக்கிறாள். கூத்தில் அவன் அவளுக்குச் சிறப்பிடம் தருவான் என்பது அவள் தரும் குறி்ப்பு.
(துணங்கைக் கூத்து : பெண்கள் கைகோத்து ஆடும் கூத்து. இதில் ஆடவரும் இடம் பெறுவர்.)
தலைவன் மீது முழு உரிமையுடைய தலைவி இப்பாடலில் இல்லை. அவளை விட்டுவிட்டுப் பரத்தையர் இருவர் தலைவன் மீது உரிமைக்காக மோதிக் கொள்வதைக் காட்டும் வேறுபாடான பாடல் இது.
எல்லை கழிய
எனத் தொடங்கும் கங்குல் வெள்ளத்தார் பாடல் (குறுந்தொகை-387).
கங்குல் வெள்ளத்தார்
இயற்பெயர் அறியப்படாத இப்புலவர், கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே எனத் தலைவியின் துயரை அழகாக வடித்த திறத்தால் அத்தொடர் கொண்டே இப்பெயரைப் பெற்றார்.
திணை : முல்லை
கூற்று : தலைவன் பிரிந்தபோது, ‘ஆற்றியிருத்தலே நல்லது’ என வற்புறுத்தும் தோழியை மறுத்து, மனம் வருந்தித் தலைவி கூறியது.
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி! பகற்பொழுது கடந்துவிட்டது, முல்லைகள் மலர்கின்றன, கதிரவனது சினம் தணிந்த மாலை - செயலற்றுத் தவிக்கச் செய்யும் மாலை வருகிறது. இரவை எல்லையாகவுடைய இந்த மாலையைக் கூட நீந்திக் கடந்துவிடலாம். அதன்பின் வரும் இரவாகிய வெள்ளம் கடலைக் காட்டிலும் பெரியதாகுமே! நீந்திக் கடக்க முடியாதே! அவ்வாறிருக்கையில் மாலையை நீந்திக் கடப்பதன் பயன்தான் என்ன?’
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே
(கங்குல் = இரவு)
பிரிந்து வாழ்வோர்க்கு மாலையும் இரவும் தாங்க முடியாத துயர்ப்பொழுதுகள். இரவைக் கடலினும் பெரிய கங்குல் வெள்ளம் என உருவகித்த அழகுக்காக இப்புலவர் ‘கங்குல் வெள்ளத்தார்’ எனப்பெயர் சூட்டப்பட்டார்.
ஊருண் கேணி
எனத்தொடங்கும் பரணர் பாடல் (குறுந்தொகை-399).
பரணர்
பரணர் பற்றி முன்னரே படித்துள்ளோம். (பாடம் எண் : 1 - நற்றிணை - 1)
திணை : மருதம்
கூற்று : வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
அதாவது தலைவன் தலைவியை மணந்து கொள்வதில் கருத்தில்லாமல் களவின்பத்தையே விரும்பி வந்து சென்று கொண்டிருக்க, அதனால் தனக்கு நேரும் துன்பத்தைத் தலைவி தோழிக்குக் கூறியது.
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி ! நீருண்ணும் கேணியில் படிந்துள்ள பாசியை ஒத்தது பசலை நோய். நீரை எடுக்கக் கைவைக்கும் போது விலகும் பாசி, கையை எடுத்தவுடன் மூடிக்கொள்வது போலக் காதலர் என்னை அணைக்கும் தோறும் அணைக்கும் தோறும் விலகி, அவர் பிரியும் தோறும் பிரியும் தோறும் மீண்டும் பரவிக் கொள்கிறது பசலை நோய்.
ஊருண் கேணி உண்டுறைத் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே(உண்டுறை = உண்துறை = நீர் உண்ணும் துறை ; தொக்க = சேர்ந்து நிறைந்த ; தொடுவுழி = தொடும்போது ; விடுவுழி = விடும்போது)
இவ்வாறு கூறுவதன் மூலம் தலைவனை வரைவுக்குத் தூண்டுமாறு தோழி்க்குக் குறிப்புணர்த்துகிறாள் தலைவி.
சிறுபொழுதுப் பிரிவுகூடத் தலைவிக்குப் பசலை நோயைத் தந்துவிடுகிறது. இதனை உணர்த்தப் பரணர் கையாண்ட உவமை அன்றாடம் நாம் காணும் குளத்துப் பாசி. பாசி விலகலையும் மூடலையும் கொண்டு பசலை விலகலையும் சேர்தலையும் மனத்தில் அழுந்தப் பதிய வைக்கிறார் புலவர். கலித்தொகையில் பரணரின் சொல்லையும் கருத்தையும் ஒத்த வரிகள் வருகின்றன.
விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே(கலித்தொகை - 130)