தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D02144- முல்லைப் பொதுவியல்

  • 4.6. முல்லைப் பொதுவியல்

    கணவன் மனைவி இருவரிடயே நிகழும் உறவைக் கூறும் துறைகள் இவை. முல்லை, கார்முல்லை, தேர்முல்லை, நாண்முல்லை, இல்லாண்முல்லை, பகட்டுமுல்லை, பால்முல்லை, கற்பு முல்லை ஆகிய துறைகள் இதனைச் சார்ந்தன. போர்த்துறைகளில் இவை அடங்காததால் பொதுவியல் திணையில் கூறப்படுகின்றன.

    4.6.1. முல்லை

    கொளு,

    தடவரை மார்பன் தன்னமர் காதல்
    மடவரல் புணர்ந்த மகிழ்ச்சிநிலை உரைத்தன்று

    என விளக்குகிறது. ‘பெரிய மலை போன்ற மார்பினை உடையவன், தன்னிடத்தே அன்பினைக் கொண்ட பெண்ணுடன் கூடி மகிழ்ந்ததைக் கூறுதல்’ என்பது விளக்கம். ‘காற்றில் அசையும் மணக்கும் முல்லைக் கொடி போன்ற இடையுடைய பெண்ணுடலைத் தழுவித் துயர் தீர்ந்தேன்’ என ஆண்மகன் கூற்றாக வெண்பா விளக்குகிறது.

    4.6.2. கார் முல்லை

    கொளு,

    அருந்திறல் கட்டூர் அவர்வா ராமுன்
    கருங்கடல் முகந்து கார்வந் தன்று

    என விளக்குகிறது. ‘காவலையுடைய பாசறையிலிருந்து தலைவன் வரும்முன் அவன் வரவை அறிவிப்பதைப் போலக் கார்கால மேகம் வந்தது’ என்பது விளக்கம்.

    ‘தலையாட்டத்தினையுடைய குதிரை பூட்டிய தேர்ப் படை களையுடைய போரினை மேற்கொண்டிருந்த தலைவர் வரும் முன்னே கடல் நீரை முகந்துகொண்டு வந்தது மேகம்’ என்று வெண்பா விளக்குகிறது.

    4.6.3. தேர் முல்லை

    கொளு,

    உருத்தெழு மன்னர் ஒன்னார் தம்நிலை
    திருத்திய காதலர் தேர்வர(வு) உரைத்தன்று

    என விளக்குகிறது. ‘சினந்து வரும் பகைவர்களை வென்று மீண்டு வரும் தலைவர் தேர் ஊர்ந்து வரும் காட்சியைப் புகழ்ந்து கூறுதல்’ என்பது பொருள். ‘பகைவரை வென்று திறை கொடுக்கச் செய்து, வெற்றியுடன் மீண்டு வரும் நம் கொழுநர் தமது தேரினைச் செலுத்தி வர, அத்தேர் ஒலி கேட்டு மான்கள் அஞ்சி ஓடுகின்றன’ எனத் தலைவி கூற்றில் வெண்பா விளக்கமளிக்கிறது.

    4.6.4. நாண் முல்லை

    கொளு,

    செறுநர் நாணச் சேயிழை அரிவை
    வறுமனை வைகித் தற்காத் தன்று

    என விளக்குகிறது. ‘தன்னைப் பிரிந்து தலைவன் போர்க்களத்தில் இருக்க, தலைவி இல்லத்திலே தன் நாணமே துணையாக இருத்தலைக் கூறுதல்’ என்பது இதன் விளக்கம். ‘கணவன் பிரிந்த பின்பு அவன் இல்லாமையால் பொலிவு இழந்த இல்லத்தில் தலைவி தனது நாணமே நல்ல துணையாகத் தன்னைக் காத்துக் கொண்டிருந்த நிலையைச் சிறப்பித்தல்’ என வெண்பா விளக்கமளிக்கிறது.

    4.6.5. இல்லாண் முல்லை

    இல்லறத்தின் சிறப்பைக் கூறுதல் என்பது பொருள். கொளு,

    கழுமிய காதல் கணவனைப் பழிச்சி
    இழுமென் சீர்த்தி யின்மலி(பு) உரைத்தன்று

    என்று விளக்குகிறது. காதல் கணவனைத் தொழுது, பலரும் புகழும் அவன் இல்லத்தில் மனைவி வாழும் சிறப்பைக் கூறுதல் என்பது விளக்கம். ‘கணவன் காலடிகளை வணங்கியும் விருந்தினரைப் பேணியும் இரந்தவர்க்கு ஈந்தும் மனநிறைவுடன் வாழும் இல்லறச் சிறப்பைக் கூறுதல்’ என்பது வெண்பா தரும் விளக்கம்.

    4.6.6. பகட்டு முல்லை

    பகடு (காளை) போன்று முயற்சியுடையவன் கணவன் என்பது இத்துறை. கொளு,

    வயல்மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும்
    வியன்மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று

    என விளக்குகிறது. ‘வளமைக்கும் முயற்சிக்கும் காரணமான பகட்டுடன் இல்லத்தின் சிறப்பிற்குக் காரணமான தலைவனை ஒப்பக் கண்டு பாராட்டல்’ என்பது பொருள். வெண்பா இதனை மேலும் விளக்குகிறது. பெரும்பாரம் தாங்குவதிலும், விரைந்து நடத்தலிலும், வயலில் களைப்பின்றி உழுதலிலும் மேம்பட்டு விளங்கும் காளையைப் போலக் குடும்ப பாரத்தைத் தடையின்றித் தொடர்ந்து தாங்கி எல்லாருக்கும் ஆதாரமாக நிற்பவன் என்று தலைவனைத் தலைவி பாராட்டுவதாக வெண்பா காட்டுகிறது.

    4.6.7. பால் முல்லை

    பாலைப் (விதியை) பாராட்டியது என்பது பொருள். கொளு இதனை,

    அரிபாய் உண்கண் ஆயிழைப் புணர்ந்தோன்
    பரிவகல் உள்ளமொடு பால்வாழ்த் தின்று

    என விளக்குகிறது. ‘மையுண்ட விழிகளையும் அணிகளையும் உடையவளான பெண்ணை மணந்தவன். அதற்குக் காரணமான விதியை (பாலை) வாழ்த்துதல்’ என்று பொருள். ‘அழகிய கண்களையும் குயிலின் இனிய குரலையும் அழகிய பற்களையும் சிவந்த வாயினையும் வளையல்களையும் உடைய தலைவியை எனக்குத் தந்த விதி சுவர்க்கத்தைப் பெறட்டும்’ என்று வாழ்த்துவதை வெண்பா காட்டுகிறது.

    4.6.8. கற்பு முல்லை

    கொளு,

    பொன்திகழ் சுணங்கின் பூங்கண் அரிவை
    நன்றறி கொழுநனை நலம்மிகுத் தன்று

    என விளக்கமளிக்கிறது. ‘பொன் போன்ற சுணங்கினையும் அழகிய கண்ணினையும் உடைய மடந்தை, நல்ல கொழுநனின் நன்மை பெருகட்டும் என வாழ்த்துதல்’ என்பது பொருள். வெண்பா, கணவனுக்கு உடன்பட்டு வாழும் பெண்ணின் கற்புநிலையை உணர்த்துகிறது. ‘நெய்யில் பொறிக்கப்பட்ட நிணமும் தசையும் கலந்த சோற்றைப் பிறரருந்துக; தளிரையுடைய கீரை உணவாயினும் கணவன் ஈட்டிய இலையுணவை உண்பதே பெருமை மிக்கது என்று கணவன் இல்லத்தை மனைவி சிறப்பித்தலை’ வெண்பா காட்டி விளக்குகிறது.

    கற்புமுல்லை என்பதற்கு வேறு இரு விளக்கங்களும் உள்ளன.

    மேவருங் கணவன் தணப்பத் தன்வயின்
    காவல் கூறினும் அத்துறை ஆகும்
    திருவளர் நன்னகர் அடைந்த கொழுநன்
    பெருவளம் ஏத்தினும் அத்துறை ஆகும்

    என்று கொளுக்கள் விளக்குகின்றன.

      (1) கணவன் பிரிந்த காலத்தில் தலைவி தன் உள்ளத்துத் துன்பம் பிறர்க்குத் தோன்றாமல் காக்கும் தன் நிறையே தனக்குக் காவலாக வாழ்வதைச் சிறப்பித்தல்.

      (2) நாளும் விருந்தோம்பும் செல்வம் செழித்த புக்ககம் சென்ற தலைவி, அத்தகைய கணவனது பெருஞ் செல்வத்தைப் புகழ்ந்து கூறுதல்.

    மேற்கூறிய இரு விளக்கங்களும் கற்புமுல்லைத் துறைக்கு உரியன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:18:03(இந்திய நேரம்)