தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D02144-பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    மாணவர்களே! தொல்காப்பியர் புறத்திணைகளை ஏழாகப் பகுத்ததையும், ஐயனாரிதனார் பன்னிரண்டாகப் பகுத்ததையும் அறிவீர்கள். வெட்சி முதலானவற்றை இரண்டாக்கியதுடன், அவற்றில் கூறப்படாத செய்திகளைக் கூறப் பொதுவியல் என்ற திணையையும் ஐயனாரிதனார் வகுத்தார். அதுபற்றி இப்பாடத்தில் படிக்க இருக்கிறீர்கள்.

    பொதுவியல் திணை என்பது வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது திணைகளில் அடக்கிக் கூறமுடியாத பொதுவான செய்திகளைக் கூறும் திணை. இது யாப்பு முதலான பிற இலக்கண நூல்களில் இடம்பெறுகிற ஒழிபியல் போன்றது. இது பொதுவியல் பால, சிறப்பிற் பொதுவியல் பால, காஞ்சிப் பொதுவியல்பால, முல்லைப் பொதுவியல்பால என நான்கு பிரிவுகளில் செய்திகளைக் கூறுகிறது.

    மூவேந்தர்களுக்குரிய அடையாளப் பூவைச் சிறப்பித்தல், தளர்ச்சி யில்லாத வீரத்தைச் சிறப்பித்தல், போர்க்களத்து வீரச் செயல் புரிந்து இறந்துவிட்ட வீரனுக்கு நடுகல் நாட்டல் ஆகிய செய்திகள் பொதுவியற்பால என்ற முதல் பகுதியில் கூறப் படுகின்றன. இப்பகுப்பின் அடிப்படையில் பொதுவியல்பால என்ற பகுதிச் செய்திகள் பாடத்தில், மூவேந்தருக்குரிய பூக்கள், வீரத்தைப் போற்றுதல், நடுகல் ஆகிய மூன்று தலைப்புகளில் தரப்படுகின்றன.

    சிறப்பிற் பொதுவியல்பால என்ற இரண்டாம் பகுதியில் பெண்ணோ ஆணோ தன் இணையை இழந்து தவிக்கும் நிலையும், தாய் குழந்தையை இழந்து தவிப்பதும், பிள்ளை தாயை இழப்பதும், இழப்பு வருமோ என நிமித்தங்கள் கண்டு அஞ்சுவதுமாகிய இழப்புச் செய்திகள் சொல்லப்படுகின்றன. இவை சிறப்புப் பொதுவியல் என்ற தலைப்பில் பாடத்தில் இடம் பெறுகின்றன.

    தொல்காப்பியர் காஞ்சித்திணையில் குறிப்பிட்ட நிலையாமைச் செய்திகளும் உறுதிப்பொருள் குறித்த செய்திகளும் புறப்பொருள் வெண்பா மாலையில் காஞ்சிப் பொதுவியற் பால என்ற மூன்றாம் பகுதியில் கூறப்படுகின்றன. காஞ்சித் திணையைப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் போர்த் திணையாக, மண்மீட்கும் செயலைக் குறிப்பதாகக் கொண்டுள்ளார் என்பதை அத்திணை குறித்த பாடத்தில் அறிந்திருப்பீர்கள். எனவே இச்செய்திகள் பொதுவியலில் இடம்பெற்றுள்ளன. பாடத்தில் இச்செய்திகள் காஞ்சிப் பொதுவியல் என்ற தலைப்பில் தரப்படுகின்றன.

    முல்லைப் பொதுவியற்பால என்னும் நான்காம் பகுதியில் பிரிந்த தலைவன் தலைவி கூடி மகிழ்வதும், இல்லறச் சிறப்பும், தலைவியின் கற்பு மாண்பும் பேசப்படுகின்றன. முல்லைப் பொதுவியல் என்ற தலைப்பில் இவற்றை இப்பாடம் தருகிறது.

    நான்கு பகுதிகளுக்கும் முறையே 12, 11, 6, 8 என மொத்தம் 37 துறைகள் இத்திணையில் கூறப்படுகின்றன. அவ்வத் துறைகளுக்கான கொளுக்கள் பாடத்தில் தரப்படுகின்றன. வெண்பாவின் கருத்து, தரப்படுகிறது. ஒரு சில வெண்பாக்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. இணையப் பல்கலைக்கழகத்தின் மின்நூலகத்தில் உள்ள புறப்பொருள் வெண்பா மாலை நூலில் காணும் வெண்பாக்களை நீங்கள் படித்து மகிழலாம்..

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:17:43(இந்திய நேரம்)