தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடல்களின் வடிவ ஒழுங்குகள்

  • 6.3 பாடல்களின் வடிவ ஒழுங்குகள்

    இப்பாடப் பகுதிப் பாடல்களில் அமைந்துள்ள வடிவ ஒழுங்குகளை எடுத்துக் காட்டுகளுடன் இங்குக் காணலாம்.

    6.3.1 புறவடிவம்

    நக்கீரனாரின் கேளிர்வாழியோ (குறுந்தொகை-280) என்னும் பாடல் ஆசிரியப்பாவின் ஓசை ஒழுங்கு, எதுகை முரண் போன்ற தொடை அழகுகள் சிறப்பாக அமைந்துள்ள பாடல் ஆகும்.

    கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
    நெஞ்சு பிணிக்கொண்ட அஞ்சில் ஓதிப்
    பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
    ஒருநாள் புணரப் புணரின்
    அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே

    கேளிர் - கேளிர் ; நெஞ்சு - அஞ்சில் - எனவரும் எதுகை அழகுகளும், பெருந்தோள் - குறுமகள் - சிறுமெல்லாகம் எனவும், ஒருநாள் - அரைநாள் எனவும் வரும் முரண்தொடை அழகுகளும் பாடலின் வடிவச் சிறப்புக்குக் காரணமாகின்றன.

    6.3.2 அகவடிவம்

    கயத்தூர் கிழார் பாடலில் (குறுந்தொகை-354) பாடலின் பொருளமைப்பைக் கூர்மைப்படுத்தும் வண்ணம் பாடலின் வடிவம் அமைந்துள்ளது. பாடலின் பொருளமைப்பு இவ்வாறு அமைந்திருக்க வேண்டும்.

    1. களவுக் காலத்தில் தலைவன் தலைவியைச் சந்திக்கும் அன்பும் ஆர்வமும் மிக்கவனாக இரவு நேரத்தில் பாம்புகள் திரியும் தெருவில் நடந்து வந்தவன்.

    2. இப்போது தலைவியைப் புறக்கணித்துப் பரத்தையிடம் செல்கிறான்.

    3. ஆகவே தோழி சொல்கிறாள் : ‘எங்களை எங்கள் தந்தை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடு’ என்று, கருத்தமைப்பு இந்த முறையில் வருவதைப் புலவர் மாற்றுகிறார். இந்த வரிசை மாற்றம் காரணமாகக் கவிதைக்கு ஒரு வேகம் கிடைக்கிறது. தோழி - தலைவி உணர்ச்சிகள் அழுத்தமாக வெளிப்படுகின்றன

    என்பதை நீங்கள் கவனிக்க முடியும். மாற்றப்பட்ட வரிசைப்படி:

    1. தொடர்ந்து நீராடினால் கண் சிவக்கும்; நிறையத் தேன் உண்டால் அது புளிக்கும்.

    2. எங்கள் வீட்டில் கொண்டுபோய் எங்களை விட்டுவிடு.

    3. நீ பாம்புகள் பற்றிப் பொருட்படுத்தாமல் தலைவியை இரவில் சந்திக்க வந்தவன்.

    இவ்வாறு கருத்துகளை, எண்ணங்களை அவற்றின் தர்க்க வரிசை முறையை மாற்றி்த் தருவதன் மூலம் கவிதைப் பொருளைச் சிறப்பாகத் தரும் வடிவமைப்பு முறையை இப்பாடலில் உள்ளது போலவே பல பாடல்களிலும் காணமுடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 12:05:20(இந்திய நேரம்)