தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கியமும் வாழ்க்கையின் உறவுகளும்

  • 3.2 இலக்கியமும் வாழ்க்கையின் உறவுகளும்

        இலக்கியம் வாழ்க்கையும் நெருக்கம் கொண்டவை. ஆனால் இந்த ஒழுக்கம் எத்தகையது; உறவுகள் எத்தகையன என்று இனிமேல் பார்ப்போம்.

    3.2.1 பதிவும் பிரதிபலிப்பும்

        இலக்கியம், வாழ்க்கையைப் பதிவு செய்கிறது என்று ஒரு விவாதம். ‘மிகச் சிறந்த உள்ளங்களின் மிகச் சிறந்த பதிவேடுதான் உயர்ந்த இலக்கியம்’ என்று ஒரு கருத்து உள்ளது. பதிவு என்றால், வரலாற்றுப் பதிவு போன்றது என்றாகிவிடும். உண்மைகளை, தகவல்களை அப்படியே பதிவு செய்வது இலக்கியத்தில் சாத்தியமில்லை என்று இது மறுதலிக்கப்படுகிறது. இலக்கியத்தில், படைப்பாளியின் மனநிலைக்கும் உத்திமுறைக்கும் ஏற்ப, வாழ்க்கையின் ஒரு பகுதி பதிவாகியிருக்கிறது என்று சொல்லலாம்.

        இலக்கியம், வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு வாதம். ஆனால், பிரதிபலிப்பது என்றால் அப்படியே நேர்முகமாக (கண்ணாடியைப் போல) பிரதிபலிப்பது அல்ல. இலக்கியம், வாழ்க்கை எனும் இந்த இரண்டிற்கும் நடுவே படைப்பாளி இருக்கிறான். படைப்புப் பற்றிய கோட்பாடு இருக்கிறது. வாழ்க்கையிலிருந்து வரும் ஒளிக்கற்றை, படைப்பாளி படைப்புக் கோட்பாடு எனும் ஆடி (Lens) வழியாக வந்து இலக்கியப் பொருளாகிறது. நேரடியான புறவய உண்மை (external reality) எனும் வாழ்க்கை, படைப்பாளி படைப்புக்கோட்பாடு எனும் அகவய நிலைபெற்றுக் கலைவய உண்மையாக (artistic reality) இலக்கியத்தில் மாறுகிறது. இவ்வாறு தான் வாழ்க்கை, இலக்கியத்தில் பதிவாகிறது; பிரதிபலிக்கிறது என்று கொள்ள வேண்டும்.

    3.2.2 விளக்கமும் விமரிசனமும்

        ஆங்கில நாட்டின் புகழ்பெற்ற இலக்கியவாதி மாத்யூ ஆர்னால்ட், ‘இலக்கியம் என்பது வாழ்க்கை விமரிசனமே’ (Literature is the criticism of life) என்று கூறிச் சென்றார். சிலர், இலக்கியம் என்பது வாழ்க்கையைப் புலப்படுத்துவது (Expression of life) என்றனர்; இன்னும் சிலர் இலக்கியம் வாழ்க்கையை விளக்குவது (Interpretation of life) என்றனர்.

        வாழ்க்கையை அப்படியே சித்தரிப்பது இலக்கியமல்ல; அதன் அனுபவங்களையும் அர்த்தங்களையும் சொல்லுவதுதான் இலக்கியம். எனவே வாழ்க்கையை வெறுமனே,வருணிக்காமல் அதன் பல்வேறு கோணங்களையும் உள்மடிப்புகளையும், காரண காரியங்கேளாடு உணர்ந்து விளக்க வேண்டும். உதாரணமாகத் தி.ஞானசேகரனின் குருதிமலை என்ற புதினம். இது, இலங்கைத் தேயிலைத் தோட்ட (இந்தியவமிசா வழி) தொழிலாளர்களின் வாழ்க்கை அவலங்களை நடப்பியலாக விளக்குகிறது. அவர்கள் படுகிற பாடுகளின் பல தன்மைகளையும் அவற்றிற்குக்     காரணமான     சமுதாய     பொருளாதாரப் பின்புலங்களையும் முரண்பாடுகளையும் விளக்கிச் செல்கிறது.

            

        ஆ.வேலுப்பிள்ளையின் இனிப் படமாட்டேன் என்ற புதினம் - இது இலங்கையிலுள்ள இந்திய வமிசா வழித் தமிழர்களின் வாழ்க்கையையும், இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்ற ஊசலாட்ட எண்ணங்களையும், இந்தியாவுக்கு வந்து மீண்டும் குடியேறுவதில் ஏற்படும் அவலங்களையும் விமரிசனம் செய்கிறது. வாழ்க்கை பற்றிய இந்த விமரிசனப் பார்வைதான் ‘இனிப் படமாட்டேன்’ என்ற ஒரு முடிவுக்கு வரச் செய்கிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    திறனாய்வு, இலக்கியம் மீது அக்கறை கொள்வதற்குரிய முக்கிய காரணம் என்ன?

    2.

    திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு, எந்த முனையில் அல்லது எந்தக் கோணத்தில் இருக்கிறது?

    3.

    படைப்புக்குரிய படைப்பாளி பெறுகிற உந்துதல்கள்யாவை?

    4.

    இலக்கியம், வாழ்க்கையை அப்படியே சித்தரிக்கிறதா? அதனுடைய வாழ்க்கையனுபவம்எத்தகையது?

    5.

    வாழ்க்கையின் நேரடியான உண்மைகள், இலக்கியத்தில் என்னவாக ஆகின்றன?

புதுப்பிக்கபட்ட நாள் : 16-11-2019 18:22:39(இந்திய நேரம்)