தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- எழுத்தாக்கம் (Writing System)

  • 3.1 எழுத்தாக்கம் (Writing System)

    சொல்லெழுத்து முறையைப் (Spelling System) பற்றி அறிந்து கொள்ள எழுத்தாக்கம் (Writing System) பற்றிய விளக்கத்தையும் வரலாற்றினையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

    மொழியின் கட்டமைப்பில் காலத்திற்கு ஏற்ப மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதனை விளக்கும் முகமாகப் பேச்சுமொழி ஒலியன்களுக்கான வரிவடிவ அமைப்புத் தோன்றுகிறது. அவ்வாறு அமைந்த வரிவடிவத்தை எழுத்து என்று கூறலாம்; எழுத்தின் எண்ணிக்கையையும், ஒரு சொல்லுக்கான எழுத்துகளின் வரையறை போன்றவற்றையும் எழுத்தாக்கம எனலாம்.

    மனித வரலாற்றில் 'எழுத்தாக்கம்' சற்று ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவாயிற்று எனலாம். அப்போது நான்கு வெவ்வேறு இடங்களில் எழுத்தாக்க முயற்சிகள் தனித்தனியே மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிகிறது. 1. ஆசியாக் கண்டத்தில் மெசபடோமியா 2. பழைய எகிப்து 3. பழஞ்சீனம் 4. பிற்காலத்தில் தென் அமெரிக்காக் கண்டத்தில் மாயா (Maya of Yucatan) ஆகிய இடங்களில் எழுத்தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இன்று உலகில் காணப்படும் எழுத்துமுறை எகிப்திய மெசபடோமியா முறையின் தழுவலாகவே கருதப்படுகிறது. உருபன் எழுத்து முறை (Morphophonemic writing system) ஏற்பட்ட பிறகே ஒலியன் எழுத்து முறை (Phonemic Writing System) தோன்றியிருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:03:31(இந்திய நேரம்)