Primary tabs
-
3.2 சொல்லெழுத்து என்றால் என்ன?
எழுத்து என்ற சொல்லை நாம் இரண்டு பொருளில் கையாண்டு வருகிறோம். 1. எழுத்துச் சீர்திருத்தம், கையெழுத்துப் போன்ற தொடர்களில் எழுத்து என்பது வடிவத்தைக் குறிக்கிறது. 2. எழுத்துப்பிழை என்ற தொடரில் ஸ்பெல்லிங் (spelling) என்ற பொருளில் வருகிறது. இந்தப் பொருளைச் சிறப்பாகக் குறிக்கத் தனிச்சொல் வேண்டுமென்றால் அதனைச் சொல்லெழுத்து (Spelling) எனலாம். ஒரு சொல்லை எந்தெந்த எழுத்துகளைக் கொண்டு எழுத வேண்டும் என்று கூறுவது சொல்லெழுத்து முறை ஆகும்.
3.2.1 சொல்லெழுத்து வரையறை (Spelling Determination)
ஒரு மொழியின் சொல்லெழுத்தை வரையறுப்பதற்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது 'வாசிப்பு' (reading) என்று மொழியியலார் (Linguists) கருதுகின்றனர். நெடுங்காலமாகத் தமிழ் இலக்கிய மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்து வருகிறது. ஒரு நூலை வாசிக்கும்போது 'எழுத்தைக் காண்பதால் மட்டும் சொல்லை உணர்ந்து பொருளை அறிந்து கொள்வதில்லை. எழுத்து மூலம் சொற்களை அடையாளம் கண்டு, பின்னரே பொருளை உணர்ந்து கொள்கிறோம். அவ்வாறு எழுத்துகளைச் சேர்த்துப் பார்க்கும்போது என்னென்ன எழுத்துகள் இடம் பெற்றுச், சரியான ஒரு சொல்லாக ஆகிறது என்பதை வரையறை செய்ய வேண்டும். சான்றாகத், தாவரத்தைக் குறிக்க 'மரம்' என்று எழுத வேண்டும். இதனை விடுத்து 'மறம்' என்று எழுதினால் 'வீரம்' என்ற பொருளாகிறது. இன்றைய பேச்சு வழக்கில் இவ்விரண்டு சொற்களும் (மரம், மறம்) ஒன்றாகவே உச்சரிக்கப்படுகின்றன. இதனைத்தான் எழுத்து மூலம் சொற்களை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இதுபோன்று எழுத்துகளை வரையறை செய்து கொண்டு பயன்படுத்துவதைச் சொல்லெழுத்து வரையறை எனலாம்.
3.2.2 தமிழ்ச் சொல்லெழுத்தின் வளர்ச்சி
சொல்லெழுத்துக் காலந்தோறும் மாறிக் கொண்டு வந்திருக்கின்றது. நேமிநாதம் என்னும் இலக்கண நூல் சொல்லெழுத்துகள் சிலவற்றில் ஏற்பட்ட மாற்றத்தை நேரடியாக விவரித்துள்ளது.
பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடு ஓடாம்
நீராகும் நீயிர் எவனென்ப - தோருங்கால்
என்என்னை என்றாகும் யாமுதற்பேர் முதலாம்
அன்ன பொழுது போ தாம். (நேமிநாதம் - 36)'பெயர்' என்னும் சொல் 'பேர்' என்றும், 'பெயர்த்து' என்னும் சொல் 'பேர்த்து' என்றும், 'ஒடு' என்னும் சொல் 'ஓடு' என்றும், 'நீயிர்' என்னும் சொல் 'நீர்' என்றும், 'எவன்' என்னும் சொல் 'என்' என்றும், 'என்னை' என்றும், 'பொழுது' என்னும் சொல் 'போது' என்றும் திரியும்; 'யா' என்று தொடங்கும் சொல் 'ஆ' முதலாகவும் வரும் என்று நேமிநாதம் இந்நூற்பாவில் கூறியுள்ளது.
'ந்' என்பதும் 'ன்' என்பதும் ஒரேவிதமாக இன்றைய வழக்கில் உச்சரிக்கப்படுகின்றன என்பதை அறிவோம். அதே சமயத்தில் இன்று 'முந்நூறு', 'முன்னூறு' என்ற இருவிதச் சொல்லெழுத்தும் காணப்படுகின்றன. இவ்விரண்டு வகைச் சொல்லெழுத்தும் எவ்வாறு வழங்க ஆரம்பித்தன என்ற வரலாற்றினைப் பற்றி இங்குக் காண்போம். இவ்விரு சொற்களுக்கும் மூலம் 'மூன்று' என்பதாகும். இது ஒரு கட்டிலா மாற்றத்தின் (Free Variation) வடிவம். இது அடையாக வரும் போது முதலில் உள்ள நெட்டெழுத்துக் குறுகி வரும்.
எண்ணிறை .........................
முதல் ஈர்எண் முதல் நீளும் மூன்று ஆறு
ஏழ் குறுகும்....... (நன்னூல் - 188)இவ்வாறு குறுகி வரும் என்றால் அதன் அடி வடிவம் 'மு' ஆகும். தொல்காப்பியர் காலம் முதலே கிளைமொழியின் ஆதிக்கத்தால் 'மும்' என்று மாறியிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் இன்று 'முப்பது', ' மும்மை', 'முந்நூறு' எனப் பயன்படுத்திவருகிறோம். 'மூன்றின்' அடிப்படை வடிவம் 'மு' என்பதால் 'முன்னூறு' என்றும் சிலர் பயன்படுத்துகிறார்கள். எவ்வாறு எனில் நகரத்திற்கும், னகரத்திற்கும் அவ்வளவாகப் பேச்சு வழக்கில் வேறுபாடு காணமுடியாது. ஆகையால் 'முன்னூறு' என எழுதுகிறார்கள்.
இன்று படைக்கப்படும் சொற்கள்,
'நடத்துநர்'
'ஓட்டுநர்'
'இயக்குநர்'போன்றவை தொழில் பெயராக அமைகின்றன. எனவே, இங்கு 'நர்' என்ற விகுதி பெறும் தொழிற் பெயர் (Agentive) விகுதியாகப் பயன்படுகிறது.அவற்றோடு மட்டுமல்லாமல் ஒலி வேற்றுமை (Sound Change) இல்லாத காரணத்தாலும், னகரமாகப் பலராலும் எழுதப்படுகின்றது.
'நடத்துனர்'
'ஓட்டுனர்'
'இயக்குனர்'இங்கு இன்னொரு எழுத்து மரபையும் குறிப்பிட வேண்டியுள்ளது. வடமொழியில் னகர ஒலி (Dental Voiced Nasal Stop) இல்லாததால் அது போன்று அமைந்து வரும் சொற்களில் நகர ஒலி (Alveolar Voiced Nasal Stop) ஆக எழுதும் மரபு முன்பு அதிகமாக இருந்தது. அதுவும் இன்று 'ன' ஆகவே எழுதப்படுகிறது.
சான்று:
'ஆநந்தம் - ஆனந்தம்'
'அநுபவம் - அனுபவம்'
'விநாயகர் - வினாயகர்'ஆனால் இதிலும் ஒரு ஒழுங்கு ஏற்படவில்லை எனலாம். ஆயினும் 'ன' ஆக எழுதப்படுவதால் அதையே இன்றைய தமிழின் சொல்லெழுத்து முறை வளர்ச்சியில் ஏற்றுக் கொள்ளலாம்.
மற்றும் ஒரு சான்று - தொல்காப்பியர் காலத்தில் எண்ணாகிய 'ஏழ்' (Seven) என்ற சொல் புள்ளி எழுத்தாகிய மெய் எழுத்தை ஈறாகக் கொண்டு இருந்ததால் தொல்காப்பியர் இதனைப் 'புள்ளி மயங்கியலில்' சுட்டியுள்ளார்.
சான்று:
ஏழ்என் கிளவி உருபு இயல் நிலையும்
(தொல்.எழுத்து. 389)ஆனால் இதனை நன்னூலார் 'ஏழு' எனக் கொண்டு உகர இறுதியாகச் சொல்லி 'உயிரீற்றுப் புணரியலில்' சுட்டியுள்ளார்.
சான்று:
ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்றுயிர் மெய்யும் ஏழன் உயிரும்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்
(நன்னூல் எழுத்து - 188)எனவே, சொல்லெழுத்து மாற்றம் (Spelling Change) நடைபெற்றதன் விளைவே இந்த இடமாற்றம் எனலாம்.
இலக்கண நூல்கள் மட்டுமல்லாமல் இலக்கிய நூல்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் காலந்தோறும் பேச்சு மொழியில் ஏற்பட்ட மாற்றத்தால் சொல்லெழுத்துகளிலும் மாற்றம் ஏற்பட்டதைக் காணமுடிகிறது.
'நான்கு', 'ஐந்து' என்ற சொற்களின் வடிவங்களைத் தேவாரத்தில் 'நாலு', 'அஞ்சு' என்றே காணலாம்.
சான்று:
நாச்செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து
(தேவாரம் 4:69-6)ஆன் அஞ்சாகம் முடியான் (தேவாரம் 2: 6-5)
எனவே, இலக்கண மரபும் இலக்கிய மரபும் சொல்லெழுத்து மாறி வந்திருப்பதைக் காட்டுகின்றன. சொல்லெழுத்தின் மாற்றத்திற்கு மொழி அமைப்பில் - ஒலி அமைப்பில் - ஏற்படும் மாற்றமே முக்கியக் காரணம் என்று கூறலாம்.
'யானை' என்ற சொல் 'ஆனை' என்று மாறியதற்குச் சொல்லுக்கு முதலில் வந்த யகர மெய் கெட்ட ஒலி மாற்றத்தின் விளைவு. ஆனால் தொல்காப்பியர் காலத்திலும், சங்க காலத்திலும் 'நீயிர்' என்று இருந்த சொல் 'நீங்கள்' என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் மற்றொரு வடிவத்தைப் பெற்றதற்குக் கிளைமொழி மாற்றமே (Dialect change) காரணம்.
சான்று:
நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம்
அறிதலும் அறிதிரோ ............... (அகநானூறு 8.17-18)கட்டிராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா
(தேவாரம் 4:41-2)இன்றைய எழுத்துத் தமிழில் சொல்லெழுத்து எவ்வாறு மாற்றம் அடைந்து வருகின்றது என்பதனைச் சுட்ட மேலும் ஓரிரு சான்றுகளைக் காணலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டில் ஒரு சில சொற்கள் இருவிதமாக இரு வேறு காலங்களில் பயன்பட்டு வந்ததை நம்மால் இன்று காணமுடிகிறது. 'கள்' என்பது பன்மை விகுதியாகும். இதில் வரும் ககரம் ஒலிப்பிலா வல்லொலியாகச் (Voiceless Stop) சொற்களில் இன்று உச்சரிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இவ்வல்லினம் (ககரம்) இரட்டை வல்லினம் (Gemination) ஆக உச்சரிக்கப்பட்டது.
சான்று:
'எழுத்துக்கள்' (தொல். சொல்லதிகாரம். 8.1)
சில தமிழ் அறிஞர்கள் பேச்சில் ஒலிப்புடை ஒலியாக உச்சரிப்பதால் ஒற்றை வல்லெழுத்தால் எழுதுகிறார்கள்.
சான்று:
எழுத்துகள்
அமைப்புகள்சொல்லின் நடுவில் வல்லொலிகள் ஒலிப்புடை ஒலியாக உச்சரிக்கப்படுவதற்கு ஏற்ப ஒற்றை வல்லெழுத்தால் எழுதப்படுகின்றன.
சான்று:
பத்திரிகை
அண்ணாதுரைபலரும் இதுபோன்றே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சான்று:
'கருத்துகள்' (வையை முதல் மலர் - முன்னுரை) 'எழுத்துகள்' - (தமிழ் - முதல் வகுப்பு - 1978)