Primary tabs
-
6.1 தமிழ்மொழி வரலாற்றில் சொற்பொருள் மாற்றம் பெறுமிடம்
டார்வின் கோட்பாட்டின்படி பரிணாம வளர்ச்சி என்பது, பல்வேறு உலக உயிர்களின் காலவாரியான வளர்ச்சி எனலாம். இவ்வளர்ச்சியை விளக்கப் பயன்படுத்தப்பட்ட இக்கோட்பாடு, நாளடைவில் மொழியின் வளர்ச்சிக்கும் பயன்படும் என்பதை மொழியியல் ஆய்வு உணர்த்துகிறது.
உலக உயிரினம் பற்றிய ஒரு அறிவியல் கோட்பாடு, அறிவியல் முறையில் ஆராயப்படும் மொழிவளர்ச்சிக்கும் விரிவுபடுத்தப்பட்டது எனலாம். ஆரம்ப காலகட்டத்தில் மொழிமீது கொண்ட தெய்வ நம்பிக்கையால், வரலாற்று முறையில் மொழியை அணுகுவதற்கே அச்சப்பட்ட காலமும் இருந்து வந்தது. திராவிட மொழிகள் அனைத்தும், தமிழ்மொழியில் இருந்தே பிறந்தன எனவும் கருதி வந்தோம். இருப்பினும் கால்டுவெல் போன்ற மேலைநாட்டினரின் வருகையால், திராவிட மொழியிலிருந்து பிரிந்த முதல்மொழி தமிழ் என்பதும், அதையடுத்தே பிற திராவிட மொழிகள் பிரிந்தன என்பதும் அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டது எனலாம்.
தமிழ்மொழியில் உள்ள சொற்களும், அச்சொற்கள் உணர்த்தும் பொருட்களும் பலவிதமான மாற்றங்களை அடைந்து வந்துள்ளமையை நன்கு உணர முடிகின்றது. எடுத்துக்காட்டாக, ‘அறம்’ என்ற சொல், அறக்கடவுள், அற நூல், நீதிநூல் என்ற பொருள் எல்லையிலிருந்து, ‘சமயம்’ என்ற பொருள் எல்லைக்கு மாறிய நிலையைக் காணமுடிகிறது. இச்சொல், அடிப்படையில், நல்லொழுக்கம் என்ற பொருளைத் தந்து வந்தாலும் பிற்காலத்தில் சமயக் கோட்பாட்டின் அடிப்படையில் நல்லன எல்லாவற்றையும் குறிக்கும் ஒருசொல்லாக மாறியது.
சங்க இலக்கியமான புறநானூற்றில் ‘கோயில்’ எனும் சொல் ‘அரண்மனை’ எனும் பொருளைத் தர, தேவாரம், நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் எழுந்த கால கட்டத்திலும், இக்காலத்திலும் ‘இறைவனுடைய இருப்பிடம்’ எனும் பொருளைத் தருகிறது. முன்பு ‘கோயில்’ எனும் சொல் இருவகைப் பொருளைத் தர, தற்காலத் தமிழில் ஒரு பொருளையே தந்து நிற்பதைக் காண்கிறோம். இந்நிலையினை, உலகமொழிகள் அனைத்திலும் காணலாம். மொழி வரலாற்றிலும் வளர்ச்சியிலும் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகும். வரலாற்று மொழியியல் இவற்றை அடிப்படையாக வைத்துத் தோன்றியதாகும். ஒரு சொல்லின் பொருள் தொடக்கத்தில் ஒன்றாக இருந்திருக்க, இன்று ஒருவகையாக இருக்கும். ஒரு சொல்லுக்குத் தொடக்கத்தில் அமைந்த பொருளே இன்றுவரையில் வழங்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றைக் குறித்த ‘பொன்’ எனும் சொல், இன்று தங்கத்தை மட்டும் குறிக்கின்றது. எனவே, சொல் ஆரம்பத்தில் உணர்த்திய பொருள் ஒன்றாகவும், இன்று உணர்த்தும்பொருள் வேறாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
சொற்பொருள் மாற்றத்திற்கு மொழியியல் காரணங்கள், வரலாற்றுக் காரணங்கள், சமூகக் காரணங்கள், உளவியல் காரணங்கள், அயல்மொழிச் செல்வாக்கு போன்றன அடிப்படையாக அமைகின்றன.
இக்காரணங்களால் ஏற்படும் மாற்றத்தைத் தமிழ்மொழியில் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள், ஒரு பொருளுக்கு ஒரு சொல், உயர்பொருள் பேறு (Elevation), இழிபொருள்பேறு (Degradation), சிறப்புப் பொருள்பேறு (Restriction or narrowing), பொதுப்பொருள்பேறு (Expansion or widening), நுண்பொருள்பேறு (Abstraction), பருப்பொருள்பேறு Concretion), மென்பொருள்பேறு (Hyperbole), வன்பொருள்பேறு (Litotes), மங்கல வழக்கு (Meliorative tendency), இடக்கரடக்கல் (Pejorative tendency), குழூஉக்குறி (Slang), ஆகுபெயர் (Metonomy), உருவகம் (Metaphor) போன்ற பல்வேறு வகைகளாகப் பகுக்கலாம்.
சொற்களுக்குப் புதுப்பொருள் உண்டாவதைப் போலப் பொருளைக் குறிக்கப் புதுச்சொற்களும் ஆக்கப்படுகின்றன. பழைய சொற்கள் வழக்கு மிகுதியால் பல பொருட்களுக்கும் உரிமையாவதால், நுட்பமான கருத்துக்களை விளக்கப் புதுச்சொற்கள் தோன்றுகின்றன. மொழியியல் சொற்களுக்குப் புதுப்பொருள் தோன்றுவதைப் போல, புதுச்சொற்களும் புதுச் சொல்லமைப்புகளும் தோன்றுதல் மொழியில் இயல்பானதாகும். இத்தகைய சொற்பொருள் மாற்றங்களுக்குத் தமிழ்மொழி விதிவிலக்கல்ல.