தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D02144- மூவேந்தருக்கு உரிய பூக்கள்

  • 4.1 மூவேந்தருக்கு உரிய பூக்கள்

    சேரர், பாண்டியர், சோழர் ஆகிய மூவேந்தர்களின் அடையாளப் பூக்களான போந்தை (பனம் பூ), வேம்பு (வேப்பம்பூ), ஆர் (ஆத்திப்பூ) ஆகியன பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவற்றைச் சூடியிருத்தல் அரசமரபு. போருக்குச் செல்லுங்கால் தத்தம் அரச மரபு அடையாளப் பூவோடு, மேற்கொள்கிற வெட்சி முதலான போர் வினைகளுக்குரிய பூவினையும் மாலையாகச் சூடிப் போருக்குச் செல்வர். போர்வினைகளுக்குரிய போர்ப்பூக்கள் சூடுதலைப் பற்றி வெட்சி முதலான திணைகளில் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது. பொதுவியல் மூவேந்தருக்குரிய அடையாளப் பூக்கள் சூடுதலைப் பற்றிக் கூறுகிறது. (போந்தை, வேம்பு, ஆர் எனும் துறைகள் இவற்றை விளக்குகின்றன.) இதனைப்

    போந்தை வேம்பே ஆர்என வரூஉம்
    மாபெருஞ் தானையர் மலைந்த பூவும்        (புறத்திணை இயல். 5)

    என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பொதுவான செய்தி என்பதால் பொதுவியலில் இது கூறப்படுகிறது.

    4.1.1 போந்தை

    போந்தை என்பது பனம் பூவைக் குறிக்கும். சேரனுக்குரிய அடையாளப் பூவான பனம்பூவைப் புகழ்வது போந்தை என்னும் துறை. கொளு இதனை,

    கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பில்
    புலவேல் வானவன் பூப்புகழ்ந் தன்று

    என்று விளக்குகிறது. பகைவேந்தரோடு நிகழ்த்தும் போரில் புலால்நாறும் வேலினையுடைய சேரன் சூடும் பூவைப் புகழ்தல் என்பது இதன்பொருள். இதற்குரிய வெண்பா பனம்பூவின் சிறப்பைப் புலப்படுத்துகிறது. போர் வரின் சேரன் தனக்குரிய கொல்லிமலையில் பூத்த செங்கழுநீரைச் சூடாமல் பனம்பூவைச் சூடுவான் என்று சிறப்பித்துக் கூறுகிறது.

    4.1.2 வேம்பு

    வேம்பு, வேப்பம் பூவைக் குறிக்கும். பாண்டியனுக்குரிய அடையாளப் பூவான வேப்பம்பூவைப் புகழ்வது வேம்பு என்னும் துறை. கொளு இதனை,

    விரும்பார் அமரிடை வெல்போர் வழுதி
    சுரும்பார் முடிமிசைப் பூப்புகழ்ந் தன்று

    என்று விளக்குகிறது. பகைவருடனான போரின்போது பாண்டியன் தன் முடியில் சூடும் வேப்பம்பூவைப் புகழ்தல் என்பது இதன் பொருள். ‘வீரர்கள் போர்ப்பூவைச் சூடிக்கொள்ளப் பாண்டியன் வேப்பம் பூக்கொத்தினைத் தன் மகுடத்தில் சூடிக்கொள்வான்’ என வெண்பா விளக்குகிறது.

    4.1.3 ஆர்

    ஆர் என்பது ஆத்திப்பூவைக் குறிக்கும். சோழனுக்குரிய அடையாளப் பூ ஆத்தி. இதனைப் போர்க்காலத்தில் சூடுதல் இத்துறையில் குறிப்பிடப்படுகிறது. கொளு,

    விறல்படை மறவர் வெஞ்சமம் காணின்
    மறப்போர்ச் செம்பியன் மலைபூ உரைத்தன்று

    என்கிறது. பகைவரது கொடிய போரினை எதிர்கொள்ளும் சோழன் புனைந்த ஆத்தி மலரைப் புகழ்தல் என்பது இதன்பொருள்.

    வெண்பா இதனை அழகுற விளக்குகிறது.

    கொல்களி(று) ஊர்வர் கொலைமலி வாள்மறவர்
    வெல்கழல் வீக்குவர் வேல்இளையர் - மல்கும்
    கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன்
    அலங்கல் அமர்அழுவத் தார்

    ‘கொலைத்தொழில் சிறந்த வாள் வீரர்கள் கொல்யானையைச் செலுத்துவர்; வெல்லும் ஆற்றலை மிக்க வேல்வீரர் வீரக்கழலை அணிவர்; காவிரி நாடனான சோழன் ஆத்திமாலை சூடுவான்’ என்பது வெண்பாவின் கருத்து.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:17:47(இந்திய நேரம்)