தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிறப்புப் பொதுவியல்

  • 4.4. சிறப்புப் பொதுவியல்

    மனைவி, கணவனை இழந்து அடையும் துன்ப நிலைகள், மனைவியை இழந்த கணவன் அடையும் துன்ப நிலைகள், கணவன் இறக்க மனைவி அதனை நிமித்தத்தால் உணர்ந்து துன்புறுதல், பிள்ளையை இழந்து தவிக்கும் தாயின் நிலை, எரிக்கப்படும் கணவன் பிணத்தோடு தன்னையும் எரித்துக்கொள்ள மனைவி நிற்கும் நிலை, வேந்தன் இறக்க அவனைச் சார்ந்தோர் வருந்துதல் முதலான துன்ப நிலைகள் இப்பகுதியில் கூறப்படுகின்றன. முதுபாலை, சுரநடை, தபுதார நிலை, தாபத நிலை, தலைப் பெயல் நிலை, பூசல்மயக்கு, மாலை நிலை, மூதானந்தம், ஆனந்தம், ஆனந்தப் பையுள், கையறு நிலை ஆகிய துறைகளில் இவ்விழப்புச் செய்திகள் விளக்கப்படுகின்றன. இவற்றைச் சிறப்பிற் பொதுவியல்பால என வெண்பாமாலை குறிப்பிடுகிறது. எல்லாத் திணைகளிலும் நேரக்கூடிய பொதுவான இழப்புகள் என்பதால் பொதுவியலில் தரப்பட்டுள்ளன.

    4.4.1. முதுபாலை

    பெரும்பிரிவு என்பதை இது குறிக்கிறது. கணவனை நிரந்தமாகப் பிரியும் நிலையைக் கூறுவது முதுபாலை. கொளு,

    காம்புயர் கடத்திடைக் கணவனை இழந்த
    பூங்கொடி மடந்தை புலம்(பு)உரைத் தன்று

    என விளக்குகிறது. மூங்கில் நிறைந்த பாலை நிலத்தில் எதிர்பாரா வகையில் கணவனை இழந்த தலைவியின் தனிமையைக் கூறுதல் என்பது பொருள். வெண்பா, இத்துயரின் கொடுமையைச் சித்திரித்துக் காட்டுகிறது; கணவனை இழந்த பெண்ணின் கூற்றாக அமைக்கப்பட்டுள்ளது.

    நீர்மலி கண்ணொடு நின்றேன் நிலைஇரங்காய்
    தார்மலி மார்பன் தகைஅகலம் - சூர்மகளே!
    வெள்ளில் விளை(வு)உதிரும் வேய்ஓங்கும்
    வெம்சுரத்துக்
    கொள்ளல்நீ கோடல் கொடிது

    ‘பேய்மகளே! விளங்கனிகள் உதிரும் இக்கொடிய பாலையில் கணவன் இறக்க, அவன் பிணத்தை வைத்துப் புலம்பும் என் துயர்கண்டு இரங்காமல் அவன் உடலை உன் உணவுக்காகக் கைப்பற்ற முயலும் உன் செயல் மிகக் கொடியது’ என்று பெண்ணின் துயரைக் காட்டுகிறது.

    4.4.2. சுரநடை

    இது பாலை வழியில் நடப்பது என்பதைக் குறிக்கிறது; பாலைவழியில் மனைவியை இழந்த கணவனின் துயரநிலையைக் கூறுவது. சுரநடை என்பது அகப்புறப் பெருந்திணையாக நம்பி அகப்பொருளிலும் கூறப்படுகிறது.

    மூதுஅரில் நிவந்த முதுகழை ஆரிடைக்
    காதலி இழந்த கணவன்நிலை உரைத்தன்று

    என்பது கொளு. முதிர்ந்த மூங்கில்களையுடைய பாலை நிலத்தில் தலைவியை இழந்த வீரனின் நிலையைச் சொல்வது என்பது பொருள். வெண்பா, வீரனின் கூற்றாக அமைக்கப்பட்டுள்ளது. ‘நெருப்பு மூட்டியது போன்ற வெப்பம் மிக்க பாலையில் வஞ்சனையாக என் மனைவியின் உயிரைக் கைப்பற்றிய கூற்றுவனே! என் கண்முன் வந்தால் என் கைவலோல் உன்னை மாய்ப்பேன்’ என்பது வெண்பாவின் கருத்து.

    4.4.3. தபுதார நிலை

    மனைவியை இழந்த நிலை என்பதை இது குறிக்கிறது. மனைவி இறந்ததால் ஏற்பட்ட தனிமை நிலை என்பது பொருள் (தபு - இறத்தல்; தாரம் - மனைவி). இது அகப்புறப் பெருந்திணையாக நம்பிஅகப்பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது. கொளு

    புனைஇழை இழந்தபின் புலம்பொடு வைகி
    மனையகத்(து) உறையும் மைந்தன்நிலை உரைத்தன்று

    என விளக்குகிறது. ‘நகையணிந்த மனைவியை இழந்து தனிமையில் வீட்டில் துன்புறும் ஆண்மகன் நிலையைக் கூறுதல்’ என்பது இதன்பொருள். ஒருவன் மனைவியை இழந்த செய்தியைக் கேட்பவன் கூற்றாக வெண்பா அமைந்துள்ளது. ‘தன் மனைவியை இழந்து அதனால் வருந்தும் வள்ளலாகிய இளைய தலைவனின் துயர்நிலையைக் களோமல் என் காதுகள் செவிடாகட்டும்’ என்று கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது.

    4.4.4. தாபத நிலை

    தவநிலை என்பதை இது குறிக்கிறது. கைம்மை நிலை என்பது பொருள் (தாபதம் - தவம்). தவத்தோர் போலப் புலன் அடக்கி வாழும் கைம்மைநிலை பற்றியது இது. இது நம்பிஅகப்பொருளிலும் கூறப்பட்டுள்ளது. கொளு,

    குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
    கருந்தடங் கண்ணி கைம்மைகூ றின்று

    என விளக்கமளிக்கிறது. ‘குருந்தப் பூ மாலை அணிந்த கணவன் இறக்க, பெரிய கண்களை உடைய மனைவி கைம்மை நிலையை ஏற்றதைக் கூறுதல்’ என்பது பொருள். கைம்மை பூண்ட பெண்ணின் நோன்பு நிலையை வெண்பா விளக்குகிறது. ‘தன் கணவனைக் கூற்றுவன் பிரித்துவிட, தான் இறந்துபோகாது நொந்து வருந்தும் மனைவி, தன்னை விட்டுவிட்டு இறந்து போனவனின் மாலையிடம் கோபித்துத் தான் பூச்சூடாமல் வெற்றுத் தரையில் படுத்துக் கரிய இலை உணவை உண்டு வாழ்கிறாள்’ என்கிறது வெண்பா.

    4.4.5. தலைப்பெயல் நிலை

    கொளு,

    இன்கதிர் முறுவல் பாலகன் என்னும்
    தன்கடன் இறுத்ததாய் தபுநிலை உரைத்தன்று

    என்று விளக்குகிறது. இனிய ஒளிநகையுடைய பிள்ளை என்னும் தான் கொடுக்க வேண்டியதனைக் கொடுத்து, தாய் சிலநாட்களில் இறந்தமையைச் சொல்வது என்பது பொருள். இளம்வயதினளான தாய் இறந்த கொடுமையை வெண்பா விளக்குகிறது. ‘உலக இயல்பு மிகக் கொடியது! முள்போன்ற பற்களையுடைய தாய், பிள்ளையைத் தரவேண்டிய தன் கடமையை முடித்து விட்டு, கூற்றுவன் (சாவின்) வாயில் அகப்பட்டாள்’ என்று வெண்பா இரங்குகிறது.

    4.4.6. பூசல் மயக்கு

    கொளு,

    பல்லிதழ் மழைக்கண் பாலகன் மாய்ந்தெனப்
    புல்லிய பெருங்கிளைப் பூசல்கூ றின்று

    என்பது ஒரு விளக்கம். ‘மழைபோல் குளிர்ந்த அழகிய பூப் போன்ற கண்களையுடைய சிறுவன் இறந்தானாகப் பெரிய சுற்றத்தினர் கொண்ட துயரப் புலம்பலைக் கூறுதல்’ என்பது பொருள். ‘பிள்ளைக்காகத் தன்னிடத்தே பாலையும் கொஞ்சும் சொற்களையும் கொண்ட தாய் இருக்க, அவ்வீட்டின் மூலமாகிய குழந்தையைக் கைப்பற்றிய கூற்றுவன், பிரிவால் புலம்பும் உறவினரின் துயரத்திற்கு இரங்குவானோ?’ என்று வெண்பா இதனைப் புலப்படுத்துகிறது.

    பூசல் மயக்கு என்பதற்கு இன்னொரு விளக்கமும் தரப் பட்டுள்ளது. மன்னன் இறக்க அந்நாட்டிலுள்ளோர் வருந்துவதும் இதில் அடங்கும். இதனைக் கொளு,

    வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும்
    ஆய்ந்த புலவர் அதுவென மொழிப

    என விளக்குகிறது. இதனையும் வெண்பா புலப்படுத்துகிறது.

    4.4.7. மாலை நிலை

    (கணவனொடு எரி புக) மாலை நேரத்தில் மனைவி நிற்கும் நிலை என்பது பொருள். கொளு இதனை,

    கதிர்வேல் கணவனொடு கனைஎரி முழுக
    மதிஏர் நுதலி மாலைநின்(று) அன்று

    என விளக்குகிறது. ‘ஒளி மிகுந்த வேலைக் கொண்ட கொழுநன் இறக்க அவனை இடும் ஈம நெருப்பில் புக வேண்டிப் பிறை ஒத்த நெற்றியைக் கொண்ட மனைவி, மாலைக்காலத்தில் நின்றது’ என்பது இதன் விளக்கம். கண்டோர் கூற்றாக வெண்பா அமைந்துள்ளது.

    ‘பகைவரைக் கொல்வேன்; அல்லது களத்தில் மாய்வேன்’ என்று கூறிப் போருக்குச் சென்ற கணவன் சொன்னதை நினைத்த மனைவி, இறந்துபட்ட அவனை எரிக்கும் ஈமத்தீயில் அவனுக்குத் துணையாகத் தானும் புகுந்தாள்’ என வியந்து கூறுவதை வெண்பா காட்டுகிறது.

    4.4.8. மூதானந்தம்

    கொளு இதனை,

    கயல்ஏர் கண்ணி கணவனொடு முடிய
    வியல்நெறிச் செல்வோர் வியந்துரைத்(து) அன்று

    என்பது ஒரு விளக்கம். கயல்விழிகளையுடையாள் தன் கணவன் இறந்த உடனே தானும் இறந்துவிட அவ்வழியே போவார்கள் கண்டு வியந்து சொல்லியது’ என்பது இதன் பொருள். வெண்பா, இருவரும் ஒருசேர இறந்ததனைக் கண்டோர் கூற்றாக அமைந்துள்ளது. ‘வேலினை உடைய வீரன் உயிரும் அவன் மனைவி உயிரும் ஒரே நேரத்தில் பிரிந்தது கண்டு அவர்களுக்கு இரண்டு உயிர்கள் என்று சொல்லுதல் தவறு; இருவருக்கும் உயிர் ஒன்றே என வேண்டும்’ என்கிறது வெண்பா.

    வீரன் ஒருவன், பகைவருடைய அம்புகள் தன்மீது பாய்தலால், தன் செயலை முடிக்காமல் இறந்துபோனதைக் கூறுவதும் மூதானந்தத்தில் அடங்கும் என்பது இன்னொரு விளக்கம். அதற்கான கொளு,

    கொடியான் கூர்ங்கணை குளிப்பத் தன்தொழில்
    முடியான் அவிதலும் மூதா னந்தம்

    என்பது. ‘போர் தொடங்கியவுடன் குதிரையில் ஏறிப் போர்க்களம் சென்று அனைவருக்கும் முன்னே நின்று பகைவர் அம்புகளை எல்லாம் தடுத்துப் படைவீரர்களுக்குக் கரை போல் நின்ற இவ்வீரன் பகைவர் அம்புகளால் விழுப்புண் பட்டு வெற்றித் தொழிலை முடிக்காமலேயே இறந்துவிட்டான்’ என்று போற்றுவதாக வெண்பா அமைந்துள்ளது.

    4.4.9. ஆனந்தம்

    கொளு இதனை,

    ஆடமைத் தோளி விரிச்சியும் சொகினமும்
    வேறுபட அஞ்சி விதுப்புற்(று) அன்று

    என்று விளக்குகிறது. இது ஒரு விளக்கம். ‘மூங்கில் தோள்களையுடையாள் நற்சொல்லும் சகுனமும் மாறுபட அஞ்சி நடுக்கமுறுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா அவள் அச்சத்தை விளக்குகிறது. ‘அரசர்கள் ஆரவாரித்துச் செய்த போரிலே வேற்படைகளைத் தடுத்தவனுடைய மார்பில் பட்ட புண் ஆறவில்லை. நிமித்தமும் பொருத்தமாக இல்லை. அவன் புண் ஆறி வாழ்வானா? இப்பேதை என்ன ஆவாள்?’ என்பதாக வெண்பா அமைந்துள்ளது.

    பெரும் போருக்குச் சென்ற கணவன் நிலை என்னாகுமோ? என மனைவி கவலைப்படுவதும் இத்துறையில் அடங்கும். இதற்கான கொளு,

    தவப்பெரிய வெஞ்சமம்குறுகும்
    அவற்(கு) இரங்கினும் அத்துறையாகும்

    என விளக்குகிறது. ‘நிமித்தங்கள் மாறுபட்டுள்ளன; நற்சொல்லும் இசைவாயில்லை; மன்னர் பலர் கூடி வந்துள்ள இப்போருக்குச் சென்றுள்ளானே! என்ன ஆகுமோ?’ என்று மனைவி தவிப்பதை வெண்பா காட்டுகிறது.

    4.4.10. ஆனந்தப் பையுள்

    கொளு இதனை,

    விழுமம் கூர வேய்த்தோள் அரிவை
    கொழுநன் வீயக் குழைத்(து) உயங் கின்று

    என விளக்குகிறது. ‘மூங்கில் தோளாள், கணவன் இறப்பத் துன்பம் மிகுந்து வருந்துதல்’ என்பது பொருள். மனைவி கூற்றாக அமைந்துள்ள வெண்பா துறையைத் தெளிவுபடுத்துகிறது. ‘அவன் புகழ் பூமியில் தங்க, விண்ணுலகம் சென்றான் வீரன்; அவனுடன் உயிரோடு சேர்ந்து செல்லாமல், இன்னும் தன் உயிர் இருக்கிறதே’ என்று பெண் வருந்துவதாக வெண்பா அமைந்துள்ளது.

    4.4.11. கையறு நிலை

    செயலற்று வாடுதல் என்பது பொருள். கொளு இதனை,

    செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
    கையறவு உரைத்துக் கைசோர்ந்(து) அன்று

    என விளக்குகிறது. ‘வீரக் கழல் அணிந்த மன்னன் இறந்தானாக, அவனால் புரக்கப்பட்டோர் வருந்தி உரைத்துச் செயலற்று இருத்தல்’ என்பது பொருள். வெண்பா, சுற்றத்தாருள் ஒருவர் கூற்றாக இதனை விளக்குகிறது. ‘ஈ’ என இரந்தோர்க்கு இல்லை என்ற வார்த்தையைச் சொல்லாத தாய் போன்ற அரசன், மாற்றாரோடு பொருது மறைந்தான். நீ என்னவானாய் நெஞ்சே’ என்று கையறுநிலையைப் புலப்படுத்துகிறது.

    இறந்தவனுடைய புகழை அன்பு காரணமாகச் சொல்லினும் அதுவும் கையறு நிலையாகும் என்பது மற்றொரு விளக்கம். இதனைக் கொளு,

    கழிந்தான் தன்புகழ் காதலித்(து) உரைப்பினும்
    மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன

    என விளக்குகிறது. வெண்பா மாலையில் கையறுநிலைத் துறை கரந்தைத் திணையிலும் கூறப்பட்டுள்ளது.

     

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    பொதுவியல் திணையில் உள்ள நான்கு பிரிவுகள் எவை?
    2.
    மூவேந்தர்க்குரிய அடையாளப் பூக்களைக் குறிப்பிடுக.
    3.
    நடுகல் பற்றிய துறைகள் எவை?
    4.
    தபுதார நிலை என்ற துறைக்குரிய கொளுவினை எழுதுக.
    5.
    ஆகையறுநிலை என்பதன் பொருள் யாது?

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 19:21:52(இந்திய நேரம்)