Primary tabs
-
3.3 இலக்கியமும் வாழ்க்கையின் பரப்பும்
இலக்கியம் சித்தரிக்கின்ற வாழ்க்கை எத்தகைய பரப்புக் கொண்டது என்று இப்போது பார்ப்போம். காலம், இடம், பண்பாடு என்ற பல தளங்களில் இந்தப் பரப்பு அமைந்துள்ளது.
3.3.1 இலக்கியமும் காலப் பரப்பும்
இலக்கியம் சொல்லுகிற வாழ்க்கை, குறிப்பிட்ட காலம், இடம் ஆகிய அச்சுக்களை அல்லது தளங்களைக் கொண்டது. வாழ்க்கைச் சித்திரம், ஒரு கணநேரத்துச் சித்திரமாக இருந்தாலும், அந்தக் கணநேரம் என்பது கடந்த காலத்தின் ஒரு தொடர்ச்சி அல்லது ஒரு பகுதியேயாகும்; அதுபோல வருங் காலத்தின் ஒரு முன்கூறு அல்லது ஒரு பகுதியேயாகும். திறனாய்வாளன், இலக்கியம் சொல்லியிருக்கிற வாழ்க்கையை இவ்வாறுதான் ஒரு பரந்த தளத்தில் எடுத்துக் கொள்கிறான்.
ஒளவையார்உதாரணமாக, ஒளவையார், அதியமானைப் பற்றிப் பாடிய புறநானூற்றுப் பாடல்களைப் பற்றி எண்ணிப் பார்க்கலாம். அதியமானுடைய வாழ்க்கை, கொடைத்திறன், ஒளவையாரிடம் அவன் காட்டிய பரிவு முதலியவை, குறிப்பிட்ட ஒரு காலத்தினைச் சேர்ந்தவையென்றாலும், அந்தப் பாடல்கள் மூலமாகத் தெரியவரும் தமிழர்களின் கொடை உள்ளம், புலவர்கள் மேல்காட்டி வந்த அன்பு உள்ளம் முதலியவை தொன்றுதொட்டு வந்தவை; அதுபோல பின்னரும் இந்த உணர்வுகள், காலம்தோறும் பாராட்டப்பட்டு வருபவை. இதனையே திறனாய்வு கண்டறிந்து விளக்குகிறது; காலம் எனும் உரைகல்லில் வாழ்க்கையை உராய்ந்து பார்த்துப் புலப்படுத்துகிறது.
3.3.2 வாழ்க்கையும் இடமும்
கி. ராஜநாராயணன்
தி. ஜானகிராமன்எந்த வாழ்க்கையும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் அல்லது தொடர்ந்து பல இடங்களில் காலூன்றித்தான் இயங்குகிறது. எனவே அந்த இடம் அல்லது இடங்களின் பிரத்தியேகமான பண்புகள், அந்த வாழ்க்கையில் பிணைந்து கிடக்கின்றன. கி.ராஜநாராயணன் என்ற எழுத்தாளரின் புனைகதைகளில் கரிசல்காடு, களமாக அமைகிறது. ஆர்.ஷண்முகசுந்தரத்தின் புதினங்களில் கொங்குமண்டலம் களமாக அமைகிறது; தி.ஜானகிராமன் புதினங்களில் தஞ்சைத் தரணி களமாக அமைகிறது. எனவே இத்தகைய புனைகதைகளில், அந்த அந்த வட்டாரங்கள், இடங்கள் ஆகியவற்றின் சிறப்பியலான அம்சங்கேளாடு கூடிய வாழ்க்கையைக் காணமுடியும்.
ஆனால், வாழ்க்கை இவ்வாறு, குறிப்பிட்ட ஓர் இடத்தில் காலூன்றி யிருந்தாலும், எந்த இடமும் தனியாக இருப்பதில்லை. மாநிலம், நாடு என்ற பரந்த எல்லைகளின் ஒரு பகுதியாகவே ‘இடம்’ அமைந்திருக்கிறது. மேலும், இலக்கியம், அதன் பொதுமைத் தன்மை (Universality) மற்றும் கலைநேர்த்தி காரணமாக, இடத்தைப் பெரும் பரப்பின் ஒரு பண்பாக ஓர் அம்சமாக ஆக்கிவிடுகிறது. தமிழகத்து சிறிய கிராமத்து வாழ்க்கை இந்திய வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது.
3.3.3 வாழ்க்கையும் பண்பாடும்
பொருளாதாரம், அரசியல், சமூகம், பண்பாடு எனும் இவற்றைப் பொருளாகக் கொண்டது வாழ்க்கை. இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும் வாழ்க்கையில் இவை உள்ளார்த்தமாக இருக்கின்றன.
இலக்கியத்தை ஆராய்ந்து வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பகுத்து விளக்கும் பிரெஞ்சு நாட்டு அறிஞர் தெயின் (H.A.Taine), அத்தகைய இலக்கியத்தில் மூன்று பரிமாணங்கள் (Dimensions) இருப்பதாக விவரிக்கிறார்.
(அ)இனம் (Race): மக்களின், பாரம்பரியமாக வரும் / வெளிப்படும் தொகுப்பு.(ஆ)பண்பாட்டுச் சூழல் (Milieu): மனிதன் வாழ்நிலையில், இயற்கை முதற்கொண்டு, சமூக நிலைகள், அரசியல் நிறுவனங்கள் வரை பல சூழல்களின் ஓர் ஒட்டுமொத்தநிலை.(இ)காலத்தின் மனம் (moment): குறிப்பிட்ட இலக்கியம் தோன்றிய, மற்றும் அது சொல்லும் வாழ்க்குப் பின்புலமான காலத்தின், தேசத்தின் பொதுவான மனமும் உணர்வும்.எல்லாருடைய வாழ்க்கையிலும், வாழ்க்கையின் சிறு சிறு கூறுகளிலும், இந்த மூன்று பரிமாணங்களும் இருக்கின்றன என்று கூறுகிறார் தெயின். இலக்கியத்தில் காணக்கூடிய இந்த நிலைகளை திறனாய்வாளன் பகுத்து ஆராய்ந்து கூறுகிறான்.
மேலும், இலக்கியம் கூறும் பல்வேறுபட்ட வாழ்க்கையின் மூலம், அவ்வக்கால சமூக பண்பாடுகளை இனம் கண்டறிந்து, வகுத்தும் தொகுத்தும் திறனாய்வாளன் கூறலாம். இந்த முயற்சிகளில் பல தமிழ் அறிஞர்கள் ஈடுபட்டுத் தமிழ்ப்பண்பாடு பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்.